Published:Updated:

`நானே ராஜா!’ - சொல்லியடித்த வேர்ல்டு செஸ் சாம்பியன் கார்ல்ஸன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`நானே ராஜா!’ - சொல்லியடித்த வேர்ல்டு செஸ் சாம்பியன் கார்ல்ஸன்
`நானே ராஜா!’ - சொல்லியடித்த வேர்ல்டு செஸ் சாம்பியன் கார்ல்ஸன்

`நானே ராஜா!’ - சொல்லியடித்த வேர்ல்டு செஸ் சாம்பியன் கார்ல்ஸன்

" இது நாங்கள் பார்த்து வியந்த கார்ல்ஸனின் விளையாட்டு அல்ல " என்கிறார் கிராம்னிக். 15 ஆண்டுகளை சதுரங்கத்தை ஆண்ட கேரி காஸ்ப்ரோவோ, " கார்ல்ஸன் பதட்டம் அடைகிறாரோ " என சந்தேகத்துடன் தெரிவித்தார். ஆம், இந்த டோர்னமென்ட் கார்ல்ஸனுக்கு அப்படித்தான் இருந்தது. கார்ல்ஸனுக்கு எதிராக ஆடிய ஃபேபியான கருணா வென்றிருந்தால், பாபி ஃபிஷருக்குப் பின், ஒரு அமெரிக்கர் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுவிட்டார் என பத்திரிகைகள் எழுதியிருக்கும்.  இந்த டோர்னமென்ட் கார்ல்ஸனுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஒரு போட்டியில் கூட தோற்காமல் கார்ல்ஸன் வென்ற முதல் டோர்னமென்ட் இது தான். 

50 மணி நேரப் போட்டி, ஒரு கைகுலுக்கலில் முடிவுக்கு வந்தது. உலகெங்கிலும் உள்ள செஸ் பிரியர்கள், யார் அடுத்த செஸ் சாம்பியன் என எதிர்பார்த்துக் காத்திருக்க, நான்காவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் மேக்னஸ் கார்ல்ஸன்.  


இந்தியாவில் செஸ் பிரபலமாகக் காரணமானவர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். 2007 - 2012-ம் ஆண்டு வரை, தொடர்ந்து நான்கு முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஆனந்த், ஐந்தாவது முறையாகவும் கண்டிப்பாக கோப்பையை வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், 2013  உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது சென்னையில்! செஸ் விளையாட்டில் 23 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆனந்தும், 23 வயதேயான நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸனும் மோதினர். ``எங்க ஏரியா உள்ள வராத” என இந்திய ரசிகர்கள் ஆனந்துக்கு ஆதரவு தந்தனர்.  

ஆனால், `ஹோம் கிரவுண்ட்’ ஆனந்துக்கு நெருக்கடியைத் தந்தது என்பதே நிதர்சனம். தவிர, கார்ல்ஸன் - ஆனந்த் இருவருக்கும் இடையிலான ஜெனரேஷன் கேப் பெரிய விஷயமாகப் பேசப்பட்டது. `கம்ப்யூட்டர் கேமில்’ கில்லியான கார்ல்ஸன் நேர்த்தியான ஆட்டத்தால் உலகக் கோப்பையைத் தட்டிச்சென்றார். அடுத்த ஆண்டு ரீமேட்ச். ஆனந்த் - கார்ல்ஸன் மோதிய 2014 உலக சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் நடைபெற்றது. இந்த முறையும் ஆனந்துக்குத் தோல்வி. 2016-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியில், இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான ரஷ்யாவின் செர்ஜி கர்ஜகினைத் தோற்கடித்த கார்ல்ஸன், ஹாட்ரிக் கோப்பையை அடித்து, `செஸ் உலகின் ராஜா’வாக உருவெடுத்தார். மூன்று முறை உலக  சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது மட்டுமன்றி, செஸ் உலகில் ஜென்Z தலைமுறையின் ஃபேவரிட் ஆனார் கார்ல்ஸன். 


2018 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் லண்டனில் நடைபெற்றன.  நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸனும், அமெரிக்காவின் ஃபேபியான கருணாவும் மோதினர். இந்த முறையும் கார்ல்ஸன்தான் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார் என்று ரசிகர்கள் கணித்திருந்தனர். 20 நாள்கள், 50 மணி நேரம் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளின் முடிவில், கார்ல்ஸன்தான் சாம்பியன்! ஆனால், வரலாற்றில் இப்படி ஒரு போட்டியைக் கண்டதில்லை என செஸ் வட்டாரத்தில் பேச்சு! 


கார்ல்ஸன் - கருணா இடையே நடந்த 12 ரெகுலர் போட்டிகளும் டிராவில் முடிந்தன. 132 ஆண்டுகள் செஸ் வரலாற்றில் முதன்முறையாக, ரெகுலர் போட்டிகள் அனைத்தும் டிராவில் முடிய, டை-ப்ரேக்கர் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. போட்டி மேலும் விறுவிறுப்பானது. 6 - 6 புள்ளிகள் பெற்றுச் சமநிலையில் இருந்த போட்டியாளர்களுக்கு, நான்கு சுற்றுகள் கொண்ட டை-பிரேக்கர் மிக முக்கியமானது. ஃபேபியானாவும் சாதாரணமானவர் அல்ல! சாம்பியன்ஷிப் போட்டியே என்றாலும், ``நான்தான் ராஜா” என்ற நினைப்போடு, கூல்-ஆட்டிட்யூட் உடன் விளையாடும் கார்ல்ஸனே, ஃபேபியவின் மிரட்டலான ஆட்டத்துக்குத் திணறினார். 

ஆனால், அது நீண்ட நேரம் அது நீடிக்கவில்லை. 12-வது போட்டியின் முடிவில், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், கார்ல்ஸன் போட்டியை டிரா செய்தார். கடைசி நொடி வரை கிடைக்கும் சிறிய வாய்ப்புகளையும், யுக்தியுடன் பயன்படுத்திப் போட்டியில் வெற்றி பெறும் கார்ல்ஸனுக்கு, டிரா செய்ய அறவே பிடிக்காது. ஆனால், சாம்பியன்ஷிப்பின் முக்கியப் போட்டியில் கார்ல்ஸன் டிரா செய்ததற்கு செஸ் நிபுணர்கள் விமர்சனம் செய்தனர். ``வெற்றி பெற வேண்டிய போட்டியை கார்ல்ஸன் டிரா செய்தது அதிர்ச்சியளிக்கிறது” என்று செஸ் ஜாம்பவன் கேரி கேஸ்ப்ரோவ் வருத்தம் தெரிவித்தார். 


கார்ல்ஸன் மாஸ்டர் பிளானோடுதான் போட்டியை டிரா செய்தார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. `ராபிட்’ முறையில் தொடங்கிய டை-பிரேக்கரின் முதல் இரண்டு சுற்றுகளிலும் கார்ல்ஸன் வெற்றி பெற்றதால், மூன்றாவது சுற்றில் கட்டாய வெற்றி என்ற டென்ஷனில் களமிறங்கினார் ஃபேபியானா. மூன்றாவது சுற்றும் கார்ல்ஸன் வசமாக, 3-0 என்ற புள்ளிக்கணக்கில் நான்காவது முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார் கார்ல்ஸன்! 

முதல் இரண்டு போட்டிகளையும் வென்றவுடன் கார்ல்ஸனுக்கு , மூன்றாவது போட்டியை டிரா செய்தாலே போதும் என்கிற நிலை. கருணாவுக்கோ வென்றாக வேண்டும் என்கிற பிரஷர். 

`மொசார்ட் ஆஃப் செஸ்’ என்றழைக்கபடும் கார்ல்ஸன், க்ளாசிக்கல் செஸ் மட்டுமன்றி, ராபிட் (Rapid), ப்ளிட்ஸ் (Blitz) எனப்படும் செஸ் முறையிலும் இவர்தான் கிங்! (ராபிட், ப்ளிட்ஸ் செஸ் முறையில், நகர்தலுக்கு நேரக்கட்டுப்பாடு வழங்கப்படும்) 2018 சாம்பியன்ஷிப்பின் போது, இரு வீரர்களிடையே ``உங்களின் ஃபேவரைட் செஸ் ப்ளேயர் யார்?” என்ற கேள்வி கேட்ட போது,  ``பாபி ஃபிஷர்” என ஃபேபியானா பதிலளித்தார். மேக்னஸ் கார்ல்ஸனோ, ``மைசெல்ஃப், மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் இருந்த கார்ல்ஸன்தான் என்னுடைய ஃபேவரிட்” என்றார் சற்றும் யோசிக்காமல்!  

12 போட்டிகளும் தொடர்ந்து டிரா ஆனதில் கார்ல்ஸனுக்குத் தெரியும், இது அவருடைய `பெஸ்ட்’ இல்லையென்று! விடாப்பிடியான மனநிலையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும்தான் கார்ல்ஸனின் ஸ்டைல் ஆஃப் வின்னிங். டை-பிரேக்கரில் அவரது ஆட்டம் அதை நிரூபித்தன. ``இந்தப் போட்டியில் தோல்வியடைந்திருந்தால், உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பில் நான் விளையாடும் கடைசிப் போட்டியாக இருந்திருக்கும்” என்றார் இந்த செஸ் சாம்பியன். உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ள கார்ல்ஸன், இன்னொருமுறை உலக சாம்பியனாகி விட்டால், GOAT பட்டியலில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு