Published:Updated:

என்னஞ்சல்

என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

Published:Updated:
என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

யா ஹவுஸ் ஓனரையா...

ஊரு உலகத்துல எல்லாருக்கும் சொந்த வீடுன்றது சாத்தியமே இல்ல. உங்களை மாதிரி மவராசனுக மாடிமேல மாடி கட்றீங்களோ இல்லியோ, வீடு மேல வீடு கட்டிடறீங்க. கட்டிவெச்ச வீட்டை, பல கண்டிஷன்கள் போட்டு வாடகைக்கு விடறதாலதான் ஏதோ எங்களைப்போல ஆட்கள் இந்த ஊருக்குள்ள, மனுஷங்களோட மூணு முக்கியத் தேவைகள்ல ஒரு தேவையான ‘உறைவிடம்’ங்கறதை ஓரளவு நிறைவேத்திட்டிருக்கோம். அதுக்கு மொதல்ல நன்றிங்க.

என்னஞ்சல்

ஆனா பாராட்டவெல்லாம் இந்த லெட்டரை எழுதலைங்க. இப்படி ஒரு ஓப்பன் லெட்டர்லகூட என் சங்கடத்தைக் கொட்டித் தீர்க்கலைன்னா அப்றம் எப்பதான் சொல்லியழ?

‘ஆடாதடா மனிதா... ஆறடிதான் கடைசில’னு ஸ்லோகம் மாதிரி ஸ்லோகன்லாம் சொன்னாலும், நீங்க பலசமயம் பண்ற டார்ச்சர்ல டங்குவாரு அந்துருதுங்கய்யா. நாட்ல என்னை மாதிரி மாசச் சம்பளக்காரய்ங்களை, ஈஎம்ஐ அரக்கன்கிட்ட பிடிச்சுக் குடுக்கறதே உங்களை மாதிரி ஆளுகதான். உங்க கொடுமை தாங்காம, கஞ்சிக்குக் கஷ்டப்பட்டாலும் கடன் வாங்குவோம்னு வாங்கி, எலிவளையானாலும் தனிவளைனு சொந்த வீடு கட்டிப் போயிடறோம்.

‘ஒன்லி வெஜ்’, ‘ஒன்லி பிராமின்’, ‘ஒன்லி ஃபேமிலி’ ‘ஒன்லி 3 மெம்பர் ஃபேமலி’னு ‘ஒன்லி’ போர்டு மாட்டற ஹவுஸ் ஓனரா இருந்தா எங்க நிலைமை அவ்ளோதான். வீடு கிடைக்கணுமேன்னு வாழ்க்கைமுறையவே மாத்திக்கிட்ட பல நண்பர்களை எனக்குத் தெரியும். ‘ஒன்லி’ ஹவுஸ் ஓனரா இருந்தாப் போதுமா, உங்களைச் சுத்தியிருக்கிற உலகத்தைப் பாருங்க. நீங்க விரும்புற மாதிரியான ‘ஒன்லி மனிதர்களால்’ ஆனதா உலகம்?

வீடு பாக்க வர்றப்பவே ஆரம்பிச்சிருது உங்க அட்ராசிட்டி. வீடு எனக்குப் பிடிக்குமா, நான் வாடகைக்குத் தங்க ஏத்துக்குவேனானு எதுவுமே தெரியாட்டியும் என் பேரு, ஊரு, குடும்ப மெம்பர்ஸ் டீட்டெய்ல்ஸ், வேலை செய்யற இடம், போன் நம்பர், உணவுமுறை, பர்சனல் பழக்க வழக்கங்கள், ராசி, நட்சத்திரம், உடம்பிலுள்ள மச்சம்னு எல்லாத்தையும் கேள்வியா கேட்டு வாங்கிக்கறீங்க. அதுவும், உங்களை ஜென்டில்மேனா காட்டிக்க என்ன ஜாதின்னு நேரடியா கேட்காம சுத்தி வளைச்சு அப்பா யாரு, என்ன தொழில்னு ஆரம்பிச்சு அந்தப் பாய்ன்ட்டைப் பிடிக்க டிரை பண்ணுவீங்க பாருங்க... அங்கயே உங்க நேர்மை நார்நாராக் கிழிஞ்சு தொங்கும். 

