Published:Updated:

``முதல் மரியாதை படத்தைப் பாத்துட்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா?”- கதாசிரியர் ஆர்.செல்வராஜ்

``முதல் மரியாதை படத்தைப் பாத்துட்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா?”- கதாசிரியர் ஆர்.செல்வராஜ்

`முதல் மரியாதை’ படம் தந்த மனஅழுத்தத்தை எதிர்கொண்டது எப்படி? - கதாசிரியர் ஆர்.செல்வராஜ் #LetsRelieveStress

``முதல் மரியாதை படத்தைப் பாத்துட்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா?”- கதாசிரியர் ஆர்.செல்வராஜ்

`முதல் மரியாதை’ படம் தந்த மனஅழுத்தத்தை எதிர்கொண்டது எப்படி? - கதாசிரியர் ஆர்.செல்வராஜ் #LetsRelieveStress

Published:Updated:
``முதல் மரியாதை படத்தைப் பாத்துட்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா?”- கதாசிரியர் ஆர்.செல்வராஜ்

`என் அப்பா எனக்குப் பட்டுவேட்டி கட்டி, அரிசி பரப்பி, தங்க நெல்லைக் கொண்டு என் கையைப் பிடித்துக்கொண்டு `அ’ என்று எழுத வைத்தார். இப்போது அந்தத் தங்க நெல் இல்லை. ஆனால், நான் கற்றுக்கொண்ட தமிழ் இப்போதும் இருக்கிறது’ - நெகிழ்ச்சியாகத் தொடங்குகிறார் ஆர்.செல்வராஜ். தமிழில் மட்டுமல்ல... மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, ஹிந்தி எனப் பல்வேறு மொழிப் படங்களிலும் கதாசிரியராகப் பணியாற்றியவர். தமிழில் இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்டவர்களின் பட வெற்றிக்குப் பின்னால் இருந்தவர். தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தையும் அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

``எழுத்தாளனுக்கு வறுமை இருக்கலாம். ஆனால், எழுத்தில் வறுமை இருக்கக் கூடாது. அப்படியான ஓர் உன்னத எழுத்தாளர்தான் `தஸ்தாவெஸ்கி'. அவர் உலகத்தின் மிகப் பெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் கூட. `குற்றமும் தண்டனையும்’, `கரம்சோவ் சகோதரர்கள்’ என்று அவர் எழுதிய எல்லாம் மகா காவியங்கள். அரசை எதிர்த்து எழுதக்கூடியவர் தஸ்தாவெஸ்கி. அவரை வறுமை சூழ்ந்தபோதிலும், அரசை எதிர்த்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். எனவே அவருக்கு மரண தண்டனை விதித்து அரசு உத்தரவிட்டது.  

தூக்குமேடைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட இன்னும் மூன்று நாள்களே இருந்தன. அவருடைய எழுத்தை வாசிக்கும் ஆதரவாளர்கள் சிலர் அதிகார மையங்களில் இருந்தனர். எனவே, அரசிடம் `அவரை ஒருமுறை மன்னித்துவிடலாம்’ என்று  கோரிக்கை வைத்தார்கள். அது ஏற்கப்படவில்லை. பொதுவாக மரண தண்டனை கைதிகளுக்கெனச் சில விதிமுறைகள் இருந்தன. அதில் முக்கியமானது கைதியின் உடல் எடை குறையக் கூடாது. எடை குறைந்தால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுவிடும். அப்படியாக, தூக்கிலிடும் நாளுக்கு முன்பாக தஸ்தாவெஸ்கியின் எடையைப் பார்த்தபோது, அவர் எடை குறைந்திருந்தார். அதனால், அவர் தூக்கிலிடப்படவில்லை. பின்னர், அந்தத் தண்டனையிலிருந்து அவர் விடுதலையானார். 

அதன் பிறகு மீண்டும் அவர் கடனால் கைதாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். கடனால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க... மூன்று மாதங்களுக்குள் அவர் ஒரு நாவலை எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு நீதிமன்றத் தரப்பில் ஒரு வாய்ப்பு தரப்பட்டது. 

தஸ்தாவெஸ்கி அதை ஏற்றுக்கொண்டார். தனக்கு ஓர் உதவியாளர் மட்டும் தேவை என்று கோரிக்கை வைத்தார். அவருக்கு அன்னா என்கிற இளம்பெண்ணை உதவியாளராக அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியை தொடக்கத்தில் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அவரது வீட்டில் பூனைகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தன. நேரமேலாண்மையில் கொஞ்சம்கூட அக்கறையில்லாதவராக அவர் இருந்தார். `என்னடா ஒரு கிழவன்கிட்டே வந்து மாட்டிக்கிட்டேமே..’ என்று நொந்து போனார் இளம்பெண் அன்னா. வேறு வேலைக்குச் செல்லவும் முயற்சி செய்துகொண்டிருந்தார். இந்தச் சூழலில் தஸ்தாவெஸ்கி தனது நாவலை சொல்லச் சொல்ல... அந்தப் பெண் டைப் செய்துகொண்டே வந்தார்.

மெள்ள மெள்ள அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பிடித்துப்போகிறது. காலப்போக்கில அவரது எழுத்தில் மயங்கிப் போகிறாள். குறிப்பிட்ட நாளுக்குள் நாவலை முடிக்காவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்பதால், அந்தப் பெண் இரவு பகல் பாராமல் அந்த நாவலை டைப் செய்து முடிக்கிறார். அந்த நாவல்தான் `குற்றமும் தண்டனையும்’. அதன்பிறகு அவர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார். கடனையும் அடைத்துவிடுகிறார். அதன்பின், அன்னாவுக்கு தஸ்தாவெஸ்கியின் மேல் அன்பு மலர்கிறது. அவருடைய எழுத்துகளை டைப் செய்வதில் ஆர்வமாகிறாள். அதனால், தனக்குத் திருமணமே வேண்டாம் என்றும் மறுத்துவிடுகிறாள். தஸ்தாவெஸ்கிக்கு அவளது நட்பு பிடித்துப்போக, அவரும் அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிடுகிறார். அன்னாவுக்கும் தஸ்தாவெஸ்கிக்கும் ஏறக்குறைய 40 வயது வித்தியாசம் இருக்கும். ஆனாலும், அவரால் அவளை மறக்க முடியவில்லை. அவள் இல்லாமல் வாழ முடியவில்லை. தஸ்தாவெஸ்கி இறந்து, 30 வருடங்கள் ஆன பின்பும் கூட அன்னா அவரது நினைவாகவே இருக்கிறாள். இந்த உண்மைச் சம்பவம் என்னைப் பாதித்தது. அதுதான் என்னுடைய எழுத்தில் `முதல் மரியாதை’ படமாக உருவானது!

அந்த இருவரின் களங்கமில்லா அன்புதான், `முதல் மரியாதை' படத்தின் அடிநாதம். அன்பு என்பது உடலால் வருவதல்ல, மனதால் வருவது. கர்ப்பப்பையிலிருந்து எல்லாரும் உருவாகிறோம்.. ஆனால், காதல் மட்டும் கண்களில் இருந்துதான் உருவாகிறது. இந்தக் கதையைச் சொன்னதும் பாரதிராஜாவுக்கு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. பாம்குரோவ் ஓட்டலில் வைத்து எனக்கு ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, `என் வாழ்வும் தாழ்வும் உன் கையில்தான் இருக்கு... இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்’ என்று சொன்னார். `இது எனக்கு எதுக்கு... நீங்க வீட்டை வேற அடமானம் (அப்போது தி.நகரில் உள்ள ஒரு வீட்டைப் படம் எடுப்பதற்காக பாரதிராஜா அடமானம் வைத்திருந்தார்) வெச்சிருக்கீங்க... வேண்டாம்’ என மறுத்தேன். 

பிறகு,  பெங்களூருவில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை ஒதுக்கித் தந்தார். ரூம் நம்பர் 46. ஏறக்குறைய 40 நாள்கள் `முதல் மரியாதை’ படத்தின் திரைக்கதையை எழுதினேன். அவ்வப்போது பாரதிராஜா வருவார். என்னைத் தொந்தரவு பண்ண மாட்டார். எனக்குத் தேவையானதை செய்துகொடுத்துவிட்டு, திரும்பிச் செல்வார். ஒருநாள் அவரை அழைத்து `ஸ்கிரிப்ட் ரெடி.. வாங்க’ என்று அழைத்தேன். அன்றே, சென்னையிலிருந்து விமானத்தில் பறந்து வந்து, ஸ்கிரிப்ட்டை படித்தார். `நட்புக்கும் காதலுக்கும் இடையே நீ ஒரு கப்பல் ஓட்டியிருக்கே... இந்தக் கப்பல் கரை தெரியாத கடலில் மிதக்குது.. கதை சூப்பர்... சூப்பர்!' என்று, பாராட்டினார். உடனே, தொலைபேசியில் சித்ரா லட்சுமணனை அழைத்து, ஷுட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணச் சொன்னார். 

கதை பிரமாண்டமாக இருந்தது. அதனால் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்தோம். முதலில் ராஜேஷை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தோம். ஆனால், விநியோகஸ்தர்கள் தரப்பு அதை ஏற்கவில்லை. நான் கன்னடப் படங்களுக்கும் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது, அடிக்கடி எஸ்.பி.பியைச் சந்திப்பேன். அவரை நடிக்க வைக்கலாம் என்றால் ஒரு நாள் ரெக்கார்டிங்... ஒரு நாள் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்கிற சூழல் இருந்தது. அதனால், பாரதிராஜாவே சொன்னார்.. `நாம சிவாஜியை நடிக்க வைக்கலாம்...’ 

திருச்சியில் மாரீஸ் என்ற பெயரில் ஒரு தியேட்டர் இருக்கிறது. அதன் உரிமையாளரிடம் கதையைச் சொன்னோம். `சிவாஜி... நல்ல தேர்வு. படத்தை ஆரம்பிங்க..’ என்று ஊக்கமளித்தார். கர்நாடகாவில் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தின் அருகே ஒரு பழைய கெஸ்ட்ஹவுஸில் எனக்கும் பாரதிராஜாவுக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டது. பகல் முழுக்கப் படப்பிடிப்பு நடக்கும். நான் உணவு இடைவேளையின்போது பாரதிராஜாவைச் சந்திப்பேன். பிறகு, ஹோட்டலுக்கு வந்து தூங்குவேன். ஷூட்டிங் முடிந்து 6 மணிக்கு மேல் அவர் ஹோட்டலுக்கு வந்து குளித்து, ரெடியாகிவிடுவார். இருவரும் உட்கார்ந்து அடுத்தநாள் எடுக்க வேண்டிய காட்சிகளைப் பற்றி விவாதிப்போம். அப்போதே அடுத்து எடுக்கப்போகும் காட்சிகளுக்கான காஸ்ட்யூம்ஸ், செட் பிராப்பர்ட்டீஸுக்காக அறைக்கு வெளியே எல்லோரும் காத்திருப்பார்கள். பிறகு, பாரதிராஜா தூங்கிவிடுவார். அதற்குப் பிறகு, அவர் சொன்ன எல்லாத் திருத்தங்களையும் செய்து, வசனங்களை எழுதி முடிப்பேன். அதிகாலையில் 2 மணி வரை எழுதுவேன். பிறகு, எழுதிய பேப்பர்களை அவரின் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு, நான் தூங்குவேன். ஒரு தவம்போல அந்தப் படத்துக்கு எழுதினேன்.

காலையில் எழுந்ததும் பாரதிராஜா படித்துவிட்டு, என் தலையைக் கோதி, `சூப்பர்’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார். இப்படியாக, படப்பிடிப்பு ஆரம்பித்த 100 வது நாளில் படம் ரெடியாகிவிட்டது. இசையமைப்புக்காகப் படத்தை இளையராஜாவிடம் போட்டுக்காட்டினோம். அவர் பார்த்துவிட்டு, `படம் நல்லாயில்ல... இதைத் தூக்கிப்போடச் சொல்லு. தீபன், ரஞ்சனியை வைத்து வேறு கதையை பாரதிராஜாவைப் பண்ணச் சொல்லு. ஏற்கெனவே கஷ்டத்தில் இருக்காரு. இந்தப் படம் வந்தா மேலும் கஷ்டப்படுவார்’ என்று சொல்லிவிட்டார். 

