Published:Updated:

வெஸ்டப்பனுக்கும், எஸ்டப்பனுக்கும் சண்டை... இந்த சீசனின் F1 ரீகேப்!

வெஸ்டப்பனுக்கும், எஸ்டப்பனுக்கும் சண்டை... இந்த சீசனின் F1 ரீகேப்!
வெஸ்டப்பனுக்கும், எஸ்டப்பனுக்கும் சண்டை... இந்த சீசனின் F1 ரீகேப்!

2018 F1 சீசன் கடந்த ஆண்டை விட பரபரப்பான வெற்றிகளுடனும், திருப்பங்களுடனும் முடிந்துள்ளது. ஃபார்முலா ஒன் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த சீசனில்தான் பிரான்ஸ், ஆஸ்திரியா, இங்கிலாந்து எனத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் இடைவெளியே இல்லாமல் ரேஸ் நடைபெற்றது.

மெல்போர்னில் 2-ம் இடம், பஹ்ரெய்னில் 3-ம் இடம், சீனாவில் 4-ம் இடம் எனத் தோல்வியிலேயே ஆரம்பித்த ஹாமில்டன் இந்த சீசனில் 11 ரேஸ்களில் முதலிடத்தில் வெற்றிபெற்று சீசன் முடிவதற்கு இரண்டு ரேஸ்களுக்கு முன்பே சாம்பியன்ஷிப்பைத் தட்டிச் சென்றுவிட்டார். ஐந்து F1 பட்டங்களை வென்று அதிக சாம்பியன்ஷிப் வென்றவர்கள் வரிசையில் யுவான் மேனுவல் ஃபேன்கியோவுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 

லூயில் ஹாமில்டன் வெற்றிபெற மெர்சிடீஸ் கார்தான் காரணம் என்று சொன்ன எல்லோரையும் வாயடைக்க வைத்துவிட்டார் ஹாமில்டன். இதுவரை ஃபெராரி தயாரித்ததிலேயே அதிகத் திறன் கொண்ட காரை தன் சாமர்த்தியமான ரேஸ் டெக்னிக்கால் வீழ்த்தியுள்ளார் ஹாமில்டன். இந்தியா, துருக்கியைத் தவிர ஃபார்முலா ஒன் போட்டியின் எல்லா சர்க்யுட்டிலும் போடியம் ஏறிய ஒரே வீரர் ஹாமில்டன்தான். ஒரு பக்கம் இவர் வெற்றி பெற இவரின் டீம் மேட் வேல்டரி பொட்டாஸ் இந்த சீசனில் ஒருமுறை கூட முதலிடத்தில் ஜெயிக்கவில்லை. அந்தோ பாவம்!.

ஃபார்முலா ஒன் கார்களில் மீண்டும் ஹாலோ (Halo) பாதுகாப்புக் கருவியைக் கொண்டுவந்ததால் பெல்ஜியம் ரேஸில் சார்லஸ் லெக்லார்க்கின் தலை தப்பியது. `ஹப்பாடா..1’ என எஸ்கேப் ஆன சந்தோஷத்தில் சாபர் டீமுக்காக 10 ரேஸ்களில் 39 பாயின்ட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.

ஒரே டீமாக இருந்தாலும், மேக்ஸ் வெஸ்டப்பன், டேனியல் ரிக்கார்ட்டோ இருவரும் விட்டுக் கொடுக்காமல் மோதிக்கொண்டது நல்ல விஷயம்தான். ஆனால், கிராஷ் ஆகும் வரை மோதிக்கொண்டு இந்த சீசனில் ரெட்புல் டீமை கவிழ்த்துவிட்டார்கள். 

பிட் ஸ்டாப்பில் தொழில்நுட்பக் கோளாறால் கிமி ராய்க்கோனன் பிட் மெக்கானிக் மீது காரை ஏற்றிய சம்பவம் இந்த சீசனில் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், அதை மறந்து தன் வெற்றியை இம்முறை கொண்டாட வைத்துவிட்டார் ராய்க்கோனன். 113 ரேஸ்கள் கழித்து இம்முறை தடாலடி வெற்றி. ராய்க்கோனனுக்கு வயதாகிவிட்டதா என்று யோசிப்பதற்குள் வேகமாக சாம்பியன்ஷிப்பில் 3-ம் இடம் பிடித்துவிட்டார். அடுத்த ஆண்டு இவர் சாபர் டீமுக்குப் போக இருப்பதால் சாபர் ஹேப்பி அண்ணாச்சி! 

தேவையில்லாமல் மேக்ஸ் வெஸ்டப்பன் காரில் மோதி அவர் முதலிடம் பிடிக்கவேண்டிய ரேஸில் அவரைப் பின்னுக்குத் தள்ளியதால் எஸ்டபன் ஆக்கோனுடன், மேக்ஸ் பிட்ஸ்டாப்பில் மல்லுக்கட்டி நின்றது பரபரப்பான வீடியோவாக ஒரு பக்கம் வலம்வந்தது. வெஸ்டப்பனுக்கும், எஸ்டப்பனுக்கும் சண்டை என நமக்கும் தலைப்பு சிக்கியது.

இந்த சீசனோடு தனது F1 கரியரை முடித்துவிட்டார் ஃபெர்னாண்டோ அலோன்ஸோ. தோனியை வெறித்தனமாக விரும்புபவர்களும் இருக்கிறார்கள், வெறுப்பவர்களும் இருக்கிறார்கள்... ஆனால், ரெய்னாவை வெறுப்பவர்கள் மிக மிகக் குறைவு. அலோன்சோ ஃபார்முலா ஒன்னின் ரெய்னா. இரண்டு டிரைவர் சாம்பியன்ஷிப் வாங்கிய அலோன்சோவின் கரியர் முடிவை கண்ணீர் மல்க கொண்டாடுகிறது ஃபார்முலா ஒன். 

இரண்டு போல் பொசிஷன்களையும், 4 அதிவேக லேப் ரெக்கார்டடுகளும் கொடுத்திருந்தாலும், டேனியல் ரிக்கார்டோவுக்கு இதுதான் மிக மோசமான சீசன். ஒரு ரெட்புல் ரேஸர் தொடர்ந்து 15 ரேஸ்களில் போடியம் ஏறாமல் இருப்பது இதுவே முதல் முறை.

இந்த ஆண்டு F1 சீசனை எண்களில் பார்ப்போம்...