Published:Updated:

துணி நாப்கின் மண்ணுக்கும் கெடுதல் தராது; பெண்ணுக்கும் கெடுதல் செய்யாது'' - இயற்கை மருத்துவர் அபிராமி

இந்த துணி நாப்கினை துவைத்து, வெயிலில் காயவைத்து 2 வருஷம்வரை பயன்படுத்தலாம்

துணி நாப்கின் மண்ணுக்கும் கெடுதல் தராது; பெண்ணுக்கும் கெடுதல் செய்யாது'' - இயற்கை மருத்துவர் அபிராமி
துணி நாப்கின் மண்ணுக்கும் கெடுதல் தராது; பெண்ணுக்கும் கெடுதல் செய்யாது'' - இயற்கை மருத்துவர் அபிராமி

தொடர்ச்சியான நாப்கின் பயன்பாட்டால் கர்ப்பப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாகும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்க, நாப்கினுக்கு மாற்றாக மென்ஸ்ட்ரூவல் கப் களத்தில் இறங்கியது. எனினும் மென்ஸ்ட்ரூவல் கப்பை கையாள்வதில் நிறையச் சிக்கல்கள் இருப்பதால் நாப்கின்கள் பெண்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த இயற்கை மருத்துவரான அபிராமி சமுதாய நோக்கில் உருவாக்கியுள்ள துணி நாப்கின்கள் பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அபிராமியிடம் பேசினேன்.

"மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உடலளவிலும் மனதளவிலும் சோர்வு நிலையை அடைவார்கள். இந்தச்  சூழலில், டயாக்சின் போன்ற ரசாயனம்  நிறைந்த நாப்கின்களைப் பயன்படுத்தும்போது அரிப்பு, அலர்ஜி, பிறப்புறுப்பு எரிச்சல் போன்றவை ஏற்பட்டு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வலிகளையெல்லாம் ஒரு பெண்ணாக இருந்து நானும் அனுபவித்தது உண்டு. அந்த வலியும் வேதனையும்தான் இந்தத் துணி நாப்கின் பாதைக்கு அடிப்படை என்றும் சொல்லலாம்" என நாப்கினுக்கு மாற்றாக தான் துணி நாப்கினைப் பார்க்க ஆரம்பித்ததைப் பேசினார்.

''எனக்குச் சொந்த ஊர் சிவகாசி. பட்டாசு தொழிற்சாலையில் இருந்து பேப்பர் தொழிற்சாலை வரை எங்க ஊருல ஆண்களுக்கு நிகரா பெண்களும் காலையில வேலைக்குக் கிளம்பிடுவாங்க. ஆனா, பொண்ணுங்க அவங்க உடநலனில் எந்த அக்கறையும் காட்டமாட்டாங்க. பழைய சோறு, வத்தலை தூக்குச்சட்டியில எடுத்துக்கிட்டு, 'தலைக்கு ஊத்திக்கிட்டேன், வயிறு வலிக்குது, ஆனா பொழைப்பைப் பார்க்கணும்ல'னு அவங்க கூடையைத் தூக்கிட்டு வேலைக்குப் போகும் காட்சி துயரமானது.

இந்த வலிகளைப் பார்த்து வளர்ந்த நான், ப்ளஸ் டூ படிக்கும்போதே எதிர்காலத்தில் பெண்கள் நலன் சார்ந்த விஷயத்துக்காகத்தான் செயல்படணும்னு முடிவெடுத்தேன். ப்ளஸ் டூ முடிச்சதும் கர்நாடக மாநிலம் மங்களூரில் இயற்கை மருத்துவம், யோகா சார்ந்த படிப்புகளைப் படிச்சேன். படிக்கும்போதே பெண்களுக்கான யோகப்பயிற்சி, இயற்கை மருத்துவம் போன்றவற்றில் நிறைய ஆய்வுகள் மேற்கொண்டேன். படிப்பு முடிந்ததும் எங்க ஊர்ப் பெண்களுக்கு யோகா பயிற்சிகளைச் சொல்லிக்கொடுத்தேன். பின்னர் திருமணம், குழந்தைகள்னு சின்ன பிரேக்.

என் கணவருக்குப் பணி கேரளாவில்  என்பதால் இங்கேயே செட்டில் ஆகிட்டோம். கேரளாவில்  உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனையில்  இயற்கை மருத்துவராகப்  பணிக்குச் சேர்ந்தேன். எங்க மருத்துவமனையின் மூலமாக கர்ப்பப்பை  புற்றுநோய் சார்ந்த விழிப்பு உணர்வு நிகழ்வுகள் பலவற்றை பள்ளி, கல்லூரிகள், பெண்கள் நிறைந்த இடங்களில் நடத்தினோம். கர்ப்பப்பை  புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று அதிகப்படியான உதிரப்போக்கு. இந்த உதிரப்போக்கின் அளவையும், புற்றுநோய்க்கான அறிகுறிகளையும் புரிய வைப்பதிலேயே நிறையச்  சிக்கல் இருந்தது. மாதவிடாய் பற்றிய கல்வி பெண்களுக்குத் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தோம். எனவே, மாதவிடாய் சார்ந்த ஏ டு இஸட் தகவல்களைப்  பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விளக்கினோம். அதற்காகவே மாதவிடாய் சார்ந்த தகவல்களைத் தேடித் தேடி கத்துக்க ஆரம்பிச்சேன்.

ஒரு பெண் தன் வாழ்நாளில் 130 கிலோ நாப்கின்களை சராசரியாக பயன்படுத்துறா. ஒரு நாப்கின் மண்ணில் மக்குவதற்கு 500 வருடங்களுக்கு மேல்  ஆகும். நாப்கின்களை எரித்தால் அதிலிருந்து வரும் விஷவாயு காற்றில்  கலந்து மாசுபாட்டை ஏற்படுத்தும். கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் குழந்தையின்மைக்கும் அதிகப்படியான காரணமாக அமைவது இந்த நாப்கின்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால, துணி நாப்கின் தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கினேன்.

துணி நாப்கின் தொடர்பாக பெண்களிடம் பேசியபோது, அது உடனே ஈரத்தன்மை அடைந்துவிடும் என்பதால்தான் அதைப்  பயன்படுத்துறதில்லைன்னு சொன்னாங்க. எனவே, துணி நாப்கின் செய்வதற்கு பக்க விளைவுகள் இல்லாத காட்டன் ஃப்ளேனல் பாலியூரித்தேன் லேமினேட் லேயர்கொண்ட மெட்டீரியலை தேர்வு செய்து நானே சில நாப்கின்கள் தயார் செய்து தெரிந்த சில பெண்களிடம் கொடுத்து பயன்படுத்தப் பரிந்துரைத்தேன். நல்ல ரிசல்ட் வரவே நிறைய மக்கள் என்னுடைய துணி நாப்கினை நாட ஆரம்பிச்சாங்க. லாபநோக்கம் பார்க்காம,  மெட்டீரியலுக்கான தொகை மற்றும் தயார் செய்து கொடுக்கும் பெண்களுக்கான கூலியை நாப்கினுக்கான விலையாக நிர்ணயித்தேன். இப்போ  நாப்கின் தயாரிக்கும் யூனிட்டில் ஐந்து பெண்கள் வேலைபார்க்கிறாங்க. பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்பான்ஸ்சர் பெற்று இலவசமாகவும், குறைந்த விலையிலும் நாப்கின் வழங்குகிறோம். இந்தத்  துணி நாப்கினை ஒவ்வொரு முறை  பயன்படுத்திய பிறகும் துவைத்து வெயிலில் காயவைத்து  ரெண்டு வருஷம்வரை பயன்படுத்தலாம். பெண்கள் உடல் நலனிலும் சுற்றுச்சூழலிலும் அக்கறைகொண்ட, கெமிக்கல் இல்லாத இந்த நாப்கின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. அதுவே எங்களுக்கு பூஸ்ட். ஹேப்பி பீரியட்ஸ்!''