Published:Updated:

மெஹந்தி, சங்கீத், பரினீதியின் சோலோ... களைகட்டிய பிரியங்கா - நிக் திருமணம்!

மெஹந்தி, சங்கீத், பரினீதியின் சோலோ... களைகட்டிய பிரியங்கா - நிக் திருமணம்!
News
மெஹந்தி, சங்கீத், பரினீதியின் சோலோ... களைகட்டிய பிரியங்கா - நிக் திருமணம்!

``இரு குடும்பங்களுக்கும் இடையே கடுமையான ஆடல்-பாடல் போட்டி இருந்தது. ஆனால், இறுதியில் அன்பு மட்டுமே வென்றது" மகிழ்ச்சியில் உறைந்த பிரியங்கா சோப்ரா

`தீப்வீர்' ஜோடியின் திருமண சென்சேஷன் அடங்குவதற்குள், பாலிவுட் - ஹாலிவுட் கலைஞர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கின்றனர் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ஜோடி. கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ பிரியங்கா- நிக் திருமணம் ஜோத்புரிலுள்ள உமைத் பவன் மாளிகையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

உலக அழகி, பாலிவுட் பியூட்டி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்ட பத்மஸ்ரீ பிரியங்கா சோப்ராவும், பிரபல அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸும் காதலித்து வந்தனர். உடல்நிலை பாதிப்பு, அதிகப்படியான வயது வித்தியாசம் போன்ற ஏராளமான சர்ச்சைகளை கடந்து தற்போது, இரு வெவ்வேறு மதங்களின் கலாசார முறைப்படி மிகவும் கோலாகலமாக இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது.

`தீப்வீர்' ஜோடி திருமணம் போலவே இவர்களின் திருமணத்திலும் புகைப்படம் எடுப்பதுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், திருமண நிகழ்வுகளின் ஆடை ஆபரணங்கள், ஃபன் மொமென்ட்ஸ், சென்டிமென்ட் டிராக் பற்றிய தகவல்கள் எதுவுமில்லை. ஆனால், மூன்று நாள்கள் நடைபெற்ற திருமண விழாவின் மெஹெந்தி, சங்கீத் நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் காணொலியை மட்டும் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர் இந்த ஜோடி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதில் மெஹெந்தி புகைப்படங்களோடு, ``இரு வெவ்வேறு கலாசாரத்தின் நம்பிக்கையை மதித்து, எங்களின் இரு குடும்பமும் அன்பால் ஒன்றிணைந்ததுதான் எங்கள் காதல், எங்களுக்குக் கொடுத்த மிகவும் சிறப்பான விஷயம். ஒரு இந்தியத் திருமணப் பெண்ணின் மிகவும் முக்கியமான தருணம் மெஹெந்தி நிகழ்வுதான். நாங்கள் கனவு கண்டதைப் போலவே இந்த நண்பகல் மிகவும் சந்தோஷமானதாக அமைந்தது" என்ற கேப்ஷனையும்  ஒன்றாகப் பதிவிட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, பிரியங்காவின் சகோதரி பரினீதி சோப்ரா, ``மணப்பெண் தோழியாக எங்களுடைய மிகப்பெரிய பொறுப்பு, மணப்பெண்ணை சந்தோஷமாகப் பார்த்துக்கொள்வதுதான். ஆனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் நிக், எங்களின் பொறுப்பை அவரே வாழ்க்கை முழுவதும் செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வரவேற்கிறேன் நிக். ஜோனஸ் மற்றும் சோப்ரா குடும்பங்கள் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்நாளில் மஞ்சள், பிங்க், பச்சை வண்ணங்களில், கான்டெம்போரரி டிசைனிலான ஆடையில் மிளிர்ந்தார் ப்ரியங்கா. சிம்பிளான வெள்ளை குர்தா பைஜாமாவில் மிகவும் ஸ்டைலிஷாக இருந்தார் நிக். இருவரின் ஆடைகளை வடிவமைத்தது பிரபல பாலிவுட் இணை ஆடை வடிவமைப்பாளர்கள் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா.  

மெஹெந்தியைத் தொடர்ந்து ஆட்டம்பாட்டம் துள்ளல்கள் நிறைந்த `சங்கீத்' நிகழ்வு மிகவும் ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டது. ஏராளமான `ஹைலைட் பெர்ஃபாமன்ஸ்' சங்கீத்தில் இருந்திருந்தாலும், பிரியங்காவுடன் இணைந்து அவரின் தாய் மது சோப்ரா ஆடியதுதான் அனைவரையும் வியக்க வைத்தது. நிக்-பிரியங்காவின் டூயட் நடனம், பரினீதி சோப்ராவின் ஸ்பெஷல் சோலோ நடனம், மணமக்கள் பெற்றோர்களின் சிறப்பு உரையாடல் என சந்தோஷம் நிறைந்த அரங்கமாய்க் காட்சியளித்தது.

``இரு குடும்பங்களுக்கும் இடையே கடுமையான ஆடல்-பாடல் போட்டி இருந்தது. ஆனால், இறுதியில் அன்பு மட்டுமே வென்றது. நானும் நிக்கும் சங்கீத் நிகழ்வுக்காகக் காத்திருந்தோம். என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், என்ன ஒரு நாடகக் கச்சேரி! இரு குடும்பமும், எங்களின் கதைகளை பாடல்கள் மூலமும் நடனம் மூலமும் வெளிப்படுத்திய விதம், அன்பும் புன்னகையும் நிறைத்தது. இந்த மாலைப்பொழுதின் நினைவுகளை வாழ்நாள் முழுவதும் சுமந்திருப்போம். இரு குடும்பங்களின் இணைப்புக்கு இது ஒரு அற்புதமான தொடக்கம்" என்று பிரியங்கா சங்கீத் நிகழ்வைப்பற்றிப் பதிவிட்டுள்ளார். இதில் கற்கள் மற்றும் சீக்வன்ஸ் வேலைப்பாடுகள் நிறைந்த புடவையை உடுத்தியிருந்தார் பிரியங்கா. நீல நிற குர்தா, ஜாக்கெட், க்ரீம் வண்ண பைஜாமா அணிந்து இந்திய மணமகன் தோற்றத்தில் கச்சிதமாய்ப் பொருந்தியிருந்தார் நிக்.

மெஹெந்தி, சங்கீத் நிகழ்வுகளை அடுத்து, நிக் ஜோனஸ் திருமண முறைப்படி கிறிஸ்தவத் திருமணம், நிக்கின் தந்தை பால் கெவின் ஜோனஸ் முன்னிலையில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாலை 4.30 மணிக்குத் திருமணச் சடங்குகளை தொடங்கி `கேக் கட்டிங்' நிகழ்வோடு நிறைவடைந்தது. கிறிஸ்தவத் திருமண உடைகளை வடிவமைத்தவர், அமெரிக்கப் பிரபல ஆடை ஆபரண வடிவமைப்பாளர் `ரால்ஃப் லாரென்'. ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில், `சூரா' - வளையல் அணிவிக்கும் நிகழ்வு, `ஹல்தி' - மஞ்சள் பூசும் நிகழ்வு தொடங்கி இரண்டு மணிநேரம் இந்துத் திருமணச் சடங்குகள் நடைபெற்றது. இனிதே திருமணமும் நடைபெற்றது. வாழ்க வளமுடன்!