Published:Updated:

கார் ஓட்டப் பழகுவதற்கு முன் கார் வாங்கினால்?

கார் ஓட்டப் பழகுவதற்கு முன் கார் வாங்கினால்?
பிரீமியம் ஸ்டோரி
News
கார் ஓட்டப் பழகுவதற்கு முன் கார் வாங்கினால்?

கார் வாங்குவது எப்படி? - 9 - தொடர்

மிடில் க்ளாஸ் நண்பர் ஒருவருக்கு, வாழ்நாளில் எப்படியாவது புது கார் வாங்கிவிட வேண்டும் என்பதுதான் லட்சியம். உறவினர்கள், நண்பர்கள் என தன்னைச் சுற்றி எல்லோரும் காரில் வலம் வந்ததால் ஏற்பட்ட லட்சியம் இது. வெகுநாளாகச் சேர்த்துவைத்த பணத்தில் இனிஷியல் பேமென்ட் செய்து, மாதத் தவணையில் ஒரு ஹோண்டா பெட்ரோல் காரும் வாங்கிவிட்டார்.

கார் ஓட்டப் பழகுவதற்கு முன் கார் வாங்கினால்?

ஒரே மாதம்தான். காரில் பெரிய டெண்ட்! ஹெட்லைட் உடைந்து, கதவைத் திறக்க முடியவில்லை. பேருந்து ஒன்றை ஓவர்டேக் செய்யப்போய்... பெரிய விபத்தெல்லாம் இல்லை. ஆனால், காருக்குப் பெரிய சேதாரம்.

ஷோரூமில் இன்ஷூரன்ஸ் பணம்போக, கையிலிருந்து 35,000 ரூபாய் செலவழிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள். கையில் பணம் இல்லாமல், சர்வீஸ் முடிந்த பிறகும் காரை எடுக்க முடியாமல், `Demurrage’ எனும் வெயிட்டிங் சார்ஜுக்கும் சேர்த்து, கிட்டத்தட்ட 50,000 ரூபாய் பணம் கட்டிய பிறகுதான் காரை ரீ-டெலிவரி எடுத்தார். `கார் வாங்கியிருக்கார். ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு... அதுக்கென்னங்க பண்ண முடியும்’ என்று இதை விதியின்மேல் பழிபோட்டுவிட்டுக் கடந்துவிட முடியாது.

கார் வாங்க வேண்டும் என்ற லட்சியம் இருந்த அவருக்கு, நன்றாக கார் ஓட்டத் தெரிந்த பிறகுதான் புது கார் வாங்க வேண்டும் என்ற புத்திசாலித்தனமான யோசனை இல்லாமல் போனதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம். ஆம்! அவர் கார் ஓட்டப் பழகிக்கொண்டிருந்த காலம் அது. புது கார் வாங்கிய பிறகுதான் டிரைவிங் க்ளாஸில் சேர்ந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். காரை டெலிவரி எடுத்ததே அவரது உறவினர் ஒருவர்தான்.

சில டிரைவிங் ஸ்கூல்களில் கார் ஓட்டப் பழகுபவர்கள், `என்கிட்ட சொந்தமாவே கார் இருக்கு. ஓரளவுக்கு கார் ஓட்டத் தெரியும். முக்கியமான டெக்னிக்ஸ் மட்டும் சொல்லித் தாங்க போதும்’ என்று கெத்தாகச் சொல்வதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். லைசென்ஸ் இருந்தால் போதும் என்பதுதான் அவர்களின் ஐடியா. அவர்களுக்கு இது சரியான பாடம்.

`அப்படியென்றால் புதிதாக கார் வாங்கி டிரைவிங் பழகக் கூடாதா?’ என்றால்,  `கூடாது’. இருக்கவே இருக்கிறது பழைய கார் எனும் ஆப்ஷன். புது கார் வாங்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்தான். ஆனால், அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்தானே! கார் வாங்குவதே ஓட்டுவதற்குத்தான். அதை டிரைவரிடமோ, நண்பரிடமோ கொடுத்து ஓட்டச் சொல்வதற்கு புது கார் வாங்க வேண்டும் என்ற லாஜிக்கே தேவையில்லை. புது கார் வாங்கிவிட்டு, ஒவ்வொரு பயணத்துக்கும் உறவினரையோ, நண்பரையோ, ஆக்டிங் டிரைவரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. கார் வாங்கி பல ஆண்டுகள் ஆன பிறகும் அவர்கள் கார் டிரைவிங்கில் ஆவரேஜ் மார்க்கூட வாங்கவில்லை என்பதுதான் சோகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கார் ஓட்டப் பழகுவதற்கு முன் கார் வாங்கினால்?

`2 லட்சம் ரூபாய் கையில் இருக்கு; இனிஷியல் தொகையைக் கட்டி மாதத் தவணையில் புது கார் வாங்கலாம்னு பார்க்கிறேன். பழைய கார் எதுக்கு வாங்கிட்டு?’ என்பவர்கள், நன்றாக கார் ஓட்டப் பழகிவிட்டு இந்த முடிவை எடுக்கலாம். அதே 2 லட்சம் ரூபாயைவிட குறைந்த விலையில் பழைய கார் மார்க்கெட்டில் ஆல்ட்டோ, பழைய ஃபிகோ, சான்ட்ரோ, i10 என ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உள்ளன. பழைய காரில் கீறல் விழும்போது, மனசுக்குள் பெரிதாக எந்தக் கீறலும் விழாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்கு பழகியதும், பழைய காரை எக்ஸ்சேஞ்ஜ் ஆப்ஷனில் கொடுத்துவிட்டு, புது கார் வாங்கும் உங்கள் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்வதுதான் சரி.

கார் ஓட்டப் பழகும்போது லாங் ரைடு போகலாமா?

சிலருக்கு டிரைவிங்கில் `ABC’ தவிர பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்காது. லேசாக இடிக்காமல் கார் ஓட்டிய உடனேயே, தடாலென லாங் ரைடு கிளம்பிவிடுவார்கள். இது தவறு. நன்கு கார் ஓட்டத் தெரிந்த அனுபவமிக்க ஒருவரை உடன் வைத்துக்கொண்டு நீங்கள் லாங் ரைடில் கார் ஓட்டுவதுதான் சிறந்தது. டிரைவிங் க்ளாஸில் கார் ஓட்டப் பழகிய உடனே எக்ஸ்பெர்ட் ஆகிவிடலாம் என்று, சிலர் அதீத நம்பிக்கையுடன் இருப்பார்கள். எதுவுமே களத்தில் இறங்கினால்தான் அனுபவம் கிடைக்கும்.

பெரிய கிரவுண்டில் அல்லது அதிகாலை நேரத்தில் ஆளே இல்லாத நான்-பீக் ஹவர்ஸில், எக்ஸ்பெர்ட் ஒருவரின் உதவியுடன் கார் ஓட்டிப் பழகுங்கள். சின்னச் சின்ன கோன்கள், டயர் டியூப்களை வைத்து நீங்களாகவே ஓட்டிப் பழகலாம். சடர்ன் பிரேக்கிங், ரிவர்ஸ், ஸ்டார்ட்டிங் பிக்கப், கிளட்ச் பிளே, கியர் ஷிஃப்டிங் என எல்லாவற்றையும் ஒரு கை பாருங்கள். அப்புறம் சின்னச் சின்ன சிட்டி டிரைவிங். இதிலேயே டிரைவிங்கின் நேக்குபோக்குத் தெரிந்துவிடும். முழு தன்னம்பிக்கை கிடைத்தவுடன்தான் லாங் ரைடிங்குக்கு காரை எடுக்க வேண்டும்.

பக்காவான புரொஃபஷனல் டிரைவிங் டெக்னிக்ஸ் தெரிய வேண்டும் என்பவர்கள், காசு போனால் பரவாயில்லை என, கொஞ்சம் பெரிய டிரைவிங் ஸ்கூல்களில் சேரலாம். சிமுலேட்டரில் ஆரம்பித்து, ரோடு டிரைவிங், இன்ஜின் விவரங்கள், ஸ்டெஃப்னி மாற்றுவது, நடுரோட்டில் கார் சொதப்பினால் சின்னச் சின்ன முதலுதவிகள் என்பது வரை எல்லாமே பிராக்டிக்கலாகச் சொல்லித்தரும் டிரைவிங் பள்ளிகள் உண்டு. மாருதி மற்றும் டொயோட்டா டிரைவிங் ஸ்கூல்கள் இதற்கான சரியான ஆப்ஷன்.

`ஆயிரம் வேரைக் கொன்றால்தான் அரை வைத்தியன் ஆக முடியும்’ என்பது மருத்துவத்துக்கு வேண்டுமானால் ஓகே! ஒரு நல்ல டிரைவர், யாருக்கும் சேதம் விளைவிக்கக் கூடாது.

- கார் வாங்கலாம்

தமிழ்

முறையாக கார் ஓட்ட, இதெல்லாம் பண்ணுங்க!

* கார் ஓட்டும்போது டிரைவிங் பொசிஷன் ரொம்ப முக்கியம். சிலர் டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடனேயே, `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பட ரேஞ்சில் சீறுவார்கள். இது ரொம்பத் தப்பு. கொஞ்ச நேரமானாலும் பரவாயில்லை, சீட்டை அட்ஜஸ்ட் செய்து, கண்ணாடியைச் சரிசெய்து, சீட் பெல்ட் போட்டு எல்லாவற்றையும் பக்காவாக்கி, ஒரு கம்ஃபர்ட் ஜோனுக்கு வந்த பிறகே காரை எடுக்க வேண்டும். காரைக் கிளப்பிய பிறகு டிரைவிங்கிலேயே இவை அனைத்தையும் செய்வது மோசமான டிரைவிங் ஸ்டைல்.

* டிரைவிங்கில் இருக்கும்போது, சிலர் வாட்ஸ்அப் ரிப்ளை பண்ணுவது, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவது, `இதோ வந்துட்டேம்மா’ என்று காதலிகளிடம் அஜித் ரேஞ்சுக்குப் பேசுவது அனைத்துமே மகா தப்பு பாஸ்! `ஸ்டார்ட்டட்’ என ரிப்ளை செய்துவிட்டு காரில் ஏறலாம். முக்கியமான அழைப்புகள் வரும்பட்சத்தில் இண்டிகேட்டர் போட்டு காரை இடதுபுறம் ஒதுக்கிப் பேசி முடித்துவிட்டு, பிறகு வண்டியை எடுக்கலாம்.

* `ஒரு செகண்ட்தானே... ரிப்ளை பண்றதுல என்ன வந்துடப்போகுது!’ என நினைத்தால், ஸாரி! உங்கள் பார்வை சாலையைவிட்டு விலகும்பட்சத்தில், 50 கி.மீ வேகத்தில் செல்லும் உங்கள் கார், ஒரு விநாடிக்கு 60 அடி தாண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்க.

* எப்போதுமே முன்னால் செல்லும் காரை ஒட்டியபடி பயணிக்காதீர்கள். 15 அடி இடைவெளி எப்போதும் தேவை. முன்பக்க கார் சடர்ன் பிரேக் அடித்தால், இரண்டு பேருக்குமே ஏழரைதான்! `நாய் க்ராஸ் ஆகிடுச்சு; மாடு குறுக்கே போயிடுச்சு’ என்று எது நடந்தாலும், ஆபத்து உங்களுக்குத்தான்.

* மழைக்காலத்தில் அதிக கவனம் தேவை. ஈரமான சாலைகள், ஏபிஎஸ் இல்லாத கார்களுக்கு எப்போதுமே மோசமான சாலைகளாக அவதாரம் எடுக்கும். ஸ்கிட் ஆகும் வாய்ப்பு அதிகம். ஹைவேஸ்தானே என ஆக்ஸிலரேட்டரில் ஏறி நின்றால்... கன்ட்ரோல் கிடைக்காது பாஸ்.

* சிலர் யூ டர்ன் எடுக்கும்போது, திருப்பங்களில் `க்ரீச்’ போட்டுவிடுவார்கள். காரணம், பிளைண்ட் ஸ்பாட். இதற்கு ஒரு ட்ரிக் உண்டு. சென்டர் மீடியனின் முடிவும் (திரும்பவேண்டிய இடம்), உங்கள் தோள்பட்டையும் ஒரே அளவில் வந்த பிறகு, யூ டர்ன் அடித்தால் கார் சேஃப்டி.

* ஓவர்டேக்கிங்கில்தான் நிறைய குற்றங்கள் நடக்கின்றன. எப்போதுமே கார்னரிங்கில் ஓடர்டேக், கனவில்கூட வேண்டாம். பாஸ் லைட், ஹார்ன் - இரண்டுக்கும் வேலை கொடுத்துவிட்டுத்தான் ஓவர்டேக் செய்ய வேண்டும்.

* ஹை ஸ்பீடில், டெம்பரேச்சர் மீட்டர் மீது ஒரு கண் இருக்கட்டும். சிவப்பு லைனை க்ராஸ் செய்தால், பார்க்கிங்தான் பெஸ்ட்.

* டயர்டு ஆவதுபோல் உணர்வு ஏற்பட்டால், உடனே காரைவிட்டு இறங்கி ஃப்ரெஷ் ஏர்-ஐ அனுபவியுங்கள். சில்லென்ற பானம், சூடான காபி போன்றவை உறக்கத்தைக் கலைக்கும். அரைத்தூக்கத்தில் கார் ஓட்டுவது, வாழ்க்கையையே புரட்டிப் போட்டிவிடும் மக்கா!

* மலைப்பாதை ஏற்றங்களில், முதல் கியர்தான் சரி. சர்ரென்ற இறக்கங்களிலும் முடிந்தவரை ஃபர்ஸ்ட் கியர்தான் சேஃப்டி. இரண்டு, மூன்றாவது கியர்களில் கன்ட்ரோல் இழக்க வாய்ப்புண்டு. அதைவிட, நியூட்ரலில் இறங்குவதை நினைத்துக் கூடப்பார்க்காதீர்கள்.
 
* புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கான பெரிய பிரச்னை, பார்க்கிங். ரிவர்ஸ் கேமரா இருந்தாலும், பின்பக்கம் அடிக்கடி பார்வையைச் செலுத்துவது ரொம்ப நல்லது. யாராவது நண்பர்களைக் கீழே இறங்கச் சொல்லி, அவர்களின் உதவியுடன் காரை பார்க் பண்ணுவது பெஸ்ட்.