Published:Updated:

ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?
பிரீமியம் ஸ்டோரி
ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

ஒப்பீடு - YZF-R15 V3.0 VS RS200

ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

ஒப்பீடு - YZF-R15 V3.0 VS RS200

Published:Updated:
ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?
பிரீமியம் ஸ்டோரி
ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

புல் ஃபேரிங் பைக்ஸ்… ரேஸ் பைக் லுக், பெரிய வைஸர், அற்புதமான கையாளுமை, சிறப்பான நிலைத்தன்மை என இந்த வகை பைக்குகளில் ப்ளஸ் பாயின்ட்கள் அதிகம். `1.5 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், ஃபுல் ஃபேரிங்கொண்ட பைக் வேண்டும்’ என்பவர்களுக்கு, யமஹா R15 முதன்மையான சாய்ஸாக இருந்துவருகிறது. இதற்குப் போட்டியாக ஹோண்டா CBR 150R பைக் இருந்தாலும், அது BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படவில்லை. இந்தியாவில் பர்ஃபாமென்ஸ் பைக் சந்தையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பஜாஜ், பல்ஸர் பிராண்ட்டிங்கில் இதற்குப் போட்டியாகக் களமிறக்கியதுதான் RS200. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மூன்றாம் தலைமுறை R15 பைக்கை, பல்ஸர் RS200 உடன் மோதவிட்டிருக்கிறோம்.

ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

டிசைன்

இங்கே பார்க்க பல்க்காகக் காட்சியளிக்கும் பல்ஸர் RS200, பஜாஜின் முதல் ஃபுல் ஃபேரிங்கொண்ட பைக். பல்ஸர் சீரிஸில் வேகமான பைக்காக இருக்கும் இதை, கடந்த 2014-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது பஜாஜ். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வந்த BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப பைக்கை அப்டேட் செய்ததே, இந்த மாடலின் முதல் பேஸ்லிஃப்ட். டியூக் 200 பைக்கிலிருந்து எப்படி RC200 பைக் உருவானதோ, அதேபோலவே NS200 பைக்கிலிருந்து வளர்ந்ததுதான் RS200. ஆனால், என்னதான் வேகம் மற்றும் கையாளுமையில் அசத்தினாலும், எந்தவொரு ரேஸிங் பின்னணியும் இல்லாமல் இந்த பைக் தயாராகியிருக்கிறது. மேலும், `Leave Track Racing to Amateurs’ என்ற அடைமொழியுடன் வெளிவந்த RS200, மற்ற பல்ஸர் பைக்குகளைப் போலவே ஸ்ட்ரீட் பைக்காகவே பார்க்கப்படுகிறது.

இந்த பஜாஜ் பைக்குடன் ஒப்பிட்டால், ரேஸ் டிராக்கில் பிறந்த பைக் போலவே காட்சியளிக்கிறது யமஹா R15 V3.0. புகழ்பெற்ற YZF-R1 பைக்கின் மினியேச்சர்போலக் காட்சியளிக்கும் இதில், தனது மொத்த வித்தையையும் இறக்கியிருக்கிறது யமஹா. இதே விஷயத்தை, ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிறுவனம் சாதித்ததுதான் ஹைலைட்! இப்படி யமஹாவின் ரேஸிங் பாரம்பர்யத்தைப் பறைசாற்றும்படி தயாராகியிருக்கும் R15 V3.0, டிசைன் விஷயத்தில் சொல்லியடிக்கிறது.

 எர்கனாமிக்ஸ்

இந்த இரு பைக்குகளிலும் ஒன்றன்பின் ஒன்றாக ஏறி உட்காரும்போதே, அதன் நோக்கத்தைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பல்ஸர் RS200 பைக்கின் க்ளிப் ஆன் ஹேண்டில்பார் உயரமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப சீட்டிங் பொசிஷனும் மேல்நோக்கி இருக்கிறது. எனவே, பைக் பார்க்க ரேஸியாக இருந்தாலும், நிஜத்தில் சீட்டிங் பொசிஷன் சொகுசாக இருக்கிறது. ஸ்பிளிட் சீட்டில் போதுமான இடவசதி இருப்பதுடன், ஃபுட் பெக்குகளும் அவ்வளவாகப் பின்தள்ளி வைக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பைக்கைக் கையாள்வது சுலபமாக இருப்பதுடன், சாலையையும் சரியாகப் பார்க்க முடிகிறது. அந்த நேரத்தில் கைகளில் கூடுதல் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை என்பது பெரிய ப்ளஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

ரேஸ் பைக் போன்ற துல்லியமான கையாளுமையை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளதால், யமஹா R15 V3.0 பைக்கின் ரைடிங் பொசிஷன் அதற்கேற்ப அமைந்திருக்கிறது. தாழ்வான க்ளிப் ஆன் ஹேண்டில்பார் மற்றும் உயரத்தில் இருக்கும் ஃபுட் பெக்ஸ் ஆகியவை இதற்கான உதாரணம். எனவே, திருப்பங்களிலும் ரேஸ் டிராக்கிலும் இந்த பைக்கை வளைத்து நெளித்து ஓட்டுவது செம ஃபன்னாக இருக்கும். மேலும், ரேஸ் பைக்கின் அடிப்படைக் கோட்பாடான `Less is More’ என்பதற்கு ஏற்ப, பல்ஸர் RS200 பைக்கைவிட காம்பேக்ட்டாகவும் குறுகலாகவும் இருக்கிறது R15 V3.0. இன்னும் சொல்லப்போனால், பஜாஜ் பைக்கைவிட 25 கிலோ எடை குறைவாக இருக்கிறது இந்த யமஹா பைக்!

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

பஜாஜ் பல்ஸர் RS200 பைக்கில் இருப்பது, 24.5bhp பவர் மற்றும் 1.86kgm டார்க்கை வெளிப்படுத்தும் 199.5சிசி, லிக்விட் கூல்டு, 4 வால்வ், ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின் – 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. இங்கு பவர்ஃபுல் இதுதான் என்றாலும், எடையும் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், இந்த பைக்கை விரட்டி ஓட்டும்போது, அந்தக் குறை தானாக மறந்துவிடுகிறது. ஏனென்றால், இந்த பல்ஸரின் பர்ஃபாமென்ஸ் அப்படி!

கியர்பாக்ஸில் கியர்கள் உடனுக்குடன் மாறினாலும், யமஹாவுடன் ஒப்பிடும்போது துல்லியம் குறைவுதான். இதனாலேயே இதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு கியரைத் தவறவிடுவது நடக்கலாம். பைக்கின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, எக்ஸாஸ்ட் சத்தம் காதுகளுக்கு இனிமையாகிக் கொண்டே செல்வது ரசிக்கும்படி இருக்கிறது. இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதுடன், கியர்களுக்கு இடையேயான பர்ஃபாமென்ஸ் நன்றாக உள்ளது. ஆரம்பகட்டத்தில் ஆக்ஸிலரேஷன் கொஞ்சம் டல்லாக இருந்தாலும், மிட் ரேஞ்சில் உயிர்பெறுகிறது இன்ஜின். அங்கு தொடங்கி டாப் எண்டு வரை பவர்ஃபுல் பட்டாசாக பர்ஃபாமென்ஸில் வெடிக்கிறது RS200! இதனால், வேகப்போட்டியில் இது ஈஸியாக வெல்கிறது.

ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

யமஹா R15 V3.0 பைக்கில் இருக்கும் 155சிசி இன்ஜின், 19.3bhp பவர் மற்றும் 1.5kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த லிக்விட் கூல்டு, 4 வால்வ், ஃபியூல் இன்ஜெக்டட் இன்ஜின், கூடுதலாக ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் VVA தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இவை துல்லியமான 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் சேரும்போதும், இந்த பைக்கை விரட்டி ஓட்டுவதும் நல்ல அனுபவமாக இருக்கிறது. அதற்கேற்ப எக்ஸாஸ்ட் சத்தமும் உயிரோட்டமாக இருக்கிறது. பல்ஸரைவிட 50சிசி - 5.2bhp பவர்- 0.36kgm டார்க் குறைவாக இருப்பினும், 0 – 100 கி.மீ வேகத்தை 10.73 விநாடியிலேயே எட்டுகிறது R15 V3.0. இது RS200 பைக்கைவிட வெறும் 1.02 விநாடியே அதிகம்! இதற்கு அந்த பைக்கின் குறைவான எடை கைகொடுக்கிறது. இதனாலேயே திருப்பங்களில் பஜாஜைவிட வேகமாக இருக்கிறது யமஹா.