எனக்குப் படம் பிடித்திருந்தது. பாரதிராஜாவுக்குப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. 

பிறகு, `இளையராஜா என்ன சொல்றார்.. பேசாமல் ரீ-ரெக்கார்டிங் பண்ணச் சொல்லு’ என்று சொன்னார் பாரதிராஜா. ரெக்கார்டிங் முடிந்ததும், `பாரதி... நாம பேசினபடி அவருக்கு என்ன சம்பளமோ அதை கொடுத்துடுவோம்’னு சொன்னேன். அவரும் பணத்தை எடுத்து, கையில் கொடுத்து இளையராஜாவிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரச் சொன்னார். பணத்தை எடுத்துக்கொண்டு போனேன். `என்ன...’ என்று கேட்டார். `பாரதி.. பேமென்ட் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்’ என்றேன். `எனக்கு வேண்டாம்... எப்பிடியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு...’ என்றார். `யோசித்துப் பாருங்கள்...’ என்றேன். `முடியவே முடியாது’ என்று, பணத்தை வாங்க இளையராஜா மறுத்துவிட்டார்.

பிறகு, படத்தைப் பஞ்சு அருணாசலத்திடம் போட்டுக் காட்டினோம். அவர் படம் பார்த்து, முடித்ததும், `இந்தக் குதிரை ப்ளுக்குலகூட ஜெயிக்காது’ என்று சொன்னார். ஆனாலும், பாரதிராஜா பயப்படவில்லை... சோர்ந்துபோகவில்லை. இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.   

அப்போது, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில் `சுபாஷினி தியேட்டர்'  இருந்தது. அந்த தியேட்டரில் படத்தைப் போட்டு, படத்தில் பணியாற்றிய மற்றும் நெருக்கமான நண்பர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் படம் பார்க்க அழைத்தோம். அவர்களது கையில் ஒரு பேப்பரைக் கொடுத்துவிட்டோம். படம் பார்த்து முடித்துவிட்டு, அவரவர் கருத்துகளை அதில் எழுத வேண்டும். பெயர் அவசியமில்லை என்று சொன்னோம். படத்தைப் பார்த்த பல பெண்கள் `சூப்பர்... பிரமாதம்’ என்று எழுதிவிட்டனர். இப்படியாக, ஒரு இரண்டு மூன்று முறை வெவ்வேறு ஆள்களுக்குத் திரையிட்டுக் காட்டினோம். 

இதன்பின், படத்தின் மீது பாரதிராஜாவுக்கு மிகப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது. இருவரும் தாஜ் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பிறகு, பரிமாறுபவரை அழைத்து பில் கொண்டு வரச் சொன்னோம். அவர், `ஏற்கெனவே பணம் கட்டிவிட்டார்கள் சார்’ என்றார். யார் என்று தேடினால், அத்தானி பாபு என்கிற கோயம்புத்தூர் விநியோகஸ்தர் எங்களுக்காகப் பணம் செலுத்தியிருந்தார். அவர் படம் பார்த்திருக்கிறார். அவருக்குப் படம் பிடித்திருந்தது. அவர் எங்களிடம், `முதல் மரியாதை படத்தை நான் வாங்கிக்கிறேன் சார்’ என்று கேட்டார். பிறகு, ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படத்தை வாங்கி, வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது!

என் அறிவின் மீதும், உழைப்பின் மீதும்... பாரதிராஜா வைத்த நம்பிக்கையால், எனக்கு பேப்பரில் பணத்தைப் பண்டல் பண்டலாகச் சுற்றிக் கொடுப்பார். பணத்தைப் பத்திரமாக வீட்டில் கொண்டுபோய் கொடு என்று சொல்வார். இந்தப் பணத்தை வைத்துதான் பெசன்ட்நகரில் வீடு வாங்கினேன். அதன் பிறகுதான் `முதல் மரியாதை'க்கு முன்.. `முதல் மரியாதை'க்குப் பின் எனத் தமிழ் சினிமாவில் மாற்றம் நிகழ்ந்தது!’’என்கிறார் ஆர்.செல்வராஜ்!