Published:Updated:

பேல்பூரி விற்பனை... பார்ட் டைமாக இங்கிலீஷ் டியூஷன்... கலக்கும் கதிரவன்!

பேல்பூரி விற்பனை...  பார்ட் டைமாக இங்கிலீஷ் டியூஷன்... கலக்கும் கதிரவன்!
பேல்பூரி விற்பனை... பார்ட் டைமாக இங்கிலீஷ் டியூஷன்... கலக்கும் கதிரவன்!

நெத்து நெத்தான கடலை, நாவில் நர்த்தனமிடக் காத்திருக்கும் பொரி - பூந்திக் கலவை, மணக்கும் மல்லித்தழை, வாயில் போட்டவுடன் சுள்ளெனச் சிலிர்க்கவைக்கும் உப்பு-மிளகாய்த்தூள் என  `மெட்ராஸ் பேல்பூரி'  எனும் உணவுக்கலவையை தள்ளுவண்டியில் வைத்திருந்தார் ஒருவர். அவரிடம் ஃபாரினர் ஒருவர் ஏதோ முகவரி கேட்க, ஆங்கிலத்தில் அந்த முகவரியை அவருக்கு விளக்கினார். தள்ளுவண்டியில் பொரிகடலை விற்பனை செய்தாலும், தடுமாற்றமில்லா ஆங்கில உச்சரிப்பைக் கண்டு அசந்துபோனேன். ஆச்சர்யத்தை வெளிக்காட்டாமல், ``ஒரு பத்து ரூபாய்க்கு மசாலா பொரி கொடுங்கண்ணே'' என்று அவரைப் பற்றி அறிந்துகொள்ள அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

``அது ஆங்கிலப் புத்தகம்போல இருக்கு... பக்கங்களெல்லாம் பளபளன்னு மின்னுதே!'' 

``இந்த புக்ல வரக்கூடிய ஒவ்வொரு கட்டுரையும் வியாபாரத்தைப் பத்தியும் ஆன்டர்ப்ர்னார்ஷிப் (entrepreneurship) பத்தியும்தான் இருக்கும். அந்த தொழிலதிபர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறினாங்க, எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையையெல்லாம் கடந்து வந்தாங்க, மனரீதியில அவங்க அதை எப்படி அணுகினாங்க...னு நம்மல ஊக்கப்படுத்துற கட்டுரைகளைப் படிக்கப் படிக்க மனசுக்கு தெம்பா இருக்கும்.''

``அதுசரி... உங்களுக்கு இங்கிலீஷ் எப்படி..?'' எனத் தயக்கத்துடன் கேட்டதுதான் தாமதம்,

``ஏன், நாங்கெல்லாம் இங்கிலீஷ் படிக்கக் கூடாதா... இல்லை எங்களுக்குதான் இங்கிலீஷ் வராதா? சார், நான் படிச்சது +2 வரைக்கும்தான். ஆனா, ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கிறவங்களே என் இங்கிலீஷுக்கு பதில் சொல்ல முடியாது. படிப்பு கம்மின்னாலும், வாழ்ந்த சூழ்நிலை அப்படி!'' என்றுதான் இதுவரை கடந்துவந்த காலத் தடத்தில் என்னையும் அழைத்துச் சென்றார்.

``நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே தரமணி எஸ்.ஆர்.பி டூல்ஸ் ஏரியாவுலதான். இங்க இருக்கிற ஒய்.எம்.சி.ஏ - சத்திய நிலையத்துல, ஸ்கூல் பசங்களையெல்லாம் சேர்த்து அவங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து, சாப்பாடும் போடுவாங்க. அப்பாவுக்கு லேத் பட்டறையில வேலை. அம்மாவுக்கு பங்களா வீட்ல வேலை. அப்பாவோட குடிப்பழக்கத்தால் வீட்டு அமைதி போனதோடு, ஒருநாள் அப்பாவே போயிட்டார். வாழ்க்கையில வளர்ச்சி இல்லாம இருக்கலாம்... ஆனா, எப்பவுமே வறட்சி இருக்கக் கூடாது. அப்பாவோட அட்டூழியம், அன்றாட வயித்துப் பசிக்கான ஓட்டம், வாழ்வாதாரத்தைத் தேடி வெறும் வேதனைகளைத் தாங்கித் தாங்கி டெய்லி மனசுக்குள்ளேயே வெந்துபோன என் அம்மா, வீட்ல ஏற்பட்ட தீவிபத்துல இறந்துட்டாங்க. அப்போ எனக்கு 12 வயசு.

போக்கெடமும் பொழைக்க வழியும் தெரியாம தெருவுல நின்னப்போ, என்னைக் கூட்டிக்கிட்டுப்போய் வயித்தை நிரப்பி, நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து +2 வரைக்கும் படிக்க வைச்சு, என்னையும் ஒரு மனுஷனா உருவாக்கினது அந்தச் சத்திய நிலையம்தான். அங்க படிச்ச படிப்பைவெச்சு, என்னைத் தேடி வர்ற பசங்களுக்கு ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கிறேன். கல்வி சொல்லிக்கொடுத்து என்னை ஆளாக்கினா மாதிரி, நானும் ஏதோ என்னால முடிஞ்சதைச் செய்றேன்'' என்று கூறியவர் பொரிகடலை வியாபாரம் செய்வதன் பின்னணியை விளக்கினார்.

``காலம், யாரைத்தான் சும்மா விட்டிருக்கு? ஸ்கூலுக்குப் போறது, சத்திய நிலையத்துல இருக்கும் சில வேலைகளை செய்றது, லீவு நாள்ல அங்க வரும் பசங்களுக்கு ஃபாதர், சிஸ்டர்ஸோடு சேர்ந்து எனக்குத் தெரிஞ்சதையும் சொல்லிக்கொடுக்கிறதுன்னு இருந்தேன். அந்த வயசுல வரக்கூடிய எதிர் பாலின ஈர்ப்பு என்னையும் விட்டுவைக்கலை. ஒரு பொண்ணு ஆசை ஆசையா என்னைக் காதலிச்சது. அந்த ஜோர்ல சத்திய நிலையத்துல செய்யவேண்டிய எந்த வேலையையும் சரியாச் செய்யாம, ஸ்கூலுக்கும் சரியாப் போகாம, அவ பின்னாடியே சுத்தினேன். ஃபாதர் எனக்கு எவ்வளாவோ புத்திமதி சொன்னார். அது எதையுமே கேட்காததுனால, அங்கே இருந்து என்னை வெளியே அனுப்பிட்டாங்க.

அவதான் என் வாழ்க்கை, உலகம்னு நினைச்சு, காலையில பேப்பர் போடுறது, ஹோட்டல்ல சர்வர் வேலை பார்க்கிறதுன்னு முடிஞ்ச வரைக்கும் சம்பாதிச்சு, என்னால எவ்வளவு செலவு பண்ண முடியுமோ அதையெல்லாம் மீறி செலவு பண்ணி, அவளை சந்தோஷமா வெச்சுக்கிட்டேன். இதுக்காக நான் அவளை எந்த நிலையிலயும் தப்பா அணுகினதேயில்லை. அப்புறமாதான், அவ என்னைக் காதலிக்க மட்டும்தான் செஞ்சிருக்கான்னு தெரிஞ்சுது. அதை என்னால தாங்கிக்க முடியலை. அப்பவே என் வாழ்க்கையை முடிச்சுக்க ட்ரை பண்ணப்போ, சத்திய நிலையத்துல இருந்து மணி சத்தம் கேட்டுச்சு.  சரின்னு மனசு மாறி, சில பல வேலையைப் பார்த்து, கடைசியா ஒரு கம்பெனியில் அட்டெண்டர் வேலையில சேர்ந்தேன்.

தனியா இருந்த என்கிட்ட, செலவெல்லாம் போக கையில் நிறைய காசு சேர்ந்துச்சு. வண்டிதான், வசதிதான், வாழ்க்கைதான்... அப்ப என்னைச் சுத்தி ஃப்ரெண்ட்ஸ்னு சொல்ற நாலு பேர் எப்பவும் இருப்பாங்க. அவங்க எல்லாருமே நமக்காகத்தான் என்கூட இருக்காங்கன்னு நினைச்சேன். ஒருகட்டத்துல, நான் வேலை செய்த இடத்துல தேவையில்லாம என்மேல பழி சுமத்தி, வேலையைவிட்டு தூக்கிட்டாங்க. கையில் இருந்த காசை வெச்சு, ஃப்ரெண்ட்கூட சேர்ந்து சாப்பாடுக் கடை ஆரம்பிச்சேன். நல்லாதான் போச்சு. அவன்கிட்டயே எல்லா பொறுப்பையும் ஒப்படைச்சுட்டு, அந்தக் கடையில் ஒரு சர்வர் மாதிரி வேலைபார்த்தேன். காரணம், மத்தவங்ககிட்ட கை கட்டி வேலைபார்த்த எனக்கு, என் கையால மத்தவங்களுக்குச் சாப்பாடு போடும்போது கிடைக்கிற திருப்தி... அதையெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது, அனுபவிச்சாதான் தெரியும்.

ஒருநாள், கல்லாவுல இருந்த காசு, பேங்கல இருந்த பணம், நாங்க வழக்கமாப் பொருள் வாங்குற இடத்துல இருந்து ஒரு தொகைன்னு 75,000 ரூபாய் வரைக்கும் எடுத்துக்கிட்டு அந்த ஃப்ரெண்டு ஓடிட்டான். அவன் எங்க இருக்கான், என்ன பண்றான்னு இதுவரைக்கும் தெரியலை. அதுக்கு அப்புறம் அந்தச் சாப்பாட்டுக் கடையை நான் எடுத்து நடத்தினேன். ஆனா, சரியா ஓடலை. ஒண்ணரை லட்சம் ரூபாய் கடனை அடைச்சுட்டு, இதோ இந்தப் பொரிக்கடலை வண்டியோடு என் வாழ்க்கையையும் தள்ளிக்கிட்டிருக்கேன்.

ஞாயித்துக்கிழமை ஆனா, வீட்டான்ட இருக்கும் பசங்களுக்கு மத்தியானம் 3 மணியில இருந்து நைட் 8 மணி வரைக்கும் இங்கிலீஷ் கத்துக்கொடுக்கிறேன். இதுல என்ன ஒரு நல்ல விஷயம்னா, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. என்னால மத்தவங்க கஷ்டப்படுறதை நான் விரும்ப மாட்டேன். இன்னிக்கு இந்த வண்டியும் என் உழைப்பும்தான் எனக்கான பலம், வாழ்க்கை, எதிர்காலம் எல்லாமே'' என்றவரிடம் ஒருவர் வந்து ``ஒரு பேல்பூரி'' என ஆர்டர் செய்ய, அதைக் கேட்டதும் கதிரவனின் கைகள் அதிரடியாகச் செயலாற்றத் தொடங்கின.  

அடடே என்னே ஒரு வேகம்! ஆங்காங்கே இருந்த உணவு வகைகளை ஒரு பாத்திரத்தில் ஒட்டுமொத்தமாகப் போட்டு, சிலபல சுழற்றுகள் சுழற்றி, கோன் வடிவில் சுருட்டப்பட்ட ஒரு காகிதத்தில் கொட்டி, `` சார், ரெடி!'' என்றபடி கொடுத்துவிட்டு, அவர் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்தம்கொண்டார் கதிரவன்.

காசுக்குத்தான் என்றாலும், பெறுவதைவிட கொடுப்பதில்தான் அதிக ஆனந்தம் இருப்பதை நானும் உணர்ந்தேன்!