Published:Updated:

``என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய அந்தப் புகைப்படம்...'' மனம் திறக்கும் மாரி செல்வராஜ் #LetsRelieveStress

என்னுடைய இயக்குநர் ராம் சார். நான் சோர்ந்து, தளர்ந்துபோய் இருந்தால் தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கூறுவார். என்னமாதிரியாக இருக்கிறேனோ அதைப் புரிந்துகொண்டு பேசுவார்.

``என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய அந்தப் புகைப்படம்...'' மனம் திறக்கும் மாரி செல்வராஜ்  #LetsRelieveStress
``என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய அந்தப் புகைப்படம்...'' மனம் திறக்கும் மாரி செல்வராஜ் #LetsRelieveStress

யக்குநர் மாரி செல்வராஜ்... `பரியேறும் பெருமாள்’ மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்திருப்பவர். தொடர்ந்து பல்வேறு மேடைகளில், படம் குறித்து விடாமல் விவாதித்துக்கொண்டிருப்பவர். வாழ்க்கையில் தனக்கு மனஅழுத்தம் ஏற்பட்ட தருணங்களையும் எதிர்கொண்ட விதத்தையும் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

``ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் ஒருவர், தன்னுடைய உரிமைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் அவர் படைப்பாளியாகவும் பரிணமிக்க வேண்டும் என்றால் எந்தவகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?''

``ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவதானித்து, அவர்களுடைய வலியை, வேதனையைப் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், பொதுச் சமூகத்தில் எந்த மாதிரியான கலை, பண்பாட்டு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது என்று கவனிக்க வேண்டிய தேவையிருக்கிறது. தொடர்ச்சியாகப் பெரிய கவனிப்பு அவசியமாகிறது. சினிமாவில் என்னுடைய வலியை மட்டுமே சொல்வேன் என்று சொன்னால், அது ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சிக்கி, சின்னாபின்னமாகிக் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடும். 

அதை எல்லோருக்குமான சினிமாவாக மாற்றினால் மட்டுமே, தமிழ் சினிமாவில் அது தவிர்க்க முடியாத படமாக இருக்கும். அப்போதுதான் அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். எனவே, நீங்கள் வழக்கத்துக்கு மாறாகக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். சமூகம் சார்ந்த ஒரு கதையை எழுதும்போதே உங்களுக்கு ஒரு பெரிய மனோபலம் தேவைப்படும். அந்த மனோபலத்தின் அடிப்படையில் பெரும் உழைப்பும் செலுத்த வேண்டியிருக்கும். அந்த உழைப்பும் நேர்மையானதாக இருக்கவேண்டும். ஏனென்றால், உங்களுடைய படத்தின் கதை என்பது உங்களின் நேர்மைதான். இந்த இரண்டும்தான் முக்கியமானது!

உங்களுடையது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டுமென்றால், அதற்காக நீங்கள் கடும் உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். தமிழ் சினிமாவில் நாம் நிராகரித்த பல படங்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக இருக்கின்றன. சினிமாவை நாம் கற்றுக்கொள்ள நினைக்கும்போதும் அந்தப் படங்களையே திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். அப்படியானால், நாம் எடுக்கிற படங்களும் அந்த வரிசையிலாவது போய்ச்சேரவேண்டும். ஒருவர் சினிமா கற்பதற்காகவாவது நம்முடைய படத்தைப் பார்க்க வேண்டும்.

நமக்குப் பின்னால் வருகிறவர்கள் நம்முடைய சினிமாவைப் பார்க்க வேண்டாமென்கிறபோது அதற்காக நிறைய உழைக்கவும், கஷ்டப்படவும் வேண்டியிருக்கிறது. ஆகவே, ஏனோதானோ என்று ஒரு படைப்பை எடுத்துவிட முடியாது. என்னிடம் ஒரு கதை இருக்கிறது என்று எதையாவது ஒன்றை எடுத்துவிட்டால், அது பெருந்தோல்வியாக அமையும். அதுமட்டுமல்ல, அடுத்து வருகிறவர்களையும் பாதிக்கும். முன்னால் வந்ததே சரியில்லை என்றால், பின்னால் வருகிறவர்களுக்கு அதுவே மனஅழுத்தத்தை தரக்கூடியதாக மாறிவிடும். எனவே, நமக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் தோற்றுவிடக் கூடாது என்றால், நாம் படைப்பைச் சரியாக அணுக வேண்டும். அதை அவதானித்தே படைப்புகளை உருவாக்குகிறேன்!’’

``முதல் படம் தலைப்பிரசவம் போன்றது. முதல் படைப்பே மக்கள் நலன் சார்ந்த படம் என்கிறபோது, நெருக்கடிகள் அதிகம் இருந்திருக்குமே?''