எல்லா டீட்டெய்லும் சொல்லித்தான் ஆகணும். என்ன பண்றது... புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலை செய்யற ரெண்டு ஆபீஸுக்கும் சென்டரா வீடு வேணும்; புள்ளைங்க ஸ்கூலுக்கு வேன் வரும் ரூட்ல இருக்கணும்; பாதுகாப்பான இடமா வேணும்... இப்படி எங்க தேவைகளுக்கும் உங்க வீடு மேட்சா இருக்கேன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு சொல்றதுதான்.

ஒருவழியா எல்லாம் கேட்டுட்டு, வீட்டைக் காட்ட நடப்பீங்க பாருங்க... நீங்க ஏதோ ராஜா மாதிரியும், நாங்க உங்க அரசவைல சேவகன்மாதிரியும் கையக்கட்டாத குறையா வருவோம். வீட்டைக் காமிச்சு 10 கட்டளைகள் போடுவீங்க. ஆணி அடிக்கக் கூடாது; படம் செவுத்துல ஒட்டக் கூடாது; நைட் 10 மணிக்கு மேல லைட் எரியக் கூடாது; சமைக்கறப்ப புகை வரக் கூடாது; உங்களுக்கு நான் வெஜ் ஆகாதுன்னா, நாங்களும் நான் வெஜ் சமைக்கக் கூடாது; காலைல வாசத்தொளிச்சுக் கோலம் போடாம இருக்கக்கூடாது; கூடாது...கூடாது... கூடாது. ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ... இவ்ளோ கூடாது.

பேச்சுலர், சிங்கிள் மதர், முஸ்லிம், போலீஸ், வக்கீல், மூன்றாம் பாலினத்தவர்னு சிலரை நீங்கள்லாம் ஒதுக்கற விஷயம் இருக்கே. ‘நீங்கள்லாம் பேச்சிலர் ஆகாம பொறக்கும்போதே மேரேஜ் பண்ணிட்டுப் பொறந்தீங்களாய்யா’னு தோணும். இன்னைக்குப் பேப்பர் வாங்கி ருந்தீங்கன்னா எடுத்துப் பாருங்க... அதுல குற்றச்செயல்கள்ல ஈடுபடற வங்கள்லாம் எவ்ளோ டீசன்டு டகால்டிகளா இருக்காங்கன்னும், நீங்க ஒதுக்கற மேல இருக்கற கேட்டகிரி ஆளுக அதுல எத்தனை சதவிகிதம்னும் பாருங்க!

என்னஞ்சல்

அடுத்தது அட்வான்ஸ் வைபவம். ஆக்சுவலா ஒரு மாச வாடகைதான் அட்வான்ஸ் வாங்கணும்னு ஒரு கேஸ்ல கோர்ட்டே சொல்லியிருக்கு. போனாப்போவுது, மூணு மாச வாடகைகூட அட்வான்ஸா கேளுங்க. ஆனா ஆறு மாச வாடகை, பத்து மாச வாடகைனு உங்களுக்கு இருக்கற செலவுக்கு எங்க தலைல மொளகாய் அரைப்பீங்க.

அக்ரிமென்ட்னு ஒண்ணு போடுவீங்க. அது வருஷா வருஷம் வாடகை ஏத்தறதுக்குமட்டும்தான் யூஸாகும். மத்தபடி அக்ரிமென்ட்ல போட்டிருக்கற வாடகைக்கு ஒரு ரசீதுகூட உங்ககிட்ட இருந்து வராது.

என்னமோ எங்க தலையெழுத்துன்னு வீட்டுக்கு ஓகே சொல்லி, குடிவந்துட்டோம். அப்பறம் உங்க இன்னொரு வெர்ஷனைக் காட்டுவீங்க.  
 
பேச்சுலருக்கு வீடு கொடுத்தா எத்தனை மணிக்குப் போறோம், எத்தனை மணிக்கு வர்றோம், வீட்ல எந்தெந்த ரூம்ல ஃபேன் ஓடுது, லைட் எரியுதுனு ஆரம்பிச்சு நேரடியாவும் மறைமுகமாகவும் ஒரு ராணுவ ஆட்சியே நடத்துவீங்க. வாட்டர் டேங்க் க்ளீன் பண்றது, உங்க பரண்ல இருக்கறதத் தேடி எடுக்கறது, காய்கறி வாங்கிட்டு வரதுன்னு, உங்க வீட்டு வேலைகளை அவனை விட்டுச் செய்யச் சொல்லி அவனை அறிவிக்கப்படாத அடிமையாவே ஆக்கிடுவீங்க.

