Published:Updated:

தாம்பத்தியத்தை இறுக்கமாக்க ஒரு `செல்ல' வழி..! ஆய்வு ரகசியம்!

```அத்தான்', `மாமா', `மச்சான்', `என்னங்க' என்பதெல்லாம் வெறும் `விளி' மட்டும் கிடையாதுங்க. அந்த அழைப்பில் ஒரு லவ் இருக்கு''

தாம்பத்தியத்தை இறுக்கமாக்க ஒரு `செல்ல' வழி..! ஆய்வு ரகசியம்!
தாம்பத்தியத்தை இறுக்கமாக்க ஒரு `செல்ல' வழி..! ஆய்வு ரகசியம்!

ங்க லைஃப் பார்ட்னரை செல்லம், பட்டு, டார்லிங், டியர் என்று செல்லப் பெயர் வைத்து அழைத்திருக்கிறீர்களா? `ஹூம்... இல்லையே' என்று உதட்டைப் பிதுக்குபவர்கள் இன்றைக்கே `செல்லப் பெயர்' வைத்து அழைக்க ஆரம்பித்துவிடுங்கள். அப்படி அழைத்தால் உங்கள் தாம்பத்தியம் இன்னும் இறுக்கமாகும் என்றிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. `சூப்பர் ட்ரக் ஆன்லைன் டாக்டர்' என்ற வலைதளம்தான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய மக்களிடையே 1026 பேரைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், செல்லப் பெயர் வைத்து அழைப்பதால் தம்பதியரிடையே உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் நெருக்கம் அதிகரித்திருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சரி, `டார்லிங்', `ஹனி' என்று பொது இடங்களில்கூட அழைத்துக்கொள்ள முடிந்த அந்த நாட்டுக் கலாசாரத்துக்குச் செல்லப் பெயர் வைத்துக் கூப்பிடுவதெல்லாம் ஓகே. நம்ம நாட்டுக் கலாசாரத்தில் இந்தத் தலைமுறைதான் கணவனைப் பெயர் சொல்லியே அழைக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் செல்லப் பெயரிட்டு அழைத்துக்கொள்கிற தம்பதியர் மிகச் சிலரே. ஸோ, ஒரு தாம்பத்தியத்தை இறுக்கமாக்க, செல்லப் பெயர் வைத்து அழைத்துக்கொள்வதுடன், வேறு என்னென்ன செய்ய வேண்டும் என்று `ரிலேஷன்ஷிப் டிப்ஸ்' தருகிறார் மனநல மருத்துவர் அசோகன். 

``நம்ம பாட்டிங்க எல்லாம் தங்கள் கணவர்களை செல்லப் பெயர் வைத்துத்தான் அழைத்தார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. `அத்தான்', `மாமா', `மச்சான்', `என்னங்க' என்பதெல்லாம் வெறும் `விளி' மட்டும் கிடையாதுங்க. அந்த அழைப்பில் ஒரு லவ் இருக்கு. இப்போது கணவர்களுக்கு வருவோம். மனைவி தொடர்பான எல்லா வார்த்தைகளின் இறுதியிலும் ஒரு `டி' போட்டு முடித்துவிடுவான். அந்த `டி' - யில் சில நேரம் காதலும் இருக்கும், அவ்வளவுதான். விதிவிலக்காக, அந்தக் காலத்திலும் டார்லிங், ஹனி மாதிரியான செல்லப் பெயர்கள் சில மேல்தட்டு கணவர்களிடையே இருந்தது. அது தற்போது எல்லாத் தட்டு கணவர்களிடமும் பரவிக்கொண்டு வருவது மிக மிக நல்ல விஷயம். மற்றபடி, தம்பதியர் ஒருவருக்கொருவர் `செல்லப் பெயர்' வைத்துக்கொள்வதைக் கட்டாயமாக்கிக் கொண்டால்கூட நல்லது என்றுதான் நான் சொல்வேன். ஏனென்றால், இன்றைக்குத் தாம்பத்திய உறவுக்குக்கூட `வீக்லி ஷெட்யூலில்'  நேரம் இருக்கிறதா என்று செக் செய்கிற அளவுக்கு பிஸியாக இருப்பதால், இப்படி பெட் நேம் வைத்து அழைத்துக்கொள்வது தம்பதிகளுக்குள் ஓர் இணக்கத்தை அதிகரிக்கும் என்பது உண்மைதான். இவ்வளவு காலம் இல்லாமல் திடீரென்று ஹனி, டியர் என்று கூப்பிட கூச்சமாக இருந்தால், `ஹரி சாப்பிட வாம்மா', `ரமேஷ் இன்னொரு தோசை ஊத்திக்கொடுப்பா' என்று மெள்ள மெள்ள `செல்லம் காட்டுதலை' ஆரம்பிக்கலாம். 

தாம்பத்தியத்தை வலுவாக்குகிற அடுத்த அஸ்திரம் அன்பான முத்தங்கள். ஆஃபீஸுக்குக் கிளம்பும்போது லைஃப் பார்ட்னருக்குக் கொடுத்துவிட்டுப் போகலாம் அல்லது வாங்கிக்கொண்டும் போகலாம். இதை  ஏதோ `பகலில் செய்யக்கூடாத குற்றம்' என்பது போல பல தம்பதியரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். `நானிருக்கிறேன் உனக்கு' என்ற நம்பிக்கையைத் தருகிற செயல்பாடு அது. இது முடியாதபட்சத்தில் லேசான அணைப்பைப் பரிமாறிக்கொண்டு ஆஃபீஸூக்குக் கிளம்புங்கள். 

சினிமாவில் காட்டுகிற மாதிரி, கோபமாக இருக்கிற துணையைக் கட்டிப்பிடித்தால் எல்லாம் உடனே காதல் பிறந்துவிடாது. கோபத்துக்குக் காரணமான பிரச்னையைச் சரிசெய்துவிட்டோ அல்லது குறைந்தபட்சம் துணையின் கோபத்துக்கான காரணத்தைக் காதுகொடுத்து கேட்பதோதான் சரியான தீர்வு. 

ஒரு தாம்பத்தியத்தோட அழகான பகுதி, கணவன்  - மனைவி இருவரும் `வீட்டுப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமல் தங்கள் இருவரைப் பற்றி மட்டுமே' பேசிக் கொள்கிற தருணங்கள்தான். பீச்சுக்குப் போவது, பூங்காவுக்குப் போவது, காலையில் ஒரு வாக்கிங், மாலையில் ஒன்றாக டீ குடிப்பது, அட்லீஸ்ட் சேர்ந்து ஒரு டிரைவ் என்று `தனிமைத் தருணங்'களை வாரத்துக்கு ஒரு தடவையாவது உருவாக்கிக் கொள்ளுங்கள். இவைதான் உங்கள் தாம்பத்திய பயணத்துக்கான எரிபொருள்'' என்று அர்த்தமாகப் பேசி முடித்தார் டாக்டர் அசோகன்.

உங்க லைஃப் பார்ட்னருக்கு என்ன பெட் நேம் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா ஃப்ரெண்ட்ஸ்?