நிறையப் பேரிடம் அபாரமான திறமை இருக்கும். ஆனால், சூழ்நிலை காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் பெரிய அளவில் பிரகாசிக்க முடியாமல் முடங்கிக்கிடப்பார்கள். அப்படி ஒரு மனிதர்தான் தருமபுரியைச் சேர்ந்த ஸ்ரீமதிவாணன். தேசிய வங்கி ஒன்றில் காசாளராக வேலை பார்க்கிறார். ஆனால், பாட ஆரம்பித்தால்... மயக்குகிறார்.   

நான் பாடும் மௌன ராகம்...
##~##
ஆஷா போன்ஸ்லே, லதா மங்கேஷ்கர், வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா, ஜானகி, சித்ரா ஆகிய பெண் பாடகிகள் தொடங்கி சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், இளையராஜா, யேசுதாஸ், ஜெயச்சந்திரன், ஹரிஹரனில் ஆரம்பித்து இன்றைய இளம் பாடகர்களின் குரலில் கொஞ்சம்கூட பிசிறு தட்டாமல் அட்சர சுத்தமாகப் பாடுகிறார்!

''ஒரு பழைய பாட்டு பாடுங்களேன்...'' என்றோம். 'சிந்து நதிக்கரை ஓரம்... அந்தி நேரம்... எந்தன் தேவன் பாடினான்...’ என்று டி.எம்.எஸ். மற்றும் வாணி ஜெயராம் குரலில் தொடர்ச்சியாகப் பாடி, கிறங்கடிக்கிறார். ''கிக் வாய்ஸில் ஏதாவது...'' என்றால் 'ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி லுக்கு விடத் தோணலையா...’ என்று வசுந்தரா தாஸின் குரலில் வருடுகிறார்.

இலக்கிய வட்டாரத்திலும் இவருக்கு நண்பர்கள் அதிகம். அதனால், இலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் வங்கி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வாய்ப்பு கிடைக்கும்போது மேடை ஏறினால் இரண்டு மைக்குகளை கேட்பார். அவற்றை கைக்கு ஒன்றாகப் பிடித்துக்கொள்வார். இவரே ஆண் குரலி லும் பெண் குரலிலும் மாறி மாறிப் பாடி கூட்டத்தைச் சிலிர்க்கவைக்கிறார். பாடுவது மட்டுமல்ல... பல குரலில் பேசியும் அசத்துவார். கருணாநிதி, வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமாப் பிரபலங்கள் இவருடைய குரலைக் கேட்டால் அதிர்ந்துபோவார்கள். கொஞ்சம்கூட வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாமல் அச்சு அசல் அப்படியே இருக்கிறது குரல்!

''பள்ளிப் பருவத்தில் இருந்தே பாட்டு என்றால் அப்படி ஒரு ஆசை. நாலாவது படிக்கும்போதே ரேடியோ பெட்டியைக் காதில் வைத்துக்கொண்டு சாப்பிடாமல், தூங்காமல் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பேன். அப்போதே ஒரு பாடலை ஒருமுறை கேட்டால் அப்படியே பாடுவேன். முறைப்படி சங்கீதம் கற்கும் ஆசை இருந்தும்கூட வீட்டுப் பொருளாதாரச் சூழ்நிலை அதற்கு இடம் தரவில்லை.

பள்ளி நிகழ்ச்சிகளில், கல்லூரி நிகழ்ச்சிகளில் என் பாடல்கள் கட்டாயம் இடம்பெறும். பாட்டு கேட்பவர்கள் எல்லாம் என்னிடம் நீ யேசுதாஸ் மாதிரி வருவே... எஸ்.பி.பி. மாதிரி வருவேனு சொல்வார்கள். ஆனால், சென்னை சென்று வாய்ப்பு தேடும் அளவுக்குக்கூட என்னிடம் வசதி இல்லை. அவ்வப்போது ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடுவேன்; ஆனால், அதையே முழு நேரத் தொழிலாக வைத்துக்கொள்வது இல்லை.

பிற்பாடு இந்த வங்கி வேலை கிடைச்சுது. வேலைச் சுமை, குடும்பச் சுமை என்று வண்டி ஓடுகிறது. ஆனாலும், என்னுடைய மன நிறைவுக்காகவும் நண்பர்களுக்காகவும் பாடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும்கூட, என்னுடைய ராகம் மௌனமாகவே அடங்கிவிடுகிறது. கலை ஆர்வத்துக்கான வடிகால் மட்டும் கிடைக்கவில்லை'' ஆதங்கம் பொங்குகிறது மதிவாணனின் குரலில்!

மதிவாணன் சமூக அவலங்களை சிலேடையாகக் கவிதை வடிவில் சாடுவதிலும் கைதேர்ந்தவர். 'சந்தங்கள் என் சொந்தங்கள்’ என்ற பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். தவிர, பெண்ணியச் சிந்தனை கொண்ட இவர், 40 பாடல்கள் அடங்கிய 'பெண்ணியத் திருப்பாவை’ என்ற நூலையும் எழுதி இருக்கிறார். தினமணி, ஜனசக்தி, தீக்கதிர் நாளேடுகளில் சமூக முன்னேற்றக் கருத்துக்களைத் தாங்கிய கட்டுரை, கவிதைகளையும் அவ்வப்போது எழுதுகிறார்.

நான் பாடும் மௌன ராகம்...
நான் பாடும் மௌன ராகம்...

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு