Published:Updated:

தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன்! - பூண்டு

தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன்! - பூண்டு
பிரீமியம் ஸ்டோரி
தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன்! - பூண்டு

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன்! - பூண்டு

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

Published:Updated:
தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன்! - பூண்டு
பிரீமியம் ஸ்டோரி
தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன்! - பூண்டு

ஞ்சறைப் பெட்டியில் `தனித்துவமான ஒருவன்’ பூண்டு!

`சன்னியோடு வாதம் தலைநோவு…’ எனத் தொடங்குகிறது பூண்டு சார்ந்த அகத்தியர் குணவாகடப் பாடல். காது நோய்கள், இருமல், தலைவலி, மூலம், வாத நோய்கள் போன்றவற்றுக்கு பூண்டு மருந்தாகச் செயல்படுகிறது என்பதை எடுத்துக்கூறுகிறது இந்தப் பாடல். மெல்லிய தேகத்தை உரித்ததும் பலவித மருத்துவக் குணமிக்க இயற்கை நுண்கூறுகளுடன் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் பூண்டு, மருத்துவ உலகின் உச்சாணி.

ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் பூண்டு நுழைந்ததாக வரலாறு பேசுகிறது. கி.மு 3000 ஆண்டுக்கால எகிப்திய கல்லறைகளில், பூண்டின் களிமண் படிவங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின்போது, ரஷ்யப் போர் வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்குக் கிருமிநாசினி செய்கையுடைய பூண்டு அதிகப் பலன் தந்தது. இதன் காரணமாக அப்போது, ‘ரஷ்யாவின் பென்சிலின்’ என்று பூண்டுக்குப் பெயர் சூட்டப்பட்டது. இலசுனம், உள்ளி, வெள்வெங்காயம் போன்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன்! - பூண்டு

5000 ஆண்டுகளுக்கு முன்பே `இதயத்தை வலுவாக்கும் பூண்டு’ எனும் மருத்துவக் குறிப்பு காணப்படுகிறது. எகிப்து, சீனா, கிரேக்கம் மற்றும் இந்தியாவின் பழைமையான மருத்துவ நூல்களில் பூண்டின் பெருமைகள் பேசப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்கத்தில், ஒலிம்பிக் போட்டியாளர்களின் செயல்திறனை அதிகரிக்க, வீரர்களின் மெனுவில் பூண்டு இடம்பிடித்திருக்கிறது.

பூண்டு, துளசி, ஆலிவ் எண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் `பெஸ்டோ’ சாஸ், இத்தாலி நாட்டில் புழக்கத்திலிருக்கிறது. பூண்டு, கொண்டைக் கடலை, ஆலிவ் எண்ணெய் மற்றும் சில கொட்டை வகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் சுவைமிக்க உணவுக்கு மத்தியக் கிழக்கு நாடுகளில் `ஹம்மஸ்’ என்று பெயர். அமெரிக்காவில் உள்ள `தி ஸ்டிங்கிங் ரோஸ்’ உணவகத்தின் அனைத்து உணவு வகைகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டு ஐஸ்க்ரீம் அந்த உணவகத்தின் சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன்! - பூண்டு


பூண்டின் வாசனைக்கும் குணத்துக்கும் அதிலிருக்கும் `அல்லிசின்’, ‘அல்லிசாடின்’ ஆகிய பொருள்களே காரணம். போலந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வின் முடிவில், பூண்டின் சத்துகள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, டி.என்.ஏ-வுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பது தெரியவந்தது. அதிக ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன் ரத்தக் குழாய்களில் உருவாகும் கொழுப்புப் படிமங்களைச் சிதைத்து மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்படாத வகையில் பூண்டு பார்த்துக்கொள்ளும். சருமத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கவும் பூண்டு உதவும். 

பெருங்குடல் புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவை பூண்டு பெருமளவில் குறைத்ததாக `ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. பூண்டு, புற்றுநோய் செல்களை அழிக்கும் நொதிகளைச் சுரக்கச் செய்வதுடன், செல்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்ஸை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. கிருமிகளை எதிர்த்துப் போராடும் லிம்போசைட்டுகள் மற்றும் மேக்ரோஃபேஜ்களின் செயல்திறனையும் பூண்டு அதிகரிக்கும். 

குடலின் அசைவுத் தன்மையை அதிகரித்து, மந்தமான செரிமானத்தைத் துரிதப்படுத்தும். செரிமான சுரப்புகளை முறைப்படுத்தி, உடலுக்கு வலுவைக் கொடுக்கும். குடல்பகுதியில் இருக்கும் தீமை செய்யும் பாக்டீரியாக்களை மட்டும் அழிக்கும். முதியவர்கள் பூண்டினை உணவில் அதிகமாகச் சேர்த்துவந்தால், இரட்டைப் பயனாக இதய நோய்களுடன் சேர்த்து, மூட்டுவலிகளும் வராமல் பார்த்துக்கொள்ளும் என்கிறது ஆய்வு.

வாய்வகற்றி, பசித்தூண்டி, கோழைய கற்றி, புழுக்கொல்லி, வெப்பமுண்டாக்கி எனப் பன்முகத்தன்மை கொண்ட பூண்டு, மருந்தாக மட்டுமல்லாமல் உணவாகவும் இருந்துவருகிறது. 

தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன்! - பூண்டு

வேகவைத்த சாதத்துடன் நெய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்துச் சமைக்கப்படும் `கட்டோகாரா’ எனப்படும் உணவு ரகம், பத்தாம் நூற்றாண்டில் கர்நாடகப் பகுதியில் மிகவும் பிரபலம். அரைத்த பூண்டுப் பற்களை திராட்சை ரசம் அல்லது பாலில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் பருகும் வழக்கம் நெடுங்காலமாக இருந்திருக்கிறது.

முளைவிட்ட பூண்டைப் பயன்படுத்தக் கூடாது. கசப்புத் தன்மை அதிகரிக்கும் என்பதால் அது சமையலுக்கு உகந்ததல்ல. சமைத்து முடித்ததும் கைகளிலிருக்கும் பூண்டின் மணத்தைப் போக்க, எலுமிச்சைச்சாறு கலந்த நீரில் கைகளைக் கழுவலாம். பூண்டினை நீண்ட நேரம் வறுத்தாலும் கசப்புத் தன்மை அதிகரிக்கத் தொடங்கிவிடும். இறைச்சிகளில் சிறு துளைகள் போட்டு அதற்குள் பூண்டுப் பற்களைப் புதைத்து வேகவைத்துச் சமைக்க, அசைவ உணவுகளின் சுவை அதிகரிக்கும். உணவுக் கலன்களில் பூண்டினைத் தடவிய பிறகு உணவுப் பொருள்களை வைத்தால் அதன் சுவை கூடும். பச்சையாகப் பூண்டினைச் சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் ஏற்படக்கூடும்.

பூண்டு சாண்ட்விச்: பிரெட்டில் லேசாக வெண்ணெய் தடவி, அதற்குள் வேகவைத்துத் துருவிய பூண்டைத் தூவி தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைகோஸ் சேர்க்க வேண்டும். அதன்மேல் பிரெட்டைக் கொண்டு மூடி ஆரோக்கியமான சாண்ட்விச்சாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பூண்டுக் கத்திரிக்காய்: கத்திரிக்காயை நீளவாக்கில் சீவி, அதற்குள் பூண்டுப் பற்களைப் புதைத்து, கொத்தமல்லித்தூள், சுக்குத்தூள் தூவி கொஞ்சம் நெய்விட்டு வதக்கிச் சாப்பிடும் வழக்கம் மேற்கிந்தியத் தீவுகளில் காணப்படுகிறது.

அடோபோ: தலா இரண்டு டீஸ்பூன் மிளகு மற்றும் சீரகத்தை மிதமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். அந்தக் கலவையுடன் உலர்ந்த கொத்தமல்லி இலைகள், இரண்டு டீஸ்பூன் பூண்டுப்பொடி, இரண்டு டீஸ்பூன் உப்பு மற்றும் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அரைத்தால் `அடோபோ’ எனப்படும் பொடி தயார். கியூபா நாட்டு உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பொடி, பெரும்பாலான உணவு மேஜைகளில் காணப்படுகிறது.