பிரீமியம் ஸ்டோரி

தென்னாப்பிரிக்கா... ஒரு கல்லூரி... அங்கிருக்கும் மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார் ஓர் இந்திய விஞ்ஞானி. மிகவும் மரியாதைக்குரியவர்; வாழ்ந்த காலத்திலேயே பலராலும் போற்றப்பட்டவர். அன்றைக்கு அவர் பேசிய பேச்சு கடவுள் குறித்ததாக இருந்தது. ஒரு மாணவர், தெளிவாகவே அந்த விஞ்ஞானியைப் பார்த்துக் கேட்டுவிட்டார்... 

கடவுள் எங்கே?

``ஐயா! கடவுள் இருக்கிறாரா... இல்லையா?’’

அந்த விஞ்ஞானியோ அசரவில்லை. கேள்வி கேட்ட மாணவருக்குப் பதிலாக ஒரு கேள்வியைக் கேட்டார்... ``பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள எவ்வளவு நேரம் ஆகும்?’'

``24 மணி நேரம்.’’ - அந்த மாணவனோடு சேர்ந்து வகுப்பறையே பதில் சொன்னது. 

``சூரியனைப் பூமி சுற்றிவர எவ்வளவு காலமாகும்?’’

``365 நாள்கள்.’’ கோரஸாக பதில் வந்தது. ``சூரியன் நாமிருக்கும் பால்வீதியைச் சுற்றிவர எவ்வளவு காலம் ஆகும்?’’ இதற்கு அந்த வகுப்பிலிருந்த யாராலும் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அந்த விஞ்ஞானியே பதில் சொன்னார்... 

``சூரியன், பால்வீதியைச் சுற்றிவர 21.5 கோடி ஆண்டுகள் ஆகும். ஒரு பால்வீதியை நம் கண்ணுக்குத் தெரியும் சூரியன் சுற்றிவரவே இவ்வளவு காலம் ஆகிறது. இந்தப் பால்வீதிபோல கோடிக்கணக்கில் இருக்கின்றன. இவையெல்லாம் அண்டத்தில், ஒரு குறிப்பிட்ட தூரத்தில், காலத்தில் மிகச் சரியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் துல்லியமான இயக்கத்தை உருவாக்கியது யார்... இந்த அற்புதமான இயக்கத்தை நிர்ணயித்தது யார்... சொல்லுங்கள்!’’

யாரும் பதில் சொல்லவில்லை. விஞ்ஞானியே பதில் சொன்னார்... ``ஆக, நம் கண்ணுக்கு முன் தெரியும் ஒரு சக்தி சூரியன். நம் கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக்கொண்டிருக்கும் சக்தி கடவுள் என்று நான் நம்புகிறேன்.’’ இப்படி பதில் சொன்ன விஞ்ஞானி வேறு யாருமல்ல. மறைந்த நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். மாணவர்கள் எழுந்து நின்று அந்தப் பதிலுக்குக் கரவொலி எழுப்பினார்கள். கரவொலி அடங்க நீண்டநேரம் பிடித்தது.

- பாலு சத்யா

ஒரு துளி சிந்தனை:

`வாழ்க்கையில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை; அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.’’

- மேரி க்யூரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு