Published:Updated:

டெஸ்ட்டிங்கில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி... விட்டாரா பிரஸ்ஸாவுக்கு போட்டி?!

கான்செப்ட் அளவுக்கு காரின் டிசைன் அதிரடியாக இல்லாவிட்டாலும், சான்டா ஃபீ மற்றும் கோனா எஸ்யூவிகளில் இருக்கும் பெரிய Cascading பாணி க்ரில் இதிலும் தொடர்கிறது.

டெஸ்ட்டிங்கில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி... விட்டாரா பிரஸ்ஸாவுக்கு போட்டி?!
டெஸ்ட்டிங்கில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி... விட்டாரா பிரஸ்ஸாவுக்கு போட்டி?!

ஹூண்டாய்... இந்தியாவில் கடந்த 1998-ம் ஆண்டு டயர்பதித்த இந்த கொரிய நிறுவனம், மாருதி சுஸூகிக்கு அடுத்தபடியாக அதிக கார்களை இங்கே ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்து வருகிறது. போட்டிமிகுந்த நம் ஊர் சந்தையில் வெற்றி பெற்றிருந்தாலும், எஸ்யூவிகள் பக்கம் அவ்வளவு கவனம் செலுத்தாமலேயே இருந்தது ஹூண்டாய். டெரக்கன், டூஸான், சான்டா ஃபீ ஆகியவை சொதப்பினாலும், க்ரெட்டா தனியொருவனாய் இந்த நிறுவனத்தின் எஸ்யூவி செக்மென்ட்டைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. தற்போது அதற்கு வலு சேர்க்கும் விதமாக, விட்டாரா பிரெஸ்ஸாவுக்குப் போட்டியாக ஒரு காம்பேக்ட் எஸ்யூவியை ஹூண்டாய் களமிறக்க உள்ளது!

ஹூண்டாய் கார்லினோ... என்ன எதிர்பார்க்கலாம்?

கார்லினோ (HND14 - QXi) எனும் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட்டை, கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் காட்சிபடுத்தியது அறிந்ததே. உலக சந்தைகளுக்கான மாடலாக இது பொசிஷன் செய்யப்படுவதால், LHS & RHS எனும் இரு செட்-அப்பிலும் கார் தயாரிக்கப்படும். எனவே, இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் கோட்பாடுகளின்படியே கார்லினோ (HND14 - QXi) வடிவமைக்கப்பட இருக்கிறது. தென் கொரியா, வட அமெரிக்காவைத் தொடர்ந்து தமிழகத்தில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. சேலம் நெடுஞ்சாலையில் இதன் ஸ்பை படங்களை எடுத்திருக்கிறார், மோ.வி வாசகரான கோபிநாத். 

டிசைன் மற்றும் கேபினில் என்ன ஸ்பெஷல்?

இதைப் பார்க்கும்போது கான்செப்ட் அளவுக்கு காரின் டிசைன் அதிரடியாக இல்லாவிட்டாலும், சான்டா ஃபீ மற்றும் கோனா எஸ்யூவிகளில் இருக்கும் பெரிய Cascading பாணி க்ரில் இதிலும் தொடர்கிறது. கோனா க்ராஸ்ஓவர் போலவே இங்கும் Composite Light - அதாவது ஹெட்லைட் இரண்டாகப் பிளக்கப்பட்டு, மேலே LED DRL மற்றும் கீழே புரொஜெக்டர் ஹெட்லைட் வைக்கப்பட்டிருக்கிறது. இது எஸ்யூவி என்பதால், முன்பக்க பம்பரில் சில்வர் Skid Plate இருக்கும். அகலமான வீல் ஆர்ச், Angular கண்ணாடியைக் கொண்ட கதவுகள், தடிமனான C-பில்லர், மேல்நோக்கிச் செல்லும் Window Line எனக் காரின் பக்கவாட்டு டிசைன், க்ரெட்டா போல அமைந்திருக்கிறது. டெயில்கேட் தெளிவாகத் தெரியாவிட்டாலும், இது கோனா போல இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! Shark Fin Antenna, ரூஃப் ரெயில், டைமண்ட் கட் அலாய் வீல்கள், இண்டிகேட்டர் உடனான மிரர்கள் ஆகியவை இதற்கான உதாரணம். மற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே, கார்லினோவின் (HND14 - QXi)கேபினும் அதிக வசதிகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. டூயல் டோன் கேபின், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், போதுமான இடவசதி ஆகியவை இருக்கலாம்.

இன்ஜின் ஆப்ஷன் என்னென்ன?

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/1.5 லிட்டர் டர்போ டீசல் எனும் இரு இன்ஜின் ஆப்ஷன்களைக் கார்லினோ (HND14 - QXi) கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 118bhp பவர் மற்றும் 17.2kgm டார்க்கை வெளிப்படுத்தினால், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் 115bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இரண்டுமே BS-VI மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் என்பதுடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படலாம். இதில் பெட்ரோல் இன்ஜின் சர்வதேச i20 காரிலும், டீசல் இன்ஜின் வெர்னா பேஸ்லிஃப்ட்டிலும் இருப்பவைதான்! பேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கலாம். எஸ்யூவிகளுக்குத் தேவையான மிட் ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் வேண்டும் என்பதாலேயே, வழக்கமான Naturally Aspirated இன்ஜினுக்குப் பதிலாக, டைரக்ட் இன்ஜெக்‌ஷன் மற்றும் டர்போ சார்ஜர் பொருத்தப்பட்ட பெட்ரோல் இன்ஜினை கார்லினோவில் (HND14 - QXi) பொருத்த உள்ளது ஹூண்டாய். 2019-ம் ஆண்டின் பிற்பாதியில் வரவிருக்கும் இந்த எஸ்யூவி, 7 - 12 லட்ச ரூபாயில் வெளிவருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா தவிர டாடா நெக்ஸான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மஹிந்திரா TUV 3OO/S201, கியாவின் காம்பேக்ட் எஸ்யூவி ஆகியவை இதற்கு போட்டியாக இருக்கும்.

எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

கார்லினோ (HND14 - QXi) போலவே, தான் விற்பனை செய்யும் பிரிமியம் செடான் காரான எலான்ட்ராவின் பேஸ்லிஃப்ட் மாடலையும் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது ஹூண்டாய். இது சேலம் நெடுஞ்சாலையில் (NH-47) காம்பேக்ட் எஸ்யூவியுடன் டெஸ்ட்டிங்கில் இருந்ததைப் படம்பிடித்திருக்கிறார், சேலத்தைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான கோபிநாத். தற்போது விற்பனையில் இருக்கும் மாடலுடன் ஒப்பிடும்போது, சர்வதேச மாடலைப் போன்ற ஷார்ப்பான டிசைனை எலான்ட்ரா பேஸ்லிஃப்ட் கொண்டிருக்கும் எனத் தகவல் வந்திருக்கிறது. அதற்கேற்ப அகலமான Cascading முன்பக்க கிரில், முக்கோண வடிவ LED ஹெட்லைட் மற்றும் பனி விளக்குகள், LED டெயில் லைட், புதிய பம்பர்கள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை இருக்கலாம். 16 இன்ச் அலாய் வீல்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படலாம். 

கடந்த அக்டோபர் மாதத்தில், தற்போதைய எலான்ட்ராவின் டாப் வேரியன்ட்டான SX (O) AT-ல் முன்பக்க பார்க்கிங் சென்சார், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், வயர்லெஸ் சார்ஜிங், Sliding முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், ஆட்டோ லிங்க் உடனான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருந்தன. எனவே கன்ட்ரோல்களுடன் கூடிய புதிய ஸ்டீயரிங் வீல், ஏசி கன்ட்ரோல், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் ஆகியவை மட்டுமே கேபினில் மாற்றங்களாக இருக்கும். இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ், ஹோண்டா சிவிக் ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது ஹூண்டாய் எலான்ட்ரா பேஸ்லிஃப்ட். விலை உயர்வும் அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய அளவிலேயே இருக்கும்.