Published:Updated:

"நியூட்ரினோவை நாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் தெரியுமா?" - விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

"நியூட்ரினோவை நாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் தெரியுமா?" - விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்
News
"நியூட்ரினோவை நாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் தெரியுமா?" - விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

நியூட்ரினோவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் தரப்பிலிருந்து எடுத்துரைக்கிறார் வெங்கடேஸ்வரன்.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கும் எனப் பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படி ஒரு பக்கம் எதிர்ப்புகள் இருக்க, மற்றொரு பக்கம் ஆராய்ச்சியாளர்கள் நியூட்ரினோ திட்டத்தால் பல்வேறு நன்மைகள் உள்ளன எனத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் மதுரை வடபழஞ்சியில் உள்ள நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்திற்கு வந்த நியூட்ரினோ ஆராய்ச்சியாளர் த.வி.வெங்கடேஸ்வரனிடம் இதுகுறித்து பேசினோம்.

”தொலைநோக்கிகள் அமைக்கும்போது பொதுவாகவே உயரமான மலையில்தான் அமைப்பார்கள். அதுபோலவே நியூட்ரினோ ஆய்வு  மேற்கொள்ளவும் நிலவியல் கூறுகள் அவசியம். காலத்தால் மிகப்பழமையான மலையாக இருக்கவேண்டும் அதுதான் உறுதித்தன்மை வாய்ந்தாக இருக்கும். இமயமலை உயரமான மலை, ஆனால் கடினமானது அல்ல; அது படிம பாறைகளால் ஆனது. சிறு சிறு பாறையாக இணைந்திருக்கும். இப்படி மற்ற மாநிலங்களில் உள்ள பாறைகள் இந்த ஆய்வுக்கு ஏற்றதல்ல. ஆனால் தேனி மாவட்டம் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனது. அதேபோல் ஒரே பாறைகளால் ஆன மலையாக உள்ளது. மேலும் இங்கு விவசாய நிலங்களோ, மரங்களோ பாதிக்காத வகையில் உள்ளது. வளிமண்டல நியூட்ரினோக்களை ஆராய்ச்சி செய்யும்போது அது நிலநடுக்கோட்டுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் அமைவது ஏதுவாக இருக்கும். இப்படிப் பல்வேறு காரணங்களுக்காகத்தான் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலை தேர்வு செய்யப்பட்டது.

நியூட்ரினோவுக்காக மலையை உடைத்து சுக்குநூறாக ஆக்கப்போவதில்லை. கல்குவாரியில் வெடித்து பாறைகளை அகற்றுவது போன்ற செயல்தான் இங்கேயும் செய்யப்படும். மலையை யாரும் அழிக்கப்போவதில்லை. பூமிக்குள் ஆழ்துளைக்கிணறு போன்று தோண்டப்போவதில்லை. மெட்ரோ பாதாள ரயில் போல, மலைக் குகைக்குள் ரயில் பாதை ரோடு செல்வது போல, இரண்டு டிரக் லாரி செல்லும் அகலத்தில், சுமார் ஏழு மீட்டர் உயரத்தில் மலையை குடைந்து, தரையோடு தரையாக, பாதை அமைப்பார்கள். சரியாக மலையின் உச்சிக்கு கீழே அந்த பாதை சென்றதும் கட்டுமானத்தை நிறுத்திவிடுவார்கள். மலைப்பாதை அமைப்பதற்குக் கூட மலையின் அடுத்த பக்கம் வெளியே வரும் வரை பாதை அமைக்கவேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தில் அப்படிகூட இல்லை. அதற்கும் பாதியான அளவில்தான் எடுக்கப்படும். அந்தப் பாதையின் இறுதி முனையில் ஆய்வகம் அமையும். அதில் நியூட்ரினோ உணர்வீ அமைக்கப்படும். மழை மானி மழையின் அளவை அளவிடுவது போல இந்த உணர்வீ வளிமண்டல நியூட்ரினோக்களை அளவிடும். இங்கு 5 வருடங்களில் வெறும் 450 டன் வெடிமருந்துதான் பாதை போடுவதற்குப் பயன்படுத்தப்படும். நாளுக்கு 2, 3 முறைக்கு மேல் வெடிக்கமாட்டார்கள்.  மலையில் விரிசல் விழாத அளவு குறைவாக ஆற்றலுடன் வெடிக்கப்படும். இரண்டு மாதங்களில் சுமார் 300 மீட்டர் குகை அமைந்துவிடும். அதன் பின்னர் உள்ளே கட்டுமானம் நடப்பதுகூட வெளியே தெரியாத அளவுதான் விளைவுகள் இருக்கும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது பல மாநகரங்களில் தரைக்கு கீழே மெட்ரோ ரயில் ஏற்படுத்துவதற்கு சுரங்கப்பாதை அமைக்கிறார்கள். கல்கத்தாவில் தற்போது ஆற்றுக்கு அடியில் செல்லும்படியான சுரங்கம் அமைக்கப்படுகிறது. எனவே இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ளதுதான். அறிவியல் கல்வி ஆழமில்லாமல் பொய்களை சொல்லி மக்களை அச்சப்பட வைக்கக் கூடாது. வெடி வெடிப்பதால் அதிர்வு ஆற்றல் 20 கிலோ மீட்டர் வரை செல்லும் என்பது அறிவியல் அபத்தம். தலைகீழ் இருமடி விதியின் படி தூரம் செல்ல செல்ல அதிர்வு குறைந்து கொண்டுதான் செல்லும். நியூட்ரினோ திட்டத்திற்கு 300 குடும்பத்திற்குத் தேவையான நீர் இருந்தால் போதுமானது. நியூட்ரினோ எந்த ஒரு உற்பத்தியையும் வெளியிடாது, கழிவுகளைக் குவிக்காது. அதனால் எந்த ஒரு பாக்டீரியாவையோ, வேறு எந்த தொற்றுகளையோ உருவாக்காது. அதனால் எந்த ஒரு நோயையும் இந்த திட்டம் உருவாக்காது. ஒரு அளவிடும் கருவியாக மட்டுமே செயல்படும். மலை மற்ற துகளை அனுமதிக்காமல் ஒரு குடை போல் செயல்படும் அதனால் நியூட்ரினோ வை எளிமையாக அளவிடமுடியும். நியூட்ரினோ மின் சுமை அற்ற துகள்; அதனால் காந்த விசைகளால் கூட இழுக்காது. இத்திட்டத்திற்காக ஒரு மரங்களைக் கூட வெட்டப்போவதில்லை. இப்படி நியூட்ரினோ ஆய்வால் எந்த பாதிப்பும் இல்லை என்பது மட்டுமே உண்மை. 

நியூட்ரினோ ஆய்வு அமைவது உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆழமான கல்வியை வழங்கும். பல்வேறு நிலைகளில் ஈடுபட வாய்ப்புகளை அளிக்கும். படித்துமட்டும் ஆய்வுகளை முழுமையாகக் கற்றுக்கொள்ளமுடியாது; செயல்முறை பயிற்சியும் இருந்தால்தான் முழுமையடைய முடியும். இந்தியா முழுவதிலும் உள்ள நபர்கள் இதை எளிமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழகத்திற்குக் கல்வித்துறையில் பல்வேறு பயன்கள் உள்ளது. மனிதவளம் மேம்படும். ஆசிரியர்களின் தரம் உயரும். பல்வேறு துறைகளைச் சார்ந்த பொறியியல் மாணவர்கள் கூட பங்குபெற்று இந்த ஆய்வில் ஈடுபட உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இதில் இணைந்து பங்களிக்க உள்ளது. இதுபோல் பல்வேறு கல்வி நிறுவனங்களும் ஆய்வில் இணையவேண்டும். இந்த திட்டத்தில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் தங்களுடைய கல்லூரி அனுமதியோடு வரலாம். வர விரும்புவார்கள்  Kcravi@tifr.res.in மின்னஞ்சல் க்கு தகவல்கள் அனுப்பலாம்.

நியூட்ரினோ ஆய்வு மையத்தின் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தலாம். எலக்ட்ரான் துகள் மூலம் எக்ஸ்ரே போலவும், பாசிட்ரான் துகள் மூலம், பெட் ஸ்கேன் போலவும் , நியூட்ரினோவின் மூலம் அதன் தன்மையை அறிந்து, பின்பு பெரும் காரியங்களுக்கு பயன்படுத்தலாம். தகவல் தொழில்நுட்பத்தில் நியூட்ரினோவால் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவரலாம். நியூட்ரினோவை அளவிடும்போதுதான் அதன் பயன் என்ன என்று தெரியவரும். தொழில் வளர்ச்சியிலும் வேலை வாய்ப்புகளில் நியூட்ரினோ பெரும் பங்காற்ற வாய்ப்புள்ளது. ஆனால் தவறான புரிதல் காரணமாக நியூட்ரினோவைப் பற்றி போலியான பிரசாரம் செய்யப்படுகிறது. பசுமைத் தீர்ப்பாயம் சொன்ன கருத்துகளைக் கூட நிறைய பேர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். இடைக்காலத் தடை என்பது முழுமையாக நிறுத்தவேண்டும் என்பதில்லை. தற்காலிக முடிவுதான். சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோவால் பாதிப்புகள் இல்லை என்று அனுமதி அளித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து விலங்குகள் நலவாரியங்கள் அனுமதித்துவிட்டால் பிறகு மாசுக்கட்டுபாட்டு அமைச்சகத்தில் அனுமதி பெற்றுவிட்டு தமிழகம் மற்றும் கேரள அரசுகளிடம் அனுமதி பெற்று நியூட்ரினோ ஆய்வுகளைத் தொடர்ந்துவிடலாம்” எனத் தெரிவித்தார்.