Published:Updated:

ஆண்டு இறுதியில் புதிய கார் வாங்குவது லாபமா, நஷ்டமா?!

புதிய மாடலுக்கு இடம்வேண்டி பழைய மாடலை விரைவாக விற்பனை செய்யவேண்டும் என்பதே, டீலரின் எண்ணமாக இருக்கும்; தவிர கார் தயாரிப்பாளர் சொல்லும் மாதாந்திர விற்பனை இலக்கையும் எட்டவேண்டும்.

ஆண்டு இறுதியில் புதிய கார் வாங்குவது லாபமா, நஷ்டமா?!
ஆண்டு இறுதியில் புதிய கார் வாங்குவது லாபமா, நஷ்டமா?!

கார்.... வீட்டுக்கு அடுத்தபடியாக ஒருவர் தன் வாழ்வில் பெரும் தொகையைக் கொடுத்து, தனக்கென வாங்கும் மதிப்புமிக்கப் பொருள். இதில் அந்த மனிதனின் உழைப்புடன் உணர்ச்சிகளும் கலந்திருப்பதால், பெரும்பாலும் பிறந்தநாள் - கல்யாண நாள் - பண்டிகை நாள் என அவருக்கு ஸ்பெஷலான ஏதாவது ஒருநாளில்தான் புதிய காரை வாங்கும் படலம் நடைபெறும்! டிசம்பர் மாதத்தில் ஒருவர் புதிய காரை வாங்கினால், பல ஆயிரங்களை மிச்சப்படுத்தலாம். ஏனெனில், வருட இறுதி என்பது, கார் விற்பனையின் மந்தமான காலகட்டமாகவே இருக்கும்.

'அடுத்த மாசத்துல கார் வாங்கினா, RC புக்ல அடுத்த வருஷம் பிரின்ட் ஆகுமே' எனப் பலர் காத்திருப்பதால், இந்நேரத்தில் கார்களுக்கு அதிரடித் தள்ளுபடிகள் வழங்கப்படுவது வாடிக்கை. இதனால் தங்கள் வசம் இருக்கும் மாடல்களை விற்றுவிட்டு, அடுத்த வருடத்துக்கான கார்களை டீலர்கள் வாங்கமுடியும். தவிர கார் நிறுவனம் சார்பில் அவர்களுக்கு அந்த மாதத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விற்பனை இலக்கை எட்டிவிடவும் முடியும். அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும்போது, நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

டிசம்பரில் என்ன ஸ்பெஷல்?

ஒருவர் தேர்ந்தெடுக்கும் நிறுவனம் மற்றும் மாடலைப் பொறுத்தே, அதன் விலையில் ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். ஒருவேளை அது விற்பனையில் டல்லடிக்கும் மாடலாக இருந்தால், நிச்சயம் தள்ளுபடி வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, TTK ஆடிட்டோரியத்தில் நடக்கும் இசைக் கச்சேரிகள், Hot Air பலூன் விழா என டிசம்பர் மாதமே விழாக்கோலத்தில் இருக்கும் என்பதால், சென்டிமென்ட்டாகச் சிலர் புதிய கார் வாங்குவதை ஆங்காங்கே பார்க்கமுடியும். இதனாலேயே வருட இறுதியில் கார் தயாரிப்பாளர்கள்/டீலர்கள் அதிக ஆஃபர்களை வழங்குகின்றன. எனவே வழக்கமான கேஷ் டிஸ்கவுன்ட், கார்ப்பரேட் - எக்ஸ்சேஞ்ச் - லாயல்ட்டி போனஸ் உடன் இலவச இன்சூரன்ஸ், இலவச ஆக்ஸசரீஸ், ஸ்பெஷல்/லிமிடெட் எடிஷன் பேக்கேஜ் ஆகியவை சேர்ந்து கிடைக்கும். 

ஏனெனில், புத்தாண்டு ஆரம்பித்த பிறகு பல கார் நிறுவனங்கள், தமது தயாரிப்புகளின் விலையை 2-4% வரை விலை ஏற்றம் செய்வதை தார்மிகக் கடமையாகக் கொண்டுள்ளார்கள். உதாரணத்துக்கு எட்டியோஸ் லிவா காரின் 1.2 VX பெட்ரோல் டாப் வேரியன்ட்டை (7.39 லட்சம் - சென்னை ஆன்ரோடு விலை) எடுத்துக் கொள்வோம். அடுத்த ஆண்டின் துவக்கம் முதல் இதன் விலையை டொயோட்டா 4% உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. டிசம்பர் 2018-ல் மாதத்தில் 25 ஆயிரம் ரூபாய் வரை இந்த காருக்கு அந்த நிறுவனம் தள்ளுபடி தருகிறது. எனவே நீங்கள் ஜனவரி 2019-ல் இந்த காரை வாங்க நேரிட்டால் 25 ஆயிரம் + 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். தவிர இன்சூரன்ஸ், எக்ஸ்டென்டட் வாரன்ட்டி ஆகியவற்றில் கிடைக்கும் தள்ளுபடியையும் இழக்க நேரிடும். எனவே Depreciation பற்றி கவலைபடாமல், புதிய காரை வாங்கலாம் மக்களே!

டிஸ்கவுன்ட் எவ்வளவு பாஸ்?

ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்திலும், தன் கைவசம் இருக்கும் கார்களை விற்றுவிடவே எந்த டீலரும் விரும்புவார். ஏனெனில் முந்தைய ஆண்டு மாடலை கொடுத்துவிட்டு, அடுத்த ஆண்டுக்கான மாடலை வாங்கவே அவரின் மனஓட்டம் அமைந்திருக்கும். எனவே இந்த இடத்தில் வாடிக்கையாளருக்கு முன்னிலை தானாகக் கிடைத்துவிடுகிறது என்பதால், அதிக டிஸ்கவுன்ட்டைக் கேட்டுவாங்கும் உரிமை அவருக்கு உண்டு. இலவசமாக ஆக்ஸசரீஸ்களை நீங்கள் கேட்கிறீர்கள் என எடுத்துக்கொண்டால், Mud Flap - Footwell Mat - Door Visor எனக் காரில் ஸ்டாண்டர்டாக இல்லாத அம்சங்களைக் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். இது உங்கள் காரின் ஸ்டைலைக் கொஞ்சம் தூக்கிவிடும் என்பதுடன், பிராக்டிக்கலாகவும் இருக்கும். 

சில சந்தர்ப்பங்களில் ஒரு காரின் கடந்தாண்டு மாடலில் இருந்த சில வசதிகள், புதிய ஆண்டுக்கான மாடலில் மிஸ் ஆகியிருக்கும் அல்லது கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும். ஹூண்டாய், ஃபோர்டு ஆகிய நிறுவன கார்களில் இதனைப் பார்க்கமுடியும். எனவே நீங்கள் வாங்கப் போகும் காரில் அப்படி ஏதேனும் நடந்தால், அவற்றை டீலரிடம் ஆக்ஸசரீஸாக கேட்டுப்பெற்றுவிடவும். அவை அலாய் வீல், ஆடியோ/டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரிவர்ஸ் சென்சார்/கேமரா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மாதாந்திர விற்பனை இலக்கு என்பது இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதால், அவர்களும் வருட இறுதியில் தள்ளுபடிவிலையில் புதிய காருக்கான இன்சூரன்ஸை வழங்குவார்கள். எக்ஸ்டென்டன்ட் வாரன்ட்டியும் கிடைக்கும்.

டீல் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

முன்பே சொன்னதுபோல, புதிய மாடலுக்கு இடம்வேண்டி பழைய மாடலை விரைவாக விற்பனை செய்யவேண்டும் என்பதே, டீலரின் எண்ணமாக இருக்கும். தவிர கார் தயாரிப்பாளர் சொல்லும் மாதாந்திர விற்பனை இலக்கையும் எட்டவேண்டும். அந்த ஆண்டு மாடலை அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனை செய்யவேண்டும். எனவே, ப்ரஷரில் இருக்கும் டீலருக்கு, இந்த இடத்தில் வாடிக்கையாளர் கூடுதலாக அழுத்தம் தரலாம். ஒரே நிறுவன காருக்கு பல டீலர்கள் இருப்பர் என்பதால், இரு வெவ்வேறு டீலர்களிடம் கார் பற்றி விசாரித்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் 'நான் இன்னோரு டீலர்லயும் காரை பாத்து வைச்சிருக்கேன். அவங்க உங்களவிட அதிக டிஸ்கவுன்ட் தராங்க' என சேல்ஸ்மேனிடம் உண்மை நிலவரத்தைச் சொல்லி கூடுதலாகத் தள்ளுபடி பெறமுடியும். ஒருவேளை ஓரிடத்தில் சொல்லும் ஆஃபர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் கூட, 'தேங்க்ஸ் பாஸ். இருந்தாலும் நான் காருக்குக் கொஞ்சம் வெயிட் பண்றேன்' எனச் சொல்லியே அதிக டிஸ்கவுன்ட்டைக் கறக்கமுடியும்.

உங்கள் நண்பர் கொஞ்ச நாளுக்கு முன்பு ஒருகாரை வாங்கி, அதே மாடல் உங்களுக்கும் பிடித்திருக்கிறது என வைத்துக் கொள்வோம். எனவே அதைச் சொல்லியே, டீலரிடமிருந்து வழக்கத்தைவிடச் சிறந்த டீலை வருட இறுதியில் ஈஸியாகப் பெறமுடியும். எனவே அந்தநேரத்தில் அடித்துப் பேசுவதற்கு வசதியாக, அதே மாடலை விற்பனை செய்யும் டீலர்களில் 3 பேரையாவது நேரில் சந்தித்து விலை, ஆஃபர், வேரியன்ட்/கலர் ஆப்ஷன், வெயிட்டிங் பீரியட் ஆகியவை பற்றி நோட் பண்ணவும் மக்களே! சில கார் நிறுவனங்கள், தங்களின் இணையதளத்திலேயே ஆஃபர் பற்றிய விபரங்களைப் பட்டியலிட்டுள்ளதால், அதையும் மறக்காமல் பார்த்துவிட்டே டீலருக்குச் செல்லவும். அந்த மாடலில் கூடுதல் வசதிகளைத் தரும் ஸ்பெஷல்/லிமிடெட் எடிஷன் இருந்தால், அதை வழக்கமான மாடலின் விலைக்குக் கேட்டு வாங்கிவிடுவது நல்ல சாய்ஸாக இருக்கும். உங்கள் காருக்கான இன்சூரன்ஸ் தொகையை வெளியே விசாரித்துவிட்டு, அதிக விலையைச் சொல்லும் டீலரிடம் பேரம் பேசலாம்.