 ஓட்டுதல் அனுபவம்

 R15 V3.0 பைக்கைப் போல ஸ்போர்ட்டியாக இல்லாவிட்டாலும், ரோடு கிரிப் மற்றும் கையாளுமை விஷயத்தில் அதற்கு செம டஃப் கொடுக்கிறது பல்ஸர் RS200. சொகுசான ரைடிங் பொசிஷன் காரணமாக, உயரமான அதே சமயம் எடை அதிகமான ரைடர்களின் தினசரிப் பயன்பாட்டுக்கு ஏற்ற பைக்காக இது திகழ்கிறது. இரவு நேரத்தில் பயணிக்க நேரிட்டால், பல்ஸரின் டூயல் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் உற்ற துணையாக வரும்! தவிர, பெரிதாகச் சிரமப்படாமலேயே இந்த பைக்கைத் திருப்பங்களில் செலுத்த முடிகிறது. இந்த இரு பைக்குகளும் தமது பெரும்பான்மையான ஆயுளை நகரச் சாலைகளில்தான் கழிக்கும் என்பதால், பல்ஸர் RS200 பைக்கின் பன்முகத்திறன் மனதைக் கவர்கிறது.

ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக்காக இருந்தாலும், முன்பு சொன்னது போலவே நேக்கட் பைக்போல நெரிசல்மிக்க சாலைகளில் புகுந்து புறப்பட ஏதுவாக இருக்கிறது பல்ஸர் RS200. பவர்ஃபுல் பைக்குக்கு பவர்ஃபுல் பிரேக்ஸ் இருப்பது அவசியம்தானே? அதற்கேற்ப முன்பக்கம் 300 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 230மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் உள்ளன. ஆப்ஷனலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், டொமினார்போல டூயல் சேனல் ஏபிஎஸ் இருந்திருக்கலாம்! டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் Nitrox மோனோஷாக் சஸ்பென்ஷன், கொஞ்சம் இறுக்கமான செட்-அப் கொண்டுள்ளன. எனவே, கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, இடர்பாடுகளை நம்மால் உணர முடிகிறது. `படம் பார்த்துக் கதை சொல்’ என்பதற்கு ஏற்ப, இங்கு இருக்கும் பைக்கிலே சொகுசான பில்லியன் சீட்டைக் கொண்டிருக்கும் பல்ஸர்தான், டூரிங் செல்வதற்குப் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

டிராக் சூட் சகிதம் கிளம்புவதற்கு ஏற்ற பைக்காக இருக்கும் R15 V3.0 பைக், ரேஸ் டிராக் மற்றும் சீரான நெடுஞ்சாலைகளுக்கு உகந்ததாக இருக்கிறது. அதனாலேயே இந்த பைக்கை ஓட்டுபவர்கள் கொஞ்சம் ஃபிட்டாக இருப்பது அவசியமாகிறது. இல்லையெனில், தினசரி நகரத்தில் இந்த பைக்கை ஓட்டுவது உடலுக்கு அயர்ச்சியைத் தரலாம். ரைடிங் பொசிஷன் மிகவும் ஸ்போர்ட்டியாக இருந்தாலும், சஸ்பென்ஷன் செட்-அப் அப்படி இல்லாதது ஆறுதல். முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் Linkage பாணி மோனோஷாக் சஸ்பென்ஷன், சாலை தரும் அதிர்வுகளைச் சிறப்பாக உள்வாங்கிக் கொள்கிறது. ஆனால், இப்படி பர்ஃபாமென்ஸுக்கும் கையாளுமைக்கும் முக்கியத்துவம் தந்து வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த பைக்கில், ஏபிஎஸ் ஆப்ஷனலாகக்கூட இல்லாதது மிகப்பெரிய மைனஸ்.

ஆனால், முன்பக்க 282 மிமீ மற்றும் பின்பக்க 220 மிமீ டிஸ்க் பிரேக் அமைப்பு, தனது பணியைத் திறம்பட செய்கின்றன. V2.0 உடன் ஒப்பிடும்போது V3.0 பைக்கின் பின்பக்க இருக்கையின் உயரம் குறைக்கப் பட்டிருந்தாலும், அது பில்லியனுக்குப் போதுமான இடவசதி மற்றும் சொகுசை அளிக்கவில்லை என்பது நெருடல்.

LED ஹெட்லைட்ஸ் பார்க்க ஸ்டைலாக இருந்தாலும், வெளிச்சம் கொஞ்சம் குறைவுதான்! ஒவ்வொரு தலைமுறையிலும் தனது கொள்கையில் உறுதியாகிக்கொண்டே வரும் R15 பைக்கை, அதற்கு இணக்கமான சூழலில் ரைடர் முழுமூச்சுடன் ஓட்டினால், அதற்கேற்ற பலன்/மனநிறைவு கிடைப்பது நிச்சயம்! இரண்டு பைக்குகளிலுமே கிராப் ரெயில் கிடையாது. அதற்குப் பதிலாக பின்பக்கத்தில் Ducts வழங்கப்பட்டிருந்தாலும், அதைப் பயன்படுத்துவது அவ்வளவு வாட்டமாக இல்லை.

தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

தேவைப்பட்டால் அம்பியாகவும் அந்நியனாகவும் மாறக்கூடிய பல்ஸர் RS200 பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை 1.42 லட்சம் ரூபாய் (டிஸ்க் பிரேக்) மற்றும் 1.55 லட்சம் ரூபாய் (ஏபிஎஸ்) என்றளவில் இருக்கிறது. ஆனால், என்னதான் சொகுசு மற்றும் பர்ஃபாமென்ஸில் இது அசத்தினாலும், அதிக எடை- ஓகே ரகத்திலான ஃபிட் அண்டு ஃபினிஷ் – ஓவர் ஸ்டைலான டிசைன் அம்சங்கள் என இந்த பைக்கில் சில குறைகளும் இருக்கின்றன.

பஜாஜ் பைக்கின் இரு வேரியன்ட்களுக்கு இடையே கச்சிதமாக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் யமஹா R15 V3.0 பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை, 1.43 லட்சம் ரூபாய். இது எதிர்பார்த்தபடியே டிசைன், பர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவத்தில் சொல்லியடிக்கிறது. ஆனால், மிகவும் ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷன், சொகுசற்ற பில்லியன் சீட், சுவிட்ச் மற்றும் பிளாஸ்டிக் தரம், ஏபிஎஸ் இல்லாதது ஆகியவை மைனஸ். இதற்குப் பதிலாக பின்பக்க Metzeler ரேடியல் டயர் ஆப்ஷனலாக வாங்கிக் கொள்ளலாம் என்றாலும், அது ரேஸ் டிராக்கில் பயன்படுத்துவதற்குத்தான் சரியாக இருக்கும். தவிர, இதன் விலையும் மிக அதிகம்! (10,000 ரூபாய்)

இரண்டு பைக்குகளுக்கும் ஃபுல் ஃபேரிங், லிக்விட் கூல்டு இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், 4 வால்வ், LED டெயில் லைட், MRF டியூப்லெஸ் டயர்கள் எனச் சில ஒற்றுமைகள் இருந்தாலும், இரண்டுமே வெவ்வேறுவிதமான ரைடர்களை மனதில்வைத்து வடிவமைக்கப்பட்டவையே. எனவே, ரேஸ் ஆர்வம்கொண்டவர்களுக்கு R15 V3.0 பைக்கும், வேகத்தை விரும்புபவர்களுக்கு பல்ஸர் RS 200 பைக்கும் நல்ல சாய்ஸ். ஆனால், இதில் தினசரிப் பயன்பாட்டைக் கருத்தில்கொள்ளும்போது, பஜாஜ் பைக்கே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism