Published:Updated:

ராஜஸ்தானியரின் சொந்த ஊரை கீழ்ப்பாக்கம் மருத்துவர்கள் கண்டறிந்த கதை!

தன்னுடைய ஊர், குடும்ப விவரம், முகவரி என எதுவுமே அவர் தெரியவில்லை. ஆனால், அவர் பார்த்தாக சொன்ன சிவாஜி பார்க், புத்தவிஹார் போன்றவை ராஜஸ்தானில் இருப்பதை அறிந்து, அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களின் உதவியுடன், ஊர்ப் பஞ்சாயத்து தலைவர்களுடன் பேசி அவரது குடும்பத்தைக் கண்டறிந்தோம்.

ராஜஸ்தானியரின் சொந்த ஊரை கீழ்ப்பாக்கம் மருத்துவர்கள் கண்டறிந்த கதை!
ராஜஸ்தானியரின் சொந்த ஊரை கீழ்ப்பாக்கம் மருத்துவர்கள் கண்டறிந்த கதை!

குழந்தைக் கடத்தலில் ஈடுபடுவதாக வந்த `வாட்ஸ்ஆப்' வதந்திகளையடுத்து வட மாநிலங்களைச் சேர்ந்த பலர் தாக்கப்பட்டனர். அப்போது சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞர் ஒருவரைப் பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மனநலம் பாதித்த வடமாநிலத்தவர் ஒருவர், பொதுமக்களின் தாக்குதலில் இருந்து தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 6 மாதங்களுக்குப் பிறகு பூரண குணமடைந்த அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.  

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வயது 40. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானில் ரயில் ஏறிய அவர் தவறுதலாக தமிழகம் வந்து சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சுற்றித் திரிந்த அவரை, குழந்தைகளைக் கடத்த வந்திருப்பதாகக் கருதி, சிலர் தாக்க முயன்றனர். அவர்களிடமிருந்து மீட்டக் காவல்துறையினர் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கொண்டுவந்து

சேர்த்திருக்கிறார்கள். அங்குச் சிகிச்சை முடிந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உறவினருடன் ஒப்படைத்திருக்கின்றனர். 

"ஜாகிர்... பிறவியிலேயே சிறிய அளவில் மனவளர்ச்சிக் குன்றியவர். அவரால் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யமுடியும். எனவே, அவர் தனது சொந்த ஊரில் உள்ள ஒரு கறிக்கடையில் உதவியாளராக வேலைபார்த்து வந்தார். ஒருநாள் ஜெய்ப்பூர் ரயில் நிலையம் சென்றவர், தவறுதலாகத் தென் மாநிலத்துக்குச் செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். படிப்பறிவு இல்லாததாலும், உருது மொழியைத் தவிர பிற மொழிகள் தெரியாததாலும் இரண்டு ஆண்டுகள் ஆங்காங்கே அலைந்து திரிந்து கடைசியாகக் காஞ்சிபுரம் வந்து சேர்ந்திருக்கிறார். அப்போது தமிழகத்தில் குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக `வாட்ஸ்ஆப்'பில் வதந்திகள் பரவின. 

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைக் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதாகப் பரவிய செய்திகளையடுத்து ஆங்காங்கே அவர்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உத்திரமேரூர் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த ஜாகிரையும் சிலர் தாக்க முயன்றார்கள். அவரை மீட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்தனர் காவல்துறையினர். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் வார்டு மருத்துவ அதிகாரி கவிதா, பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் நிர்மல், சிவாஜிராஜ், சமூகப் பணியாளர் சேகர் உள்ளிட்டோர் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் பெரும்பங்காற்றினர்" என்கிறார் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக இயக்குநர் பூர்ண சந்திரிகா.

`ஜாகிருக்கு மருத்துவமனையில் எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது, அவரது ஊர் எப்படிக் கண்டறியப்பட்டது' என்பதுகுறித்து அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவகுழுவைச் சேர்ந்த பட்டமேற்படிப்பு மருத்துவர் நிர்மலிடம் கேட்டோம்.

"ஜாகிர், ஏற்கெனவே மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்ததாலும், வீட்டைவிட்டு வந்து இரண்டு ஆண்டுகள் வெளியிடங்களில் சுற்றித்திரிந்தாலும் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். மற்றவர்களுடன் பேசாமல் விலகி இருப்பார். முதலில் அவரது மனநல பாதிப்புகளுக்காகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சில பயிற்சிகள் அளித்து அவரை மற்றவர்களிடம் பேசவைத்தோம். ஆனால், மொழி தெரியாததால் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டார். 

அவர் இஸ்லாமியர் என்பதால் உருது மொழி அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்று ஹிந்தி, உருது மொழி பேசத்தெரிந்த மருத்துவர்கள் மூலம் பேச முற்பட்டோம். ஆனால் அப்போதும் ஒரு சிரமம் ஏற்பட்டது. அவருக்கு உருது பேசத் தெரிந்தாலும் தன்னுடைய ஊர், குடும்ப விவரம், முகவரி என எதுவுமே அவருக்குத் தெரியவில்லை. ஆனால், அவ்வப்போது அவரிடம் பேசியபோது அவர் சிவாஜி பார்க், புத்தவிஹார் போன்றவற்றைப் பார்த்திருப்பதாகக் கூறினார். அத்துடன் அவர் சொன்ன நதிகள் உள்ளிட்ட சில தகவல்கள் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆல்வார் மாவட்டத்தில் இருப்பதை அறிந்துகொண்டோம். அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களின் உதவியுடன், ஊர்ப் பஞ்சாயத்து தலைவர்களுடன் பேசி அவரது குடும்பத்தைக் கண்டறிந்தோம். இரண்டு ஆண்டுகளாகத் தேடி அலைந்த குடும்பத்தினர் தகவலறிந்து மிகுந்த மகிழ்ச்சியுற்றனர். அதைத் தொடர்ந்து, அவரது சித்தப்பாவும், மாமாவும் அவருடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் காட்டி அழைத்துச் சென்றிருக்கிறார்கள்" என்றார். 

`மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சரியாக நடத்தப்படுவதில்லை; ஆனால், நூற்றுக்கணக்கானோர் அழைத்துப்போக ஆளின்றி இருக்கிறார்கள்' என்பதுபோன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியால் மனநலம் பாதித்தவருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் அவரது சொந்த ஊருக்கே அனுப்பி வைத்தது அரசு மனநலக் காப்பகத்தின் மீதான நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது.