Published:Updated:

`காலா’ மூக்குத்தி முதல் `96’ குர்தி வரை - 2018-ன் டாப் ட்ரெண்ட்ஸ்

`காலா’ மூக்குத்தி முதல் `96’ குர்தி வரை - 2018-ன் டாப் ட்ரெண்ட்ஸ்
`காலா’ மூக்குத்தி முதல் `96’ குர்தி வரை - 2018-ன் டாப் ட்ரெண்ட்ஸ்

நூறு ஆடைகள் அலமாரியை நிறைத்திருந்தாலும், 'ச்சே! ட்ரெஸ்ஸே இல்ல. ஷாப்பிங் போகணும்பா' என்று வாரம் இருமுறை பர்ச்சேஸ் செய்யும் இளைஞர்கள் ஏராளம். இவர்கள் ஷாப்பிங் சென்றாலும் அவ்வளவு எளிதில் வாங்கிவிடுவார்களா என்ன! 'இந்தப் படத்தில, இந்த ஹீரோ/ஹீரோயின் போட்டிருந்த அதே ட்ரெஸ்தான் எடுக்கணும்' என்ற சபதத்தோடு கடைகடையாய் படிகள் ஏறும் 'தி கிரேட் ஷாப்பர்ஸ்', எடுத்த சபதத்தை முடிக்கும் வரை வீட்டுப் படி ஏறுவதில்லை. இந்த ஷாப்பர்ஸ்களுக்காகவே, திரைப்படங்களிலிருந்து ஈர்க்கப்பட்ட 2018-ம் ஆண்டின் டாப் ட்ரெண்ட்ஸ் லிஸ்ட் ரெடி.


தாவணி ஸ்டைல்:


இந்தக் காலத்து கிராமத்துப் பெண்கள்கூட, ஜீன்ஸ், ஷர்ட் என்று தங்களை அப்டேட் செய்துகொள்கின்றனர். இதனால் பாவாடை தாவணிகளின் ஈர்ப்பு கொஞ்ச காலம் குறைந்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு புதுப்புது பேட்டர்ன், நிறங்கள், டிசைன்களென நகரப் பெண்களையும் கவரும் விதத்தில் ஏராளமாய் மார்க்கெட்டில் பாவாடை தாவணிகள் குவிந்துள்ளன. இதற்கு ஒருவகையில் திரைப்படங்களும் காரணம். இந்த ஆண்டு வெளியான மண்வாசம் கொஞ்சும் படங்களில், 'சீமராஜா', 'கடைக்குட்டி சிங்கம்', 'சண்டக்கோழி 2' போன்ற படங்கள் முக்கியமானவை. அவற்றில், 'கடைக்குட்டி சிங்கம்' சாயிஷாவின் பிங்க் ஃபாயில் ப்ரின்ட் தாவணி, 'சீமராஜா' சமந்தாவின் மஞ்சள் மற்றும் சிவப்பு பார்டர் தாவணி, 'சண்டக்கோழி 2' கீர்த்தி சுரேஷின் பச்சை, பிங்க், க்ரீம் காம்போ தாவணி செட் போன்றவை டாப் லிஸ்டில் உள்ளன.


காலா மூக்குத்தி:


சுட்டித்தனம் மிகுந்த காலா சைலன்ட்டான தருணம், சரீனாவின் வருகையின்போதுதான். பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவலைகளில் மூழ்கும் காலா ஒருபக்கம் என்றால், சரீனாவின் பிரைட் லுக்கில் மெய்மறந்த ரசிகர்கள் இன்னொரு பக்கம். கைத்தறி புடவைதான். ஆனால், அதிலும் முழுநீளக்கை பிளவுஸ் உடுத்தி ஸ்மார்ட் தோற்றத்தை பெற்றிருப்பார். 'லூஸ் ஹேர்' காலத்தில் படிந்த கொண்டை, அதனைச் சுற்றி அன்று மலர்ந்த மல்லிகை சரம் சரீனாவுக்கே மலர்ந்தது போல இருக்கும். இவற்றைவிட டாப் ட்ரெண்டில் இருப்பது மூக்குத்திதான். பாரம்பர்யம், மாடர்ன் என எந்த வகை உடையாக இருந்தாலும் சரீனா அணிந்திருக்கும் மூக்குத்தி காட்சிதமாகப் பொருந்தும். இப்படி பழைமையை புதுமையாக்கி இந்தக் காலத்து இளைஞர்களின் 'ஃபேஷன் ஐகானாக' மாறிய சரீனா கதாபாத்திரம் 'ஆஸம்'.


கோலமாவு கோகிலா ஸ்கர்ட் டாப்:


வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வெவ்வேறு பரிமாணங்களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அட்டகாசமான நடிப்போடு அவரின் காஸ்டியூம், மேக்-அப் மற்றும் சிகை அலங்காராத்தையும் கவனிக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கேற்ற உடைகள் அனைத்தும் பக்கா மாஸ். 'அறம்' போன்ற சமூகம் சார்ந்த படமாகட்டும், 'பில்லா' முதல் 'இமைக்கா நொடிகள்' வரையிலான 'கெத்து பேபி' ரோலாகட்டும் அனைத்திலும் கச்சிதமாய் பொருந்தக்கூடிய நடிகை, நயன்தாராதான். அந்த வரிசையில் இந்த ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தில் 'சைலன்ட் கில்லர்' கோகிலாவின் காஸ்டியூம்ஸ் அனைத்தும் 'சிம்பிள் அண்ட் நீட்'. படம் முழுவதுமே ஒரே ஸ்டைல் ஆடைதான் ஆனால், நிறம், பிரின்ட் பேட்டர்ன் மட்டும் வேறுபடும். இந்த சிம்பிளான ஆடைக்கு மேட்சாக  சிறிய ஜிமிக்கி, பொட்டு, மெல்லிய செயின் மற்றும் கைடிகாரம் அணிந்து, 'நம்ம வீட்டுப் பொண்ணு' தோற்றத்தில் மக்களின் மனதை வென்றார் நயன்தாரா.


சர்கார் சூட்ஸ்:


பொதுவாகவே விஜய் படம் என்றாலே மாஸ் பாடல், வெயிட்டு ஃபைட், கேஷுவல் காமெடியோடு காஸ்டியூம்களுக்கும் தனி இடம் உண்டு. ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அதில் விஜய் உடுத்தியிருக்கும் உடைகளிலிருந்து, மீசை, தாடி மற்றும் சிகை திருத்தம் வரை அத்தனையையும் அப்படியே பின்பற்றும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்போடு வெளியான 'சர்கார்' படத்தில் விஜய் உடுத்தியிருந்த 'ஷர்ட் ஓவர் டீ-ஷர்ட்' ஸ்டைல் அனைவரையும் ஈர்த்தது. அதிலும் மெரூன் வண்ண டபுள் Flap பாக்கெட் போலோ டீ-ஷர்ட், அதற்குமேல் ஆலிவ் க்ரீன் கார்கோ ஷர்ட் ஃபர்ஸ்ட் க்ளாஸ். வெள்ளை நிற ஷர்ட், காக்கி நிறத்தில் ப்ளேசர், கேஷுவல் ஸ்ட்ரைப் 'டை'யோடு கறுப்பு கூலர்ஸ் மற்றும் கைக்கடிகாரத்தில் 'லவ்லி பிசினஸ் மேன்' லுக்கில் அசத்தியிருப்பார் தளபதி.


96 குர்தி:


இதற்கு முன்னுரை தேவையே இல்லை. முரட்டு சிங்கிள் முதல் லவ் பேர்ட்ஸ் வரை அனைவரையும் தங்களின் பள்ளிப்பருவ நினைவலைகளுக்குள் கடத்திச் சென்றது '96' திரைப்படம். அதில் ஒருசிலரோ, நினைவில் மட்டும் மூழ்கிக்கிடக்காமல் தங்களின் ராம்/ஜானுக்களை தேடவும் செய்தனர். சீருடை ரெட்டை ஜடை, சிறிய பொட்டு சைக்கிள் போன்றவைதான் இதுவரை ஜானுக்களின் நினைவாக நெஞ்சில் பதிந்தவை.

ஆனால், இப்போதோ மஞ்சள் நிற குர்திதான். ஆடம்பரமான உடைகள் ஏதுமில்லாமல், ஜானுவுக்கே வடிவமைக்கப்பட்டதுபோல் இருந்தது த்ரிஷாவின் காஸ்டியூம். ஒரே இரவில் பயணிக்கும் இந்த கதை, பலரின் இரவுகளை ஒளிர வைத்தது, மஞ்சள் குர்தியால். எந்தப் பக்கம் திரும்பினாலும், இந்த ஆண்டின் தீபாவளி ட்ரெண்ட் இந்த குர்திதான்.

இவற்றோடு, 'மஹாநதியில்' கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த முழுநீள சிவப்புப் புடவை, U-டர்ன்னில் சமந்தாவின் ஹேர்ஸ்டைல் மற்றும் காதணிகள் போன்றவைகளும் அதிகம் ஈர்க்கப்பட்டன. இதில் உங்களின் ஃபேவரிட் எது?