Published:Updated:

டெஸ்ட்டிங்கில் புதிய 2019 யமஹா FZ-Fi... என்ன எதிர்பார்க்கலாம்?!

இன்ஜின் - கியர்பாக்ஸ் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யவேண்டிய தேவை யமஹாவுக்கு இருக்காது என்றாலும், பவர் மற்றும் டார்க் விஷயத்தில் முன்னேற்றம் வேண்டும்!

டெஸ்ட்டிங்கில் புதிய 2019 யமஹா FZ-Fi... என்ன எதிர்பார்க்கலாம்?!
டெஸ்ட்டிங்கில் புதிய 2019 யமஹா FZ-Fi... என்ன எதிர்பார்க்கலாம்?!

4 ஆண்டுகள்.... யமஹாவின் இரண்டாம் தலைமுறை FZ-Fi விற்பனைக்கு வந்து ஆகியிருக்கும் நாள்கள்! கார்புரேட்டர் உடனான 153 இன்ஜின் கொண்ட FZ-16, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் உடனான 149சிசி இன்ஜின் கொண்ட FZ-Fi பைக்காக உருமாறி, அசத்தலான வெற்றியையும் பெற்றுவிட்டது. ஆனால், இந்த 4 ஆண்டுகளில் கலர் - கிராஃபிக்ஸ் ஆப்ஷன் - பின்பக்க டிஸ்க் பிரேக் - அகலமான ரியர் வியூ மிரர்களைத் தாண்டி, மெக்கானிக்கலாகவோ டிசைன் ரீதியிலோ எந்த மாற்றத்தையும் பைக் பெறவில்லை. இதற்கிடையே பல்ஸர் NS160 Twin Disc, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, ஹோண்டா ஹார்னெட் ABS, சுஸூகி ஜிக்ஸர் ABS எனப் போட்டியாளர்கள் புதிய அவதாரத்தில் வந்திருப்பதால், கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருக்கிறது யமஹா. 

தற்போது இணைய உலகில் புதிய FZ-Fi பைக் நொய்டாவில் டெஸ்ட்டிங்கில் இருக்கும் ஸ்பை படங்கள் வைரலாகப் பரவிவருகின்றன. இதைப் பார்க்கும்போது, அடுத்த ஆண்டில் இவை அறிமுகமாவதற்கான சாத்தியங்கள் அதிகம் எனத் தோன்றுகிறது. புதிய FZ-Fi பைக்கின் கட்டுமஸ்தான டிசைன் அப்படியே இருக்கும் என்றாலும், முன்பைவிட ஆஜானுபாகுவான பாடி பேனல்கள் இங்கே புதிதாக இருக்கலாம். ஃப்யூல் டேங்க்கும் பெரிதாக மாறியிருக்கலாம். பெரிய ஷார்ப்பான Tank Shrouds/Extensions இருப்பதால், இன்ஜினில் ஆயில் கூலர் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. இவை அசப்பில் பார்க்க FZ-25 பைக்கில் இருப்பதுபோலவே உள்ளன. கூடுதலாக இன்ஜினுக்குச் சிறிதாக Belly Pan இருப்பதும் ப்ளஸ். 

ஆனால், FZ-Fi V2.0 பைக்கில் ஸ்ப்ளிட் சீட் மற்றும் ஸ்ப்ளிட் கிராப் ரெயில் இருக்கும் நிலையில், படங்களில் இருக்கும் பைக்கில் பழைய FZ-16 பைக் போல சிங்கிள் பீஸ் சீட் மற்றும் சிங்கிள் பீஸ் கிராப் ரெயில் இருக்கிறது. எனவே, டெயில் லைட் மற்றும் நம்பர் பிளேட் இருக்கும் பகுதி ஆகியவை தற்போதைய மாடலில் இருப்பதுபோலவே இருந்தாலும், பின்பக்க பாடி பேனல் வித்தியாசமாகவே உள்ளது. தவிர, இதன் அலாய் வீல்கள் R15V3.0 பைக்கிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன என்பதுடன், எக்ஸாஸ்ட் பைப்பும் முன்பைவிட அளவில் பெரிதாகியிருக்கிறது. முன்பக்க டிஸ்க் பிரேக்கின் சைஸும் பெரிதாகியிருப்பது தெரிகிறது. இது FZ-25 பைக்கிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். பின்பக்க Tyre Hugger கூடவும்தான்...

FZ-25, R15V3.0 ஆகிய பைக்குகளைத் தொடர்ந்து, FZ-Fi பைக்கிலும் LED ஹெட்லைட் இடம்பெறவிருக்கிறது. முன்பைவிடப் பெரிதாகத் தெரியும் ஹெட்லைட் இதை உறுதிப்படுத்திவிடுகிறது. இதாவது FZ-25 பைக்கைவிடச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஏப்ரல் 1, 2019 முதலாக 125சிசி-க்கும் அதிகமான பைக்கில் ஏபிஎஸ் கட்டாயம் என்பதால், இதில் விலை குறைவான சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்படலாம். ஏற்கெனவே, Fi இருப்பதால், இன்ஜின் - கியர்பாக்ஸ் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யவேண்டிய தேவை யமஹாவுக்கு இருக்காது என்றாலும், பவர் மற்றும் டார்க் விஷயத்தில் முன்னேற்றம் வேண்டும்! 

ஏனெனில் தனது வகையிலேயே எடை குறைவான பைக்காக FZ-Fi V2.0 இருக்கிறது என்றாலும், பவர் குறைவான பைக்கும் இதுதான் என்பதை நினைவில் கொள்ளவும். மற்றபடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், இண்டிகேட்டர்கள், ரியர் வியூ மிரர்கள், சஸ்பென்ஷன், சேஸி ஆகியவற்றில் எந்த மாறுதலும் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒருவேளை படத்தில் இருப்பது பேஸ் மாடலாகவும், FZ-S எனும் டாப் மாடலில் ஸ்ப்ளிட் சீட்களை யமஹா வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! அதேபோல, FZ-Fi பைக்கில் பின்பக்க டிரம் பிரேக் இருக்காமல் போகலாம். இந்த பைக் போலவே, சுஸூகி ஜிக்ஸரும் விரைவில் பேஸ்லிஃப்ட் பெற உள்ளது.

Pictures: WWW.TeamBHP.Com