வேடந்தாங்கல் நெருங்க நெருங்க... 'கீச்கீச்... கர்புர்... பக்பக்’ என வெரைட்டியாக எழும் குரல்கள் நாம் பறவைகள் சரணாலயத்தை நெருங்கிவிட்டோம் என்பதை உணர்த்தின. தண்ணீரே தெரியாத அளவுக்கு நாரைகளால் ஏரி நிறைந்து இருந்தது. சுற்றுலா வந்திருந்த மதுராந்தகம் பொலம்பாக்கம் சந்தோஷி கல்லூரி மாணவிகளும் நம்முடன் இணைந்துகொண்டனர்.

நாரைகளால் நரைத்த ஏரி!
நாரைகளால் நரைத்த ஏரி!
##~##
நம்முடன் வந்த வனத் துறை அதிகாரி, வேடந்தாங்கல் பற்றி விவரிக்கத் தொடங்கினார். ''இந்த ஏரி 73 ஏக்கர் பரப்பளவுகொண்டது. 'தாங்கல்’ என்றால் நீர்நிலைனு அர்த்தம். வெகுகாலத்துக்கு முன்பு, இங்கே கூடும் பறவை களை வேட்டையாட வேடர்கள் வருவதால் வேடன் தாங்கல்னு இந்த ஊருக்குப் பெயர்வந்ததாம். பறவைகள் மீது இருந்த அன்பு காரணமாக, கிராமத்து மக்களே கிட்டத்தட்ட 60 வருஷமா இந்தப் பறவைகளைப் பாதுகாத்து வந்தாங்க. அப்புறம் அந்த மக்களே கேட்டுக்கொண்டதால் 1961-ல் இந்த ஏரியோட பாதுகாப்பு, வனத் துறை வசம் வந்தது. நவம்பரில் இருந்து ஜூன் வரை சீஸன். இங்க வர்ற 26 வகையான பறவைகளில் 12 வகை வெளிநாட்டுப் பறவைகள்'' என்றவர், பக்கத்தில் இருந்த டெலிலென்ஸ் மண்டபத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.  

''அதோ பாருங்க... அங்கே தெரிகிற பறவைகளுக்கு 'கிரேஃபால்கன்’னு பேரு. ஆஸ்திரேலியாவில் இருந்து வர்ற அந்தப் பறவை ஒவ்வொண்ணும் எட்டு கிலோ வெயிட் இருக்கும். தன்னோட தாடையில் ஏகப்பட்ட மீன்களை சேர்த்துவெச்சு, தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கும். சைபீரியா, இலங்கையில இருந்து வரும் பாம்புதாரா பறவை, நீரில் 10 நிமிஷம் வரைக்கும்கூட மூழ்கி இருந்து இரை தேடும். இது வரைக்கும் சுமார் 30 ஆயிரம் பறவைகள் இங்கே வந்து இருக்கு. ஆனா, அதிகமா வர்ற வண்ண நாரைகள் இந்த வருஷம் ரொம்பக் குறைவுதான்'' என்றவர் தொடர்கிறார்...

''இங்கே வர்ற பறவைகள் செங்கல்பட்டு, மதுராந்தகம்னு பக்கத்துல உள்ள ஏரிகளுக்கு இரை தேடப் போனாலும் ராத்திரி வேற எங்கேயும் தங்காமல் இங்கே வந்துடும். சராசரியா 50 ஆயிரம் பறவைகள் இங்கேயே முட்டையிட்டு க் குஞ்சு பொரிச்சு... போறப்ப ஒரு லட்சம் பறவைகளா திரும்பிப் போகும். இது பார்க்கிறதுக்கு கண்கொள்ளாக் காட்சியா இருக்கும். சரியான பஸ் வசதி இல்லாததனால கூட்டம் குறைவாத்தான் வருது. சீஸன் நேரத்துலயாவது கூடுதல் பஸ்களை இயக்கணும். குழந்தைகளுக்குச் சின்னச் சின்னதா விளையாட்டு மைதானங்களை அமைச்சா சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்'' என்கிறார் அந்த அதிகாரி.

நாரைகளால் நரைத்த ஏரி!

- பா.ஜெயவேல்
படங்கள்: ப.சரவணக்குமார்

வேடந்தாங்கல் ரகசியம்!

நாரைகளால் நரைத்த ஏரி!

வேடந்தாங்கல் ஏரியைப் பறவைகள் தேடி வருவதன் ரகசியம் சொல்கிறார் 'மரம்’ கருணாநிதி. தமிழகம் முழுக்க ஆங்காங்கே மரக் கன்றுகள் வழங்குவதைச் சேவையாகத் தொடர்பவர் இவர். ''காஞ்சிபுரம் மாவட்ட விவசாயத் துக்கு ஏரிகள்தான் ஆதாரம். அதைப் பாதுகாப்பதில் அந்தக் காலத்து அரசர்கள், குறிப்பா பல்லவ மன்னர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டினார்கள். ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீரை சுத்தமாப் பராமரிக்க அவர்கள் கண்டுபிடிச்ச ஒரு உபாயம்தான் 'நீர்க்கடம்பு மரம்’. இன்னிக்கு வேடந்தாங்கல் ஏரி முழுக்க நிறைஞ்சு இருக்கிறது இந்த வகை மரங்கள்தான். அவை தண்ணீரில் உள்ள மாசுகளைச் சுத்திகரிக்கும். குடை மாதிரி இருக்கும் இந்த மரம், பறவைகள் எளிதாகக் கூடு கட்டி, குஞ்சு பொரிக்கவும் வசதியா இருக்கும். வருஷம் முழுக்க ஏரியில் கிடைக்கிற மீன்கள் பறவைகளின் உணவுத் தேவையை நிறைவேத்திடறதால பறவைகளின் இல்லமா கடம்பு மரங்கள் மாறிடுச்சு. 'உடம்பை வளைத்து கடம்பில் போடு’னு கிராமத்தில் சொலவடை சொல்வாங்க. கடம்பு மரத்தில் செஞ்ச கட்டில்ல தூங்கினா உடம்பு வலி காணாமல் போகும்கிறதுதான் அதோட அர்த்தம்!'' என்கிறார்.

நாரைகளால் நரைத்த ஏரி!

 "பறவைகளை விரட்ட மாட்டோம்!"

''இங்கே வர்ற பறவைகள் ஏரியில் மட்டும் இருக்காது. இரை தேடி, அக்கம்பக்கம் உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்லும். நெல், நிலக் கடலைனு கொத்தித் தின்னும். ஆனால், அவற்றை நாங்க விரட்டுவது இல்லை. தீபாவளி  சமயத்தில்கூட அதிகச் சத்தம் வராத பட்டாசுகளைத்தான் வெடிப்போம். பறவைகளின் எச்சம் கலந்த நீரை வயலுக்குப் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும்'' என்கிறார் வேடந்தாங்கலைச் சேர்ந்த பத்திநாதன்!

- பொன்.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு