Published:Updated:

இறந்தும் வாழும் அறிவாயுதப் போராளி...! அம்பேத்கர் நினைவுதினப் பகிர்வு

இறந்தும் வாழும் அறிவாயுதப் போராளி...! அம்பேத்கர் நினைவுதினப் பகிர்வு
இறந்தும் வாழும் அறிவாயுதப் போராளி...! அம்பேத்கர் நினைவுதினப் பகிர்வு

"நாய்களைவிட, பூனைகளைவிடக் கேவலமாக எங்களை நடத்தும் ஒரு மதத்தை நாங்களும் அங்கீகரித்தால், அது எங்களை நாங்களே அவமதித்துக்கொள்ளும் செயலாகும். குடிக்கத் தண்ணீர் கூட மறுக்கப்படும் நிலையில் ஒரு தாழ்த்தப்பட்டவன் எப்படி இந்து மதத்தையும், நாட்டையும் தன்னுடையதாகக் கருதமுடியும்" எனக் காந்தியிடம் காத்திரமாகப் பேசினார். தான் கொண்ட கொள்கைக்காக எப்போதும் யாருடனும் சமரசம் செய்து கொண்டதில்லை. 

மனதைப் பண்படுத்தவும், மானிட இன்பங்களின் பேரின்பமான உன்னதத்தை அடையும், ஒருவர் தம் வாழ்வை அர்ப்பணித்து பிறர் வாழ முயல வேண்டும் - புத்தர்.   

டிசம்பர்- 6, 1956 டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இயற்கை எய்தினார். அன்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லியிலிருந்து பம்பாய்க்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இது அன்றைய தினத்தின் ஒரு செய்தியாக மட்டுமல்ல, இயற்கைப் பேரிடர் ஒட்டு மொத்தமாகப் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை, உயிரை ஒட்டு மொத்தமாகப் பறித்துச் சென்றது போன்றதொரு பேரிழப்பு. மக்களுடைய சிந்தனையை மேம்படுத்தி சமத்துவத் தேரை சமூகத்தில் நகர்த்த எழுந்த முதல் கைகள் அம்பேத்கருடையவை.

இன்று அம்பேத்கரின் 62-வது நினைவு தினம். சட்ட மேதை, தொழிற்சங்கத் தலைவர், பொருளியல் நிபுணர், பேராசிரியர், தொழிலாளர் துறை அமைச்சர், வழக்கறிஞர், பங்குச் சந்தையின் வர்த்தக ஆலோசகர் எனப் பன்முகம் கொண்டவர் அம்பேத்கர். ஆனால், அவர் ஒரு தலித் தலைவர் என்ற குறுகிய வட்டத்துக்குள் வைத்தே இன்றும் பார்க்கப்படுகிறார். அம்பேத்கரைப் பற்றிப் பெரிதாக அறியாதவர்கள் கூட, இதை ஆணித்தரமாக நம்புகிறார்கள். பிரச்னைக்குரிய, சர்ச்சைக்குரிய ஒரு கண்ணோட்டத்தோடு அம்பேத்கர் அணுகப்படுவது அபத்தம். தேசத்தின் தெருக்களில் நாம் கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பது அம்பேத்கரின் சிலையை மட்டுமல்ல. ஒரு மாபெரும் சித்தாந்தத்தை, சமூக விடுதலைக்கான முன்னெடுப்பை, மனித மாண்புகளையும் சேர்த்துதான்.

ஓர் அறிவுஜீவியின் முகம் வெறுமனே சாதி அடையாளத்துக்குள் அடைக்கப்படுவது வரலாற்றுத் துயரம். அம்பேத்கர் அறிவாயுதம் ஏந்தியது ஒட்டுமொத்த மனிதக் குலத்தின் விடுதலைக்கும், மனித மாண்பை மீட்டெடுக்கவும்தான். ஒரு பி.ஏ பட்டம், இரண்டு எம்.ஏ பட்டங்கள், ஒரு எம்.எஸ்.சி பட்டம், டாக்டர் ஆப் சயின்ஸ், சட்டத்தில் பாரிஸ்டர் பட்டம், இலக்கியம் மற்றும் தத்துவத்தில் டாக்டர் பட்டம் இவையெல்லாம் 65 ஆண்டுகள் வாழ்ந்த அம்பேத்கர் தன் வாழ்நாளில் படித்துப் பெற்ற பட்டங்கள். இவை தவிர எண்ணற்ற ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளார். கற்றலின் மூலம் பெற்ற அறிவைக்கொண்டு பல நூறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுக்க பல தலைவர்களையும், மக்களையும் சந்தித்துக்கொண்டே இருந்தார். இவை அனைத்தையும் மனித மாண்பை மீட்கும் லட்சியப் பயணத்துக்காகவே செய்தார்.  

1927-ல், சவுதார் குளத்தின் நீரைத் தொட்டால் தீட்டு என்ற மடமையை உடைத்து, மக்களைத் திரட்டி நீரைப் பருகினார். அதன் பிறகு அந்தக் குளம் தீட்டாகிவிட்டதென, குளத்துக்குத் தீட்டுக் களிக்கும் சடங்கை சாதியர்கள் செய்தனர். 

நாசிக் நகரில் காலாராம் கோயிலில் 8000 பேருடன் நடந்த ஆலய  நுழைவுப் போராட்டம் நடத்தினார். அந்தப் போராட்டம் பல உரிமைப் போராட்டங்களின் தொடக்கப்புள்ளி. 

முதலாம் வட்ட மேசை மாநாட்டில், `இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறை வேண்டும். அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு அரசியல், பொருளாதார , சமூக நிலைகளில் மேம்பட முடியும்' என்றார். அந்த உரை இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. 

`நாய்களைவிட, பூனைகளைவிடக் கேவலமாக எங்களை நடத்தும் ஒரு மதத்தை நாங்களும் அங்கீகரித்தால், அது எங்களை நாங்களே அவமதித்துக்கொள்ளும் செயலாகும். குடிக்கத் தண்ணீர் கூட மறுக்கப்படும் நிலையில் ஒரு தாழ்த்தப்பட்டவன் எப்படி இந்து மதத்தையும், நாட்டையும் தன்னுடையதாகக் கருதமுடியும்’ எனக் காந்தியிடம் காத்திரமாகப் பேசினார். தான் கொண்ட கொள்கைக்காக எப்போதும் யாருடனும் சமரசம் செய்து கொண்டதில்லை. 

பிரதமர் நேரு இந்து சட்டத்திருத்த மசோதா தொடர்பாக அம்பேத்கரின் நிலைப்பாட்டை ஆதரிக்காதபோது, அமைச்சரவையிலிருந்து விலகினார். `இந்து சட்ட  மசோதா ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்தாமல் சாகடிக்கப்பட்டு விட்டது’ என்றார். இவையெல்லாம் அம்பேத்கர் வாழ்வில் செய்த முக்கியமானவற்றின் சில துளிகள் மட்டுமே. 

அம்பேத்கர் செய்த செயல்களின் தீவிரம் கருதாது அம்பேத்கரை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில்தான் இன்று பலரும் முன்னெழுகின்றனர். அம்பேத்கர் மீதான வன்மம் காரணமாக அப்பாவி மக்களைத் தண்டிப்பது தொடர்கிறது. 

நம் தேசத்தின் சமாதான விடியல்களில் நிகழ்ந்த சில ரத்தக் கதைகள் இதோ.

2008-ல் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படித்த ஆதிக்கச் சாதி மாணவர்கள், அம்பேத்கர் பெயரை எடுத்துவிட்டு, வெறுமனே ‘சட்டக் கல்லூரி’ என்று சுவரொட்டி ஒட்டினார்கள். இதையடுத்து ஏற்பட்ட மோதல் வன்முறைத் தாக்குதலாக மாறியது.

2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருத்தங்கல் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிக்க சாதி மாணவர்கள் `அம்பேத்கர் குறித்த பாடத்தை நடத்தக் கூடாது’ என்று ஆசிரியர் மீது கற்களைவிட்டு எறிந்தார்கள். 

 2015-ல் மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் அம்பேத்கர் குறித்த பாடலை செல்போன் ரிங்டோனாக வைத்திருந்த சாகர் ஷெஜ்வால் என்ற நர்சிங் மாணவரை, எட்டுபேர்கொண்ட கும்பல் தாக்கிக் கொலை செய்தது. இப்படி நாடு முழுவதும் அம்பேத்கர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான கசப்பு உணர்வைப் பார்க்க முடிகிறது.  

`ஒரு சிலருக்கு வாழ்வே சாபம்தான். என் பிறப்பே மரணத்தைப் போன்றதொரு விபத்துதான். என் பால்யகாலத் தனிமையிலிருந்து ஒருபோதும் என்னால் மீள முடியவில்லை. கடந்த காலத்தில் எவராலும் பாராட்டப்படாத குழந்தை நான்' என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் ரோஹித் வெமுலா. அவர் தன் கையில் அம்பேத்கர் புகைப்படம் சுமந்து செல்லும் காட்சிக்கும், அவரது தற்கொலைக்கும் சம்பந்தம் உள்ளது. 

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையில் ஒரே காரணம்தான். இந்த தேசத்தில் ஆணும்- ஆணும் சமமல்ல. பெண்ணும்-பெண்ணும் சமமல்ல. ஓர் உணவும்- மற்றோர் உணவும் சமமல்ல. வீதிகள், சாலைகள், மயானங்கள் என எதுவுமே சமமல்ல என்பதை ஒருங்கே தெரிவிக்கின்றன இந்நிகழ்வுகள். சமத்துவத்தை, சகோதரத்துவத்தைப்  போதித்ததால்தான் அம்பேத்கர் வெறுக்கப்படுகிறார் என்றால் தவறு எங்குள்ளது எனப் பகுத்தறிய வேண்டிய கட்டாயம் உள்ளது. யாரைத் தீண்டத்தகாதவர் என்று சொன்னார்களோ, அவரை இன்று பல கோடி இதயங்கள் வாரி அணைத்துக்கொண்டிருக்கிறது. அவரைப் புறந்தள்ளுவதோ, ஏற்றுக் கொள்ள மறுப்பதோ வரலாற்றுப் பிழையாகத்தான் முடியும்.  

ஏங்கல்ஸ் சொல்வது போல, ``சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவதல்ல. சமவாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது." என்பதை மனித மனங்கள் உணர வேண்டும். அறிவாயுதம் மட்டுமே வன்முறையை விடுத்து சமத்துவத்துக்கு வழிவகுக்கும். 

அடுத்த கட்டுரைக்கு