Published:Updated:

`12 பேரை குணப்படுத்திய சாமியாடி மகாலட்சுமி?’ - என்ன நடக்கிறது டெல்டாவில்

Ghosts Village

`12 பேரை குணப்படுத்திய சாமியாடி மகாலட்சுமி?’ - என்ன நடக்கிறது டெல்டாவில்
`12 பேரை குணப்படுத்திய சாமியாடி மகாலட்சுமி?’ - என்ன நடக்கிறது டெல்டாவில்

கடலோரக் கிராமங்களை கபளீகரம் செய்த கஜா புயல் பாதிப்பிலிருந்து, இன்னும் மக்கள் மீண்டு வரவில்லை. அதற்குள் கிராமத்தினரைப் பேய்பிடித்து ஆட்டுவதாகவும் அதைச் சாமியாடியைக் கொண்டு பரிகாரப் பூஜைகள் செய்து விரட்டுவதாகவும் உள்ள  செய்தி, காட்டுத்தீயாய் பரவி மக்களை நடுநடுங்க வைத்திருக்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கடலோரக் கிராமம் புஷ்பவனம். இங்கு சுமார் 260 மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பகுதியினர் முகாம்களில் தங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இவர்களில் சிலரை பேய் பிடித்து ஆட்டுவதாகவும் மருத்துவமனைக்குப் போய் வைத்தியம் செய்தும் தீராமல், கிராமத்தில் உள்ள பெண் சாமியாடியை வைத்து பேயை விரட்டி குணமடையச் செய்வதாகவும் கூறுகிறார்கள்.

முத்துவேல்

இதுபற்றி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்துவேலிடம் பேசினோம்.

``கடல், படகு, வலை, வீடு, சோறு, தூக்கம் இவ்வளவுதான் எங்க வாழ்க்கை. இதில் கடலைத் தவிர எல்லாமே போய்விட்டது. எல்லோருக்கும் புயல் காற்றால் அழிவு என்றால் எங்களுக்கு புயல் கொண்டுவந்த சேற்றால அழிவு. ஓர் ஆள் உயரத்துக்கு ஊருக்குள் புகுந்துவிட்ட சேற்றால் வாழ்வாதாரம் பறிபோய்விட்டது. இந்நிலையில் மின்சாரம் இல்லை. ஊரெங்கும் இருட்டு. இதனால் செத்துப்போன ஆவியெல்லாம் கிளம்பி எல்லோரையும் ஆட்டுவிக்கிறது. திடீர் திடீரென ஜுரம் வரும். ஆஸ்பத்திரிக்குக்  கொண்டு போவோம். ஆனால், மறுபடியும் வந்துவிடும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு 'சாமியாடி மகாலட்சுமி அம்மாதான்' நடுநிசியானாலும் அந்த அம்மாவை ஓடிப்போய் கூப்பிடுவோம். உடனே வருவாங்க. பூஜைபோட்டு எலுமிச்சம்பழம் காவு கொடுத்து ஆளுங்களை பிடித்த பேயை ஊர் எல்லையைத் தாண்டி  விரட்டி விடுவாங்க. அதுவரைக்கும் நடுநடுங்கி, ஏதேதோ பேசி, காட்டுக்கத்தல் போடுபவர்கள், சாமியாடி விபூதி பூசியதும் அப்படியே அடங்கி போய் நிம்மதியாய் தூங்கிவிடுவார்கள். கடந்த ஒரு வாரத்தில் பேய் பிடித்த 12 பேரை மகாலட்சுமி காப்பாத்தி இருக்காங்க" என்றார்.

சாமியாடி  மகாலட்சுமி

மகாலட்சுமியை சந்தித்தோம்.

``ஊருக்குக் காவலாக இருந்த ஏழு கன்னியம்மன் கோயிலில் சேறு புகுந்து, யாரும் உள்ளே போக முடியாமல் ஆகிப்போச்சு. இதனால  செத்துப்போன ஆத்மாக்களின் ஆவிகள் வெளியில் சுத்த ஆரம்பிச்சிடுச்சு. அது நடமாடும் நேரத்தில வெளியில் போறவங்க மீது ஆவிகள் புகுந்துடுது. என்ன நடக்கிறது என்று தெரியாம அவர்களை ஆட்டுவிக்குது. அது போன்ற நேரங்களில் என்னை அழைப்பாங்க. நான் பூஜை செய்து, எலுமிச்சைப்பழம் காவு கொடுத்து, ஏழு கன்னியம்மனை வேண்டி சாமி ஆடுவேன். அதற்குப் பிறகு, நடக்கும் எதுவும் எனக்குத் தெரியாது. ஆவியை விரட்டியதும் அவர்கள் அமைதி ஆகிடுவாங்க. தினமும் நான்கு பேருக்காவது பேய் பிடித்துவிடுது. அவற்றை விரட்டி அடிப்பது என் வேலையா இருக்கு. இதற்கென நான் யாரிடமும் தட்சணையாக ஒரு பைசாகூட வாங்குவது கிடையாது. ஏதோ அம்பாள் எனக்கு அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறா. அதைக்கொண்டு நாலு பேருக்கு நல்லது பண்றேன். அவ்வளவுதான்" என்று முடித்துக் கொண்டார்.

புஷ்பவனம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் தீய சக்திகள் நடமாடுவதாக உறுதியாக நம்புகின்றனர். ஆனால், அவர்கள் சொல்லும் விஷயங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம். கஜா புயல் பாதிப்பால் மனதளவில் நொறுங்கிப்போயிருக்கும் மக்களுக்கு உளவியல் ரீதியான சிகிச்சையும் அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.