குடும்பம்தான் வேணும்னு குடிவெச்சவங்களையும் சும்மாவா விடறீங்க? எப்ப வேணா எங்க வீட்டுக்கு... அதான் உங்க வீட்டுக்கு ‘சோதனை’க்கு ஆஜராய்டுவீங்க. எதுக்கு இது இங்க இருக்கு; அது ஏன் அப்டி வெச்சிருக்கீங்கனு அந்த ஒரு மணிநேரத்துக்கு எங்களை பயத்துலேயே உறைய வெச்சிருப்பீங்க.

அதுபோக, எங்க வீட்டுக்கு விருந்தாளிகள் யார் வரணும், எப்போ வரணும்கறதெல்லாம் நீங்கதான் தீர்மானிப்பீங்க. அதுலயும் கொஞ்சம் வயசானவங்க வந்து, ரொம்ப நாள் தங்கற மாதிரி இருந்தா “அவர் இருக்கக்கூடாது. எங்க வீட்ல ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆய்டுச்சுன்னா?” அப்டினு கேட்பீங்க பாருங்க. மனசாட்சியே இல்லையாய்யானு கத்தத்தோணும். வடமாநிலத்திலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்காகப் பத்து நாள் என் தோழி வீட்ல தங்க வந்திருந்த உறவினரை, ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட்டா மட்டும் பார்த்த உங்களை எந்தக் கணக்கில் சேர்க்க?  உங்களுக்கு ‘எக்ஸ்ட்ரா டிக்கெட்டாக’த் தெரியும் அந்த உயிரும் தண்ணீர் பயன்படுத்தும்; அவதிப்படும்; இருமும்; அழும்ங்கறதெல்லாம் உங்களுக்குத் தெரியாமப்போனது எப்படி?

கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்கூட, இன்னொண்ணும் சேர்த்துக்கலாம். அது ‘வாடகை வீட்டைக் காலிபண்ணிப் பார்.’  ஒருவேளை வீடு காலிபண்ற சூழல்ல அந்த அட்வான்ஸை நீங்க திருப்பித் தரணும்லியா? அதுக்கு நீங்க கணக்கு சொல்வீங்க பாருங்க... ஆடிட்டிங்ல கோல்டு மெடல் வாங்கி அம்பானி கம்பெனிக் கணக்கை அசால்டா டீல் பண்றவனுக்குக்கூடப் புரியாது அது.

வீடு கட்டினதுல இருந்து ஏற்கெனவே இருந்த ரிப்பேரையெல்லாம் எங்க தலைல கட்டி விட்டுடுவீங்க. கடைசில கணக்குப் போட்டு, ‘நீங்கதான் தர்றமாதிரி வருது’ம்பீங்க.

நாங்களும் சக மனிதர்கள்தான். சக மனிதர்கள் மீதான இயல்பான நேசத்தை, இயற்கைப் பேரிடர்கள் வந்தாதான் தெரிஞ்சுக்கணுமா என்ன? கடைசியா ஒண்ணு சொல்றேங்கய்யா. யாராச்சும் எங்ககிட்ட ‘உங்க வீடு எங்க இருக்கு’னு கேட்டா நாங்க தங்கற வீட்டைத்தான் எங்க வீடுனு சொல்றோம். அது உங்களுக்குப் புரியுதா இல்லையான்னே தெரியல. அங்க இருக்கற வரை ரத்தமும் சதையும் அந்த வீட்டுக்கும் இருக்குதுங்கற உணர்வு எங்களுக்கும் உண்டு.  

உங்க வீட்ல, எங்களை ‘வாழ’விடுங்க... ப்ளீஸ்.

இப்படிக்கு

வீடு கட்ட வங்கி லோனுக்கு அலைந்து கொண்டிருக்கும்,

ஒருவேளை சொந்த வீடு வாங்கினால் வாடகைதாரரைச் சகமனிதராய் நடத்த விரும்பும்

ஓர் அப்பாவி

ஓவியம்: ரமணன்