Published:Updated:

22 வயதில் கணவர் மரணம்... காலராவில் 4 குழந்தைகள் பலி... உலகின் வயதான `யூடியூப் செஃப்' மஸ்தானமா கதை!

வயல் வெளியின் ஓரத்தில் அழகான இடத்தில் மஸ்தானமா விதவிதமாகச் சமையல் செய்வார். கேஸ் ஸ்டவ் எல்லாம் பயன்படுத்த மாட்டார். அடுப்பு எரிக்க உடைந்த சல்லிகளைப் பயன்படுத்துவதுதான் மஸ்தானாவின் ஸ்டைல்.

22 வயதில் கணவர் மரணம்... காலராவில் 4 குழந்தைகள் பலி... உலகின் வயதான `யூடியூப் செஃப்' மஸ்தானமா கதை!
22 வயதில் கணவர் மரணம்... காலராவில் 4 குழந்தைகள் பலி... உலகின் வயதான `யூடியூப் செஃப்' மஸ்தானமா கதை!

வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது யூடியூப். இதனால், பல இளைஞர்கள் இன்று சொந்தமாக யூடியூப் சேனல்கள் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரேயான் ஆண்டுக்கு ரூ.155 கோடி யூடியூப் வழியாகச் சம்பாதிக்கிறான். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தச் சிறுவனுக்குத்தான் முதலிடம். சற்று வித்தியாசமான கிரியேட்டிவிட்டி இருந்தால் போதும் யூடியூப்பில் பின்னி எடுக்கலாம்.

திருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஆறுமுகத்தின் தற்போதைய மாத வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல். `வில்லேஜ் புட் ஃபேக்டரி’ என்ற பெயரில் வெளியாகும் இவரின் வீடியோக்களை லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். 7 வயது முதல் 107 வயது வரை யூடியூப்பில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். என்னது 107 வயதிலா என்ற கேள்வி எழுகிறதா? நம் கண் முன்னே லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துவிட்டு மறைந்திருக்கிறார் மஸ்தானமா. 

குண்டூரைச் சேர்ந்த மஸ்தானமாவின் வாழ்க்கைத் துயரங்களால் நிறைந்தது. 11 வயதில் திருமணம். 22 வயதில் கணவரை இழந்தார். வயல் வெளிகளில் வேலைபார்த்து கிடைத்த கஞ்சியைக் குடித்து வாழ்க்கை நடத்தி வந்தார். தொடர்ச்சியாக 5 குழந்தைகள் பிறந்தன. அந்தக் காலத்தில் காலராவின் பாதிப்பும் அதிகம். மஸ்தானமாவுக்குப் பிறந்த 5 குழந்தைகளில் ஒன்றுதான் எஞ்சியது. 4 குழந்தைகளின் உயிரைக் காலரா குடித்தது. எஞ்சிய மகனுக்குப் பிறந்த லக்ஷ்மண் என்ற பேரன், பாட்டியின் கை பக்குவம் அபாரமாக இருப்பதைக் கண்டு 'கன்ட்ரி ஃபுட்ஸ்' எனற பெயரில் 2016-ம் ஆண்டு யூடியூப் சேனல் தொடங்கினார்.

வயல் வெளியின் ஓரத்தில் அழகான இடத்தில் மஸ்தானமா விதவிதமாகச் சமையல் செய்வார். கேஸ் ஸ்டவ் எல்லாம் பயன்படுத்த மாட்டார். அடுப்பு எரிக்க உடைந்த சல்லிகளைப் பயன்படுத்துவதுதான் மஸ்தானாவின் ஸ்டைல். விதவிதமான கிராமத்து சமையல்களை மஸ்தானமா செய்து கொடுக்க, அதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றினார் லக்ஷ்மண். மஸ்தானமா சமைக்கும் அழகை பார்ப்பதற்கென்றே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வரத் தொடங்கினர். இந்த வயதில் ஒரு பாட்டி சமைப்பதே வியப்பான விஷயம்தானே.  

குண்டருக்கு நேரில் வந்து மஸ்தானமாவை சமைக்கக் கூறி ,சாப்பிட்டுவிட்டுச் செல்லும் வாடிக்கையாளர்களும் உருவாகினர். எந்த உணவு என்றாலும் வாழை இலையில்தான் மஸ்தானமா உணவு பரிமாறுவார். தற்போது, அவர் யூடியூப் சேனலுக்கு 12 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மஸ்தானமா செய்த 'வாட்டர்மெலன் சிக்கன்' ரெஸிபி வீடியோ இணையத்தில் வைரலாகி கலக்கி எடுத்தது. 

ஆந்திர பாணி சமையல், கடல் உணவு வகைகள், ஆட்டுக்கறி, கோழிக்கறி, நாட்டுக் கோழிக்கறி விதவிதமாகச் சமைப்பதில் மஸ்தானவுக்கு நிகர் மஸ்தானவே. மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியானி சமைப்பதிலும் கில்லாடி. மண்பானைகளில்தான் சமையல் செய்வார். காய்கறிகளை அவரே நறுக்குவார். பாட்டி சமைக்கும் அழகைக் காணவே ஏராளமானோர் `கன்ட்ரி ஃபுட்ஸ்’ சேனலை சப்ஸ்கிரைப் செய்தனர். இதனால் இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் வீடியோக்கள் அந்தச் சேனலில் பதிவிடப்பட்டன. ஒவ்வொரு வீடியோவும் ஹிட் ரகம். 107 வயதில் பாட்டியால் பேரனுக்கு லட்சக்கணக்கில் பணம் கொட்டியது. 

கடந்த 6 மாதங்களாக மஸ்தானமாவின் உடல்நிலை கோளாறு காரணமாக எந்த வீடியோவும் பதிவேற்றவில்லை. கன்ட்ரி ஃபுட்ஸ் சப்ஸ்கிரைபர்கள் என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறி, லக்ஷ்மணுக்கு போன் செய்து நலம் விசாரித்தனர். அவரும் பாட்டியின் உடல்நிலை குறித்து அவர்களுக்குப் பதில் அளித்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மஸ்தானமா காலமானார். இதையறிந்த அவரின் ரசிகர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். 

மஸ்தானமாவின் மறைவு பாரம்பர்ய சமையல் கலைக்கு பெரும் இழப்பு!