Published:Updated:

ஶ்ரீஅரவிந்தரிடம் ஞானம்... ஶ்ரீரமண மகரிஷியிடம் தவம்... சுவாமி ராமதாஸரிடம் மந்திரோபதேசம்! #யோகி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஶ்ரீஅரவிந்தரிடம் ஞானம்... ஶ்ரீரமண மகரிஷியிடம் தவம்... சுவாமி ராமதாஸரிடம் மந்திரோபதேசம்!  #யோகி
ஶ்ரீஅரவிந்தரிடம் ஞானம்... ஶ்ரீரமண மகரிஷியிடம் தவம்... சுவாமி ராமதாஸரிடம் மந்திரோபதேசம்! #யோகி

கடவுளின் அவதாரம் என்று போற்றிக்கொள்ளும் போலிச் சாமியார்களுக்கு மத்தியில் ‘நான் ஒரு பிச்சைக்காரன்...’   ‘நான் ஒரு பைத்தியக்காரன்...’ என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட மகா யோகி ராம்சுரத்குமார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஞாலமெலாம் புகழ்ந்தேத்தும் விமலன், யார்க்கும் 
நல்லோனாம் ராம்சுரத் குமாராம் யோகி,
பாவனைப் போல் எந்நாளும் இருக்கும் ஐயன்
பக்தர்களுக்கு அருள்செய்து வாழ்கின்றானே..." 
 

என்று போற்றுவார் தமிழறிஞரான கி.வா.ஜகந்நாதன். இந்தப் போற்றுதலுக்கு உரியவர் யோகி ராம்சுரத்குமார். 'விசிறி சாமியார்' என்று அன்போடு, அனைவராலும் அழைக்கப்படுபவர் யோகி ராம்சுரத் குமார். தன்னைக் கடவுள் என்றும், கடவுளின் அவதாரம் என்று போற்றிக்கொள்ளும் போலிச் சாமியார்களுக்கு மத்தியில் ‘நான் ஒரு பிச்சைக்காரன்...’   ‘நான் ஒரு பைத்தியக்காரன்...’ என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட மகா யோகி ராம்சுரத்குமார். 

யோகி ராம்சுரத்குமாரை யாராவது வணங்கினால் கூட ‘என் தந்தை உன்னை ஆசீர்வதித்துக் காப்பார்..’ என்று கடவுளின் பெயரால்தான் ஆசீர்வதித்து ஆட்கொள்வார். கடைசி வரை தன்னை ஒரு யாசகனாகவே நினைத்துக்கொண்டவர். மெய்ஞ்ஞானத்தின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவர் அவர். அன்பின் வழியாகவும், பரிவின் மூலமாகவும் இறைவனைக் கண்ட பிச்சைக்கார சாமியார் என்று அழைக்கப்படும் விசிறி சாமியாருக்கு இன்று நூறாவது ஜயந்தி தினம்.

யோகி ராம்சுரத்குமாரை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் மிகப் பலர். அவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் பாலகுமாரன். எப்போது அவர் யோகியைப் பற்றிக் கூற நேர்ந்தாலும் யோகியைச் சந்தித்த முதல் அனுபவத்தைப் பற்றித்தான் அவர் பகிர்ந்துகொள்வார்...

`கடவுளைக் காட்டவேண்டும் என்று நான் கேட்டபோது அவர் என் பிடரியைத் தடவி அணைத்துக்கொண்டார். எனக்குள் படர்ந்திருந்த அன்பு இறுக்கமாயிற்று. முதுகிலிருந்து பீறிட்டு எழுந்த சக்தி என் மார்பைத் தாக்கியது. உள்ளுக்குள் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அறுகோண முக்கோணங்கள் தெரிந்தன. எழுத்துகள் பல தோன்றி மறைந்தன. அதைப் பிளந்து இன்னும் முன்னேறி நீல மயமாக மாறியது. நான் எனக்குள்ளே வேறு இடங்களை நோக்கி வெகு வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். உடம்பு அதே இடத்தில்தான் இருந்தது. ஆனால், மனம் மட்டும் அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்தது’ என்று சிலிர்ப்புடனும் நெகிழ்ச்சியுடனும் குறிப்பிடுவார் பாலகுமாரன். 

யோகி ராம்சுரத்குமாரின் ஞானத்துக்கும், அருள்சக்திக்கும் பாலகுமாரனின் இந்த அனுபவம் ஓர் உதாரணம்தான். அவரால்  வாழ்க்கையில் உச்சம் தொட்டவர்கள் பலர்.

தான் யார் என்பதை அறிந்ததாலோ என்னவோ, அவருடைய முகத்தில் எப்போதுமே புன்னகை தவழ்ந்துகொண்டிருக்கும். முகத்தை மறைக்கும் வெண்ணிற தாடி, வெப்பத்தைத் தணிக்க அவரின் கையில் எப்போதுமே ஒரு விசிறி, உணவைப் பெறுவதற்கு ஒரு கொட்டாங்கச்சி, கையில் சிறு கோல்... இவை மட்டுமே அவருடைய உடைமை. அவரது தோற்றம் இப்படித்தான் இருக்கும். பிச்சைக்காரனுக்கே உரிய தோற்றம்தான் அது. இந்தப் பிச்சைக்காரத் தோற்றத்தில்தான் சிலருக்கு உன்மத்தம் கொண்டவராகவும், சிலருக்குப் புரிந்துகொள்ள முடியாத புதிராகவும், வேறு சிலருக்கு மனிதகுல நெறிகளைக் கடந்த மகானாகவும் காட்சி அளித்தார்.  

அறியாதவர்களுக்கு முரண்பாடுகளின் மொத்த உருவம். அறிந்தவர்களுக்கோ முரண்பாடுகளைக் கடந்த பூரண ஞானச் சுடர் அவர்!

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசிக்கு அருகே கங்கைக் கரையோரம் நரதரா எனும் சிறு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் ராம்சுரத் குன்வர். வளரும்போதே தெய்வ பக்தி உடையவராக வளர்ந்தவன். பிறந்தது முதலே ராம்சுரத் குன்வருக்கு கங்கை நதியையும், அங்கு வந்து செல்லும் துறவிகளையும் பிடித்துப் போயிருந்தது. ஒருமுறை கிணற்றின் மீது அமர்ந்திருந்த பறவையின் மீது கயிற்றை வீசினான். அப்போது அந்தப் பறவை எதிர்பாராத விதமாகக் கயிற்றில் சிக்கி இறந்துபோனது. அந்தப் பறவையின் உடலைக் கங்கைக் கரைக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்து மிகவும் வருத்தப்பட்டான். மற்ற உயிர்கள் மீது ராம்சுரத் குன்வருக்குப் பரிவு அதிகமாக ஏற்படக் காரணமாக அமைந்த நிகழ்வு அதுதான். அதன் பிறகுதான் சிறுவனான ராம்சுரத் குன்வருக்கு ஆன்மிகத்தின் மீது அதிகளவு நாட்டம் ஏற்பட்டது. துறவிகளுடனே அதிக நேரம் செலவழிப்பான்.


வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்த நிலையில், ராம்சுரத் குன்வருக்கு ஆன்மிக  நாட்டமும் வளர்ந்தபடி இருந்தது. காசிக்குச் சென்று சுற்றத் தொடங்கினார். அங்கேதான் அவருக்கு ஆன்மிகம் பற்றியும் வாழ்க்கை பற்றியும் ஒரு புரிதல் ஏற்பட்டது. எதன் மீதும் பற்றில்லாமல் இருப்பதைக் கண்ட அவருடைய பெற்றோர், அவருக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட வேண்டி திருமணம் செய்து வைத்தனர். அதன்  பிறகு சிறிது காலம் ஆசிரியர் பணிக்குச் சென்றுகொண்டிருந்தார். இல்லற வாழ்க்கையும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது. அதன் பயனாக ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு, 'அமிதாப்' என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயருக்கு, 'புத்தரின் மகன்' என்று பொருள். புத்தர் மீது கொண்ட பற்றுதலால் இந்தப் பெயரைத் தன் மகனுக்குச் சூட்டினார் ராம்சுரத் குன்வர். திருமணமாகி ஒரு பிள்ளை பிறந்த பிறகும்கூட ராம்சுரத் குன்வரின் மனம் என்னவோ நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டுதான் இருந்தது.

இந்த நிலையில்தான் கங்கைக் கரையில் வசித்த துறவியான கபாடியா பாபா, புதுச்சேரியில் வசிக்கும் அரவிந்தர், திருவண்ணாமலையில் வசிக்கும் ரமண மகரிஷி ஆகியோரைச் சந்திக்குமாறு அறிவுறுத்தினார். ’குரு ஒருவரின் துணையின்றி கடவுளை உன்னால் அறிய முடியாது’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

திடீரென்று தனது வீட்டிலிருந்து மாயமான ராம்சுரத் குன்வர் தனது குருவைத் தேடி திருவண்ணாமலை வந்தார். ரமண மகரிஷியை தரிசித்தார். பிறகு பாண்டிச்சேரி சென்றார். அங்கு அரவிந்தரைச் சந்தித்தார். அதன் பிறகு கேரளா சென்றார். அங்கு பப்பா ராமதாஸ் என்பவரைச் சந்தித்தார். அவரிடமிருந்து பக்தி நெறியையும், ‘ ஓம் ஶ்ரீ ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்’ எனும் மந்திர உபதேசத்தையும் பெற்றுக்கொண்டார். 

ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி ராமதாஸரிடமிருந்து பக்திநெறியையும் கேட்டுத் தெளிந்தபிறகுதான் ராம்சுரத் குன்வர், யோகி ராம்சுரத் குமாராக மாற்றமடைந்தார். சொந்த ஊருக்குத் திரும்பினார். எப்போதும் ராம மந்திரத்தையே உச்சரித்துக்கொண்டிருந்தார். சொந்த ஊரில் அவரைப் பைத்தியக்காரன் என்று தூற்றத் தொடங்கினார்கள் உறவினர்கள். அங்கிருந்து மீண்டும் திருவண்ணாமலை எனும் புண்ணிய பூமிக்கே வந்து சேர்ந்தார். அங்கு ஒரு புன்னை மரத்தடியில் தங்கி சதா காலமும் ராம நாமத்தை உச்சரித்தபடி வாழ்ந்தார். தன்னை நாடி வந்த பலருடைய துயரங்களைப் போக்கினார். பலருடைய வாழ்வில் ஆன்மிக ஒளி காட்டிய யோகி ராம்சுரத்குமார் 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி தனது 82 வது வயதில் முக்தி அடைந்தார். 

இன்று  யோகி ராம்சுரத்குமார் அவதார தினம். அந்த மகானை மனதாரப் போற்றி வழிபடுவோம்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு