Published:Updated:

என்னஞ்சல்

என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

Published:Updated:
என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

ந்தைக்கு...

நக நுனியில்... வந்ததை, இருப்பதை, நடப்பதை எல்லாம் சொல்லிவிட முடிந்தாலும் உணர்ச்சிகளைக் கடிதங்களின் வழியாக மட்டுமே கடத்த முடிகிறது. தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு, தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பவர்களுக்குக் கடிதங்கள்தானே சிறந்த தூதுவன். நாமிருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே எல்லாம் இல்லை. தொலைதூரத்தில் இருக்கிறோம்... மனதளவில்!

என்னஞ்சல்

விவரம் தெரிந்த வயதில் மைய ஈர்ப்பு விசையாக நீங்கள் இருந்ததால் என் எல்லாமும் உங்களைச் சுற்றியே இருந்தது. ‘அப்பாவோட முகம் அப்படியே’ என்பதும் ‘உங்க அப்பாகூட இப்படித்தான்’ என்பதும் பால்யத்தில் பிரியத்துக்குரிய விஷயங்களாக இருந்தன, சினிமாவில் உச்ச நட்சத்திரத்தின் நகலாக நடித்தவருக்கு இருக்கும் சின்னக் குறுகுறுப்புபோல!

வளர வளர உங்களின் சாயலை அதிகமாகவே வரித்துக்கொள்ள நேர்ந்தது. பெயரைத் தாண்டி, இன்னார் பிள்ளை எனப் பொதுவில் அடையாளம் காட்டப்படும்போது ‘எல்லாரும் கவனிக்கிறார்களா?’ எனக் குழந்தை கர்வத்தோடு சுற்றுமுற்றும் பார்ப்பது அனிச்சை ஆனது. கூட்டத்தில் தனித்திடாமலிருக்க... தூரத்தை உங்கள் தோளுயரம் வழி கடக்க... நடுநிசிகளில் கலைந்த தூக்கத்தை சமன்படுத்த என உங்கள் கைகளோடு கதைபேசியபடி என் பொழுதுகள் மின்னலாக ஓடியிருக்கின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தந்த வயதுக்கே உரிய கேள்விகள் எல்லாம் முடிச்சுகளாக என்னைச் சுற்றி இறுக்க, சிலசமயம் பொறுமையாக, சில சமயம் சலிப்பாக உங்களின் பதில் கூறும் படலம் நடந்தேறியிருக்கிறது. சண்டைகளின் போது யார் பக்கம் நிற்பது எனக் குழம்பி, அதற்காகவே உங்களிருவருக்குமிடையில் தூது சென்றிருக்கிறேன். அந்த அனுபவம்தான் இப்போது உங்கள் கையில் தவழும் தூதுவனை எழுதக் கைகொடுக்கிறதுபோல!

நகலாக இருப்பதன் சுமை சுயம்தேடத் தொடங்கும்போதுதானே தெரியும்! பதின்ம வயதில் விழுந்தது நமக்கான முதல் விரிசல். காரணம், மாறிய உடற்கூறுகளாகவோ, விரிந்த நட்பு வட்டமாகவோ, தேடலைத் தொடங்கிய மனமாகவோ இருக்கலாம். பட்டியலிட்டால் பக்கங்கள்கூடத் தாண்டலாம். ஆனால், இன்னதென அறிவதற்குள் விரிசல் பலமாகிவிட்டதை இருவரும் காலங்கடந்துதானே உணர்ந்தோம்.

அதுநாள் வரையில் உங்கள் வெளியில் நானும் என் வெளியில் நீங்களும் மட்டுமே இருந்தோம். அன்றுதான் நிகழ்ந்தது அவர்களின் வருகை. சமூகம் எல்லாருக்கும் கொடையாக அளிக்கும் அந்த நான்கு பேர்! அவர்களுக்கு நிரந்தர முகம் கிடையாது. சிலநேரங்களில் உறவினர்களின் சாயலில் வருவார்கள், சிலசமயங்களில் எதிர்வீட்டு, பக்கத்துவீட்டுக்காரர்களாக... ஏன், சில சமயங்களில் வழிப்போக்கர்களாகக்கூட! அவர்கள் தந்த அழுத்தம் தாங்காமல் விரிசல்கள் கிளை விட்டன.
பின்னிரவுக் கதைகள் இப்போது தனிமைக்கொல்லிகள் ஆகிவிட்டன. அரவணைத்த கரங்களின் வெப்பம் இப்போது மூச்சுமுட்டச் செய்கிறது. பழகிப் பிடித்துப்போன வாசம்தான். ஆனாலும் வியர்வைநெடி இப்போதெல்லாம் தூரம்போகச் சொல்கிறது. முன்புபோலில்லாமல் அரிதாக நிகழும் ஸ்பரிசம்கூட தேவையற்றதாகத் தோன்றுகிறது. இனியும் என் உலகின் மைய ஈர்ப்பு விசை நீங்கள் இல்லை! இதை ஒருவகை விடுதலையாக நானும், நிராகரிப்பாக நீங்களும் பல சச்சரவுகளுக்குப் பின் ஏற்றுக்கொண்டோம். காரணங்கள் மாறுபட்டாலும் கசப்பென்னவோ இருவருக்குமேதான். 

திரும்பிப் பார்த்தால் அதுநாள் வரையிலுமான வாழ்க்கை குழந்தைத்தனத்தின் நீட்சியாகவே தோன்றுகிறது. ‘இனி அப்படி இருக்கப்போவதில்லை. என் உலகத்தின் ஈர்ப்பு மையம் நானே’ என்ற எண்ணம் ஓங்குகிறது. பரபர வாழ்க்கையில் தொடர்ந்து கிடைக்கும் அனுபவங்கள் பழையவற்றை மூளையின் அடுக்குகளில் ஓரத்திற்குத் தள்ளி மேலே அமர்கின்றன. தள்ளப்படுபவற்றில் உங்களின் நினைவுகளும் அடக்கம்.

கல்வி, காதல், கௌரவம் என சகலவற்றிலும் நம்மிடையே இருக்கும் கருத்து வேற்றுமைகள் தூபங்களாகிப் பிரிவை அதிகமாக்கும் வேலையைச் செவ்வனே செய்கின்றன. விளைவு பிரமாண்டமானதாக இருக்கிறது. நிமிட நேரமே ஜீவித்திருக்கும் சம்பிரதாய உரையாடல்களுக்கு மட்டுமே இப்போது இடமிருக்கிறது.

சட்சட்டென உணர்ச்சிகள் மரித்துப்போகும் நகரத்துப் பரபரப்புகளினூடே ‘இன்னார் பிள்ளதான?’ என எங்கிருந்தோ திடுமென எழும் குரல் சுள்ளென இழுத்துப் பிடித்து நிறுத்துகிறது. மழைக்கு முன்பான வாசனையைப்போல சடசடவென நினைவுகள் சுற்றிலும் வியாபிக்கின்றன. இனம்புரியாத குற்றவுணர்ச்சி அழுத்தத் தொடங்குகிறது. இப்போதுதான் நினைவுக்கு வருகிறது... கடைசியாக உங்களைத் தொட்டுப் பார்த்து ஆண்டுகள் பல ஆகின்றன. உற்ற நண்பனாக உடன் பயணிக்கும் நா.முத்துக்குமார் வேறு,

‘வளர்ந்ததுமே யாவரும் தீவாய்ப் போகிறோம்...

தந்தையவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்?’

எனப் போட்டுடைக்கிறார். அழுத்தம் பாரமாகிறது. பெருமூச்சுகள் அதை வெளியேற்றத் துடிக்கின்றன.

ஆசுவாசத்திற்குப் பின்னர் தயங்கியபடி திரும்பிப் பார்த்தால் லேசாக நடுக்கம் பரவுகிறது. முன்புபோலில்லை நீங்கள்! கழுத்து முன்னோக்கி வளைந்து லேசாக கூன் போட்டிருக்கிறது. நடையில் தளர்ச்சி தெரிகிறது. தோல் சுருக்கங்கள் அச்ச ரேகைகளைப் படரவிடுகின்றன. சிகையில் முக்கால்வாசி தொலைந்துபோயிருக்கிறது. சுவாசத்தில் லேசான மருந்துநெடி எட்டிப்பார்க்கிறது. ஓரிரவில் நிகழ்ந்த மாற்றங்களில்லை இவை! இனியும் உங்களை எளிதாகக் கடந்து செல்லமுடியாது என்னால்!

நெருங்கி வருகையில் ஓர் உண்மை உறைக்கிறது. உங்களுக்கான விருப்பங்கள்! என் விருப்பங்களை நிறைவேற்றும் இடத்தில் நீங்கள் இருந்ததால் உங்களுக்கான விருப்பங்களையும் நீங்களே நிறைவேற்றிக்கொள்வீர்கள் என்பதுதான் நினைப்பாக இருந்தது. கொடுக்குமிடத்திற்கு நான் வந்துவிட்டதை உணரவேயில்லை. நீங்கள் கேட்ட வானொலிப் பெட்டி என் கையில் கனக்கிறது. அதில் பாடல்களாகப் பொதிந்துள்ளன உங்களின் அரை நூற்றாண்டு நினைவுகள்.

வாழ்க்கை ஒரு முழு வட்டமடித்திருக்கிறது. இப்போது என்னைச் சுற்றியதாக மாறியிருக்கிறது உங்களின் உலகம். அவ்வுலகின் எடையை உணரமுடிகிறது. தங்கமீன் துள்ளும் குவளையைப் பதமாகத் தூக்கும் குழந்தைபோல அவ்வுலகத்தைக் கவனமாகக் கையிலேந்தியிருக்கிறேன் நான். இதில் மட்டும் எப்போதுமே தோல்வி நெருங்கிவிடக்கூடாது என உள்ளூரப் பரவும் பதற்றத்தை உங்கள் முன்னால் காட்டிக்கொள்வதில்லை என முடிவு செய்திருக்கிறேன்.

இத்தனை பிரயத்தனங்களும் நம்மிடையே கண்ணுக்குத் தெரியாமல் எழுந்துவிட்ட சுவரை உடைத்தெறியத்தான்! எழுந்த காலமோ காரணமோ இன்னதென்று இல்லை. நம்மிருவரைவிடப் பெரியதொரு காரணமும் இருக்கப்போவதில்லை. புறச்சுவர் போலில்லை இது. எழுப்புவதைவிட இடிப்பது பெரும்வதையாக இருக்கிறது. சுவரை முழுக்கவும் தகர்க்க முடியாமல் போகலாம். ஆனால், அதில் சன்னல்கள் அமைப்பதன்மூலம் நம்மிடையே நிலவும் புழுக்கத்தை, இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ளலாம் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. உங்களையும் என்னையும் நெருக்கமாகியது பின்னிரவுக் கதைகள்தானே! இப்போதும் அவைதான் கைகொடுக்கவிருக்கின்றன. கதைகளைவிடச் சிறந்த சன்னல்கள் ஏது? நான் உங்களுக்குச் சொல்லும் முதல் கதையாக இந்தக் கடிதமே இருக்கட்டும்!

இப்படிக்கு...

நான்.  

ஓவியம்: ஹாசிப்கான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism