கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்!

மீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 9 - தொடர்

னிதன், RGB எனும் மூன்று வண்ணங்களை மட்டும்தான்  பார்க்க முடியும். நாய்களின் காணுலகம் இரண்டே வண்ணங்களில் அடங்கி விடுகிறது. ஆம், நாய்களால் பச்சை மற்றும் நீல வண்ணங்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், 15 வேறுபட்ட வண்ணக் கதிர்களைப் பிரித்து மேயும்  கலர்ஃபுல் உயிரினம், கடலுக்கு அடியில் பல லட்சம்  ஆண்டுகளாக வாழ்கிறது!

மீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்!

அதன் பெயர் `Mantis shrimp’ எனும் இறால்.

வடிவமைப்புக்கும் இந்த மேன்டிஸ் இறாலுக்கும் என்ன தொடர்பு எனப் பார்ப்பதற்கு முன்பு, `பயோ மிமிக்ரி’ (Bio Mimicry) பற்றி அறிவது அவசியம்.  இந்த பயோ மிமிக்ரியை 60-களிலேயே தன் கவிதையால் காட்சிப்படுத்திவிட்டார் கவிஞர் கண்ணதாசன்.

`பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். பாயும் மீன்களில் படகினைக் கண்டான். எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்...’ என்று பயோ மிமிக்ரியை மிகத் தெளிவாகச் சொல்கின்றன இந்த வரிகள். உண்மையில், பறவைகளின் ஏரோ டைனமிக்ஸ் (Aerodynamics) தானே விமானம்!

ஜப்பானிய புல்லட் ரயிலின் முகப்பு, சின்ன மீன்கொத்திப் பறவையைப்போல  இருக்கும். மீன்கொத்தியைவிட உயரமாகவும் வேகமாகவும் அளவில் பெரிதாகவும் பல வேட்டைப் பறவைகள் இருந்தாலும், பிரமாண்ட புல்லட் ரயிலுக்கு இந்தச் சின்னப் பறவையை பயோ மிமிக்ரி செய்ய என்ன காரணம்? இதில்தான் form, follows, function என்கிற செயல்திறன் ஈட்டும் வடிவம் எனும் தத்துவம் மறைந்திருக்கிறது.

மீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்!

முதலில் `புல்லட்’ என்ற சொல்லுக்கு ஏற்ப, அதிவேகமாக துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டாவைப் போன்ற வடிவில்தான் இந்த ரயிலை ஜப்பானியப் பொறியாளர்கள் வடிவமைத்தனர். புல்லட் வெடிக்கும் ஓசை போலவே, புல்லட் ரயிலும் எதிர்பார்த்ததைவிட பெரும் பேரோசையை எழுப்பியது. 11 அடி அகலமும் 11.6 அடி உயரமும் என 90 அடிக்குமேல் நீளும் இந்த ரயில், மணிக்கு 300 கி. மீ வேகத்தில் சீறிப்பாயும்போது வெளியான சத்தம் உண்மையில் காதைக் கிழித்தது. மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட சுரங்கங்களில் நுழைந்து வெளியேறும் போது ஏற்படும் காற்றழுத்த வேறுபாட்டால், ரயிலின் பேரோசை பன்மடங்காகப் பெருகியது.

ஜப்பானிய நகரங்களின் எல்லைக்குள், ரயிலுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச ஓசையின் அளவு 70 டெசிபல் மட்டுமே. ஆகவே இதமான, மிதமான சத்தத்துடன் அசராத, அசகாய, அசுரவேகத்தில் பாயவும், சடுதியில் பதுங்கி நிற்கவுமான ஒரு பொறியியல் தொழில்நுட்பத்துக்கு எங்கே போவது என மூளையைக் கசக்கிக்கொண்டு ஆராய்ந்த வல்லுநர் ஒருவர், கம்ப்யூட்டர் திரைவிட்டுக் கண்களை விலக்கி, ஜன்னல் வழியே தெரிந்த ஏரியைப் பார்த்தபோது, ஒரு மீன் கொத்திப் பறவை அவரது சிந்தனையைச் சீண்டியது.

சத்தமில்லை, சலனமில்லை, வந்துபோன சுவடும் இல்லாமல், மின்னலென நீரைக் கிழித்துக்கொண்டு சென்று, அதே வேகத்தில்  மீனோடு வெளியே வந்த அந்த மீன்கொத்தி, வல்லுநரின் கவனத்தைக் கவர காரணம் இல்லாமல் இல்லை.

மீன்கொத்தியின் நீண்ட அலகும், அதன் உடலின் அனாட்டமியும், அது நீரின் பரப்பில் நுழையும்போது ஏற்படுத்திக்கொள்ளும் கோணமும்தான் மீன்கொத்திப் பறவையின் சத்தமற்ற யுத்த உத்தி என்பதை, பலமுறை கவனித்து உறுதி செய்துகொண்டு, `இதே உத்தியை புல்லட் ரயிலோடு பொருத்திப் பார்த்தால் என்ன?’ என்ற ஐடியாவில் வடிவமைக்கப்பட்டதுதான் இன்றைய புல்லட் ரயில்.

இந்த நிகழ்வு, இரண்டு சிந்தனைகளை விதைக்கிறது.

எந்த நேரமும் வேலை வேலை என இல்லாமல் ஓவியம், இசை, வாசிப்பு போன்ற தளங்களிலும் மனதை அவ்வப்போது திருப்பி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். அடுத்ததாக, வெளிப்பார்வைக்குப் பிரிந்து கிடக்கும் இரு வேறு இயல்பில் உள்ள புள்ளிகளைக்  கவனித்து இணைத்தால், புதிய பாதை அமைக்கலாம்.

மீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்!

`கெக்கோ’ (Gecko) எனப்படும் பல்லியின் கால்களை ஆராய்ந்த ஸ்டாண்ட்ஃபோர்டு (Standford) பல்கலைக்கழக மாணவர்கள், `கெக்கோ கிளவுஸ்’ என்னும் கையுறைகளை வடிவமைத்துள்ளனர். இதை அணிந்துகொண்டு சுவரில் ஸ்பைடர்மேன் போல இலகுவாக ஏறிவிடலாம். `வெல்க்ரோ’ (velcro) எனும் பதிய இறுக்கியோடு அமைந்த ஷூக்கள் குழந்தைகளைப் பெரிதும் கவர்கின்றன. `க்ரோ க்ரோ’ என்ற ஓசையோடு அவர்கள் ஆசையோடு பிரித்தும் சேர்த்தும் விளையாடும் இந்த வெல்க்ரோ, நாயுருவி எனும் ஓர் எளிய செடி, தன் விதைகளை விலங்குகளின் ரோமத்தில் ஒட்டிவிட்டுப் பரப்பும் வழிமுறையைத் தழுவிய பயோ மிமிக்ரி என்றால், உங்களுக்கு ஆச்சர்யமாகத்தானே இருக்கும்!

சிறு வயதில் நானும் என் பங்குக்கு என் காலில் ஒட்டிய நாயுருவி விதைகளை, பல இடங்களில் விதைத்திருக்கிறேன். இப்படிப் பல்வேறு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மேலும், இணையத்தில் நீங்கள் தேடியும் எடுக்கலாம். ஆனால், பயோ மிமிக்ரியைத் தெரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல், அந்தத் துறையில் ஆழ்ந்த தேடலும், மேல்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு அடிகோலுவதும் அவசியம்.

 சமகால பயோ மிமிக்ரி ஆராய்ச்சிகளின் ஹீரோ நம் Mantice Shrimp. இந்த வேட்டைக்காரனின் தனித்துவங்கள் பல. இந்த இறாலின் டெலஸ்கோப் போன்ற கண்களால், நான்கு திசைகளிலும் சுழன்று வெவ்வேறு கோணங்களில் பார்க்க இயலும். 16 வெவ்வேறு நிறங்களின் கதிர்களைப் பார்க்கும் திறன் அதன் கண்களுக்கு உண்டு. நாம் காணும் வண்ணங்களையும் மீறி என்னென்ன வண்ணங்கள் இருக்கின்றன என்பது மேன்டிஸ் இறாலுக்கே வெளிச்சம். உதாரணமாக, நம் கையில் தினமும் புழங்கும் டிவி ரிமோட் உமிழும் இன்ஃப்ரா ரெட் (Infra red) ஒளியை நாம் பார்க்க இயலாது. போலரைஸ்டு லைட் (Polarised light) என்ற ஒளிக்கற்றையையும் நம் வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆனால், போலரைஸ்டு உள்ளிட்ட பலவற்றை இந்தக் கடல்வாழ் உயிரினத்தால் பார்க்க முடியும். இதன் கண்களை நம்மால் மிமிக்ரி செய்ய முடிந்தால், புற்றுநோய் செல்களை அதன் ஆரம்ப நிலையிலேயே பார்த்து அழிக்க முடியும். ஆம், கேன்சர் செல்களை Polarised ஒளியினால்தான் காண முடியும். ‘இல்லினாய்’ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேன்டிஸ் இறால் கண்களைப் பிரதி எடுத்து, ஒரு கேமராவை உருவாக்கி சோதனை செய்துகொண்டு இருக்கிறார்கள். கேமராவின் பெயர் `மேட்டிஸ் கேம்.’ மருத்துவ உலகுக்கு இந்த கேமரா ஒரு வரமாக இருக்கும். இந்த உலகில் இந்தத் தேதியில் மிக வேகமான குத்துச்சண்டை சாம்பியன் யார் எனக் கேட்டால், நம் ஹீரோ மேன்டிஸ் இறால் என்பதுதான் சமீபத்திய ஆய்வு முடிவுகள் சொல்லும் உண்மை.

A22 ரக பிஸ்டலிலிருந்து வெளிவரும் புல்லட்டின் வேகத்தைவிட அதிக வேகம். இந்த புல்லட் வேகத்தைப் புரிந்து கொள்ளும்படிச் சொல்வதானால், விநாடிக்கு 1,200 அடி அல்லது மணிக்கு 1,316 கிலோ மீட்டர் வேகம். இந்த இறால், நீரின் ஆழத்தின் அழுத்தத்தில், தன் இரு புஜங்களாலும் ஏற்படுத்தும் அதிவேகத் தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல், ஆக்டோபஸ்களும் நண்டுகளும் நொடியில் இறந்துவிடுகின்றன. இந்த இறால் ஆய்வுகள் மூலமாக, மனித சமூகம் பற்பல உயிர் காக்கும், வாழ்வை எளிமையாக்கும் வழிகளைக் கண்டடையலாம் என நம்பப்படுகிறது.

மிக மிக மெல்லிய குண்டு துளைக்காத சட்டை, இதற்கு ஓர் உதாரணம். இவற்றின் தசைகள் நமக்கு வாய்க்கப்பட்டால், நம் உடல் எடையில் 2,500 மடங்கு அதிகமான எடை கொண்ட எதையும் ஒரே குத்தில் உடைத் துவிடலாம். இந்த இறால், தன் வாழ்வின் இறுதி வரை ஒரே துணையுடன் மட்டுமே வாழ்கிறது. பிறன் மனை நோக்கா பேராண்மை மட்டுமல்ல... இந்த இறால்களிடமிருந்து நாம் தெரிந்துகொள்ள இன்னும் நிறையவே இருக்கிறது.

- வடிவமைப்போம்

க.சத்தியசீலன்