``ஒரு படம் வெளியான பிறகுதான் அது சமூகப் படமா, மக்கள் நலன் சார்ந்ததா என்பதையெல்லாம் மக்கள் சொல்வார்கள். ஆனால், ஒரு படத்தை எடுக்கும்போது இயக்குநருக்கு மட்டும்தான் அது எந்த மாதிரி வரப் போகிறது என்பது தெரியும். நான் என்னுடைய கதையை எழுதி முடித்துவிட்டேன். ஆனால், ஒரு எழுத்தாளராக இருப்பதற்கும் இயக்குநராக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்றைக்குச் சமூகம் எப்படியாக இருக்கிறது... அதில் இருக்கக்கூடிய மனிதர்கள் என்னவாக இருக்கிறார்கள்... ஒரு பாத்திரம் எப்படியிருக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு கதை எழுதும்போது யோசிக்கலாம். ஆனால், கதை எழுதி முடித்துவிட்டபிறகு, இயக்குநராக மாறும்போது அதையெல்லாம் யோசிக்கவேகூடாது. படப்பிடிப்பில் ஒரு இயக்குநருக்கு அந்தக் கதையை நிஜமாக மாற்ற வேண்டிய தேவை மட்டுமே இருக்கிறது. அங்கே ரீ-கிரியேஷன் மட்டுமே தேவைப்படும். அப்படிதான் `பரியேறும் பெருமாள்' படப்பிடிப்புக்குப் போகும்போது அங்கே ஒரு எழுத்தாளராக இருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன்.

12 ஆண்டுகள் சினிமாவைக் கற்றுக்கொண்ட ஒரு உதவி இயக்குநராகத்தான் படப்பிடிப்புக்குப் போனேன். எழுத்தாளனை வீட்டிலேயே விட்டுவிட்டு, இயக்குநராகக் கிளம்பிப் போவேன். பிறகு, திரும்பி வரும்போது மறுபடியும் எழுத்தாளனாக மாறிவிடுவேன். ஷுட்டிங் ஸ்பாட்டில் எழுத்தாளராகவும் இயக்குநராகவும் இருந்தால் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, அவற்றைத் தவிர்த்தேன்!

ஏனென்றால், சினிமாவுக்கான மொழி வேறு... எழுத்துக்கான மொழி வேறு. சினிமா என்பது விஷுவல் மீடியா. அதில் காட்சிப்படுத்துவதும், பாத்திரங்களைக் கையாள்வதும் வெவ்வேறாக இருக்கும். அதனால்தான் எழுத்தையும், இயக்கத்தையும் பிரித்து வைத்துக்கொண்டு வேலை செய்தேன். சினிமாவாகவும் எழுத்தாகவும் வெற்றி பெற வேண்டும் என்பதால் அப்படிச் செய்தேன். அதுதான் படத்தின் வெற்றியாகவும் அமைந்திருக்கிறது!"

``ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் படைப்பாளிக்கு சமூகம் தருகிற அழுத்தம் அல்லது பொருளாதாரரீதியான அழுத்தம்... எதை அவன் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது?''

``குக்கிராமங்களில் வாழுகிற ஒருவனுக்குப் பொருளாதார ரீதியான அழுத்தங்கள் என்பது பெரிதாக இருக்காது. ஏனென்றால், அவன் எங்கேயாவது சாப்பிட்டு, எங்கேயோ உறங்கிவிடுவான். குடும்பத்திற்குள் வேண்டுமானால் பொருளாதார அழுத்தம்  இருக்கலாம். ஆனால், கிராமத்தில் வாழும் படைப்பாளி இந்த அழுத்தத்தை ஏற்றுக்கொள்வான். ஆனால், சமூக அழுத்தத்தை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதிலிருந்து தப்பிக்க நகரத்தை நோக்கி வருகிறபோது பொருளாதாரரீதியான அழுத்தத்தில் சிக்கிக் கொள்வான். சமூக அழுத்தத்திலிருந்து தப்பித்துவிடுவான். ஒரு கவிதை, கதை எழுதியோ அல்லது அதை யோசித்தோ அந்த அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்வான். எல்லாத் துயரங்களிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவன் ஏந்துகிற ஆயுதம் கலைதான்.. அவனது படைப்புதான். அப்படித்தான் நான் நம்புகிறேன்!’’

``ஒரு எழுத்தாளராக உங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் எது?''

``  `தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' எழுதி முடித்தபிறகு, ஒவ்வொருமுறை அந்த ஆற்றுப் பாலத்தின் மீது நடக்கும்போதும், கடக்கும்போதும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவேன். ஏனென்றால், என்னுடைய வாழ்க்கையில் அது துயரமான ஒரு சம்பவம். எப்போது தாமிரபரணி ஆற்றை நான் எட்டிப்பார்த்தாலும் அங்கே குழந்தை செத்து மிதப்பதுபோலவே எனக்குத் தோன்றும். அந்தக் காட்சி என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அந்தப் பாதிப்பைத்தான் `பரியேறும் பெருமாள்’ படத்தில் பயன்படுத்தியிருந்தேன். தாமிரபரணி நதி பற்றி பல கதைகள், புராணங்கள் இருக்கின்றன. ஆனால், அந்த நதியில் நடந்த சம்பவத்தைப் பலரும் மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. அந்த நதியில் குழந்தை செத்து மிதந்தபோது, அந்தக் குழந்தையின் தாயின் வலி என்னவாக இருந்திருக்கும்... அல்லது எனக்கு மட்டும்தான் அப்படித் தோன்றுகிறதா என்றும் கூட யோசித்திருக்கிறேன். குழந்தை செத்து மிதந்த அந்தப் புகைப்படம் என்னை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிக்கொண்டே இருந்தது. தாமிரபரணியில் குளிக்கச் செல்லும்போதெல்லாம் அந்தக் குழந்தை ஞாபகம் வந்துவிடும். கல்லூரியில் படிக்கும்போதும், `தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' எழுதும்போதும் அது என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது!’’ 

``உதவி இயக்குநராக இருந்தபோது நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறீர்களா?''

``உதவி இயக்குநராக இருக்கும்போது எந்த நெருக்கடிக்குள்ளும் நான் சிக்கவில்லை. இயக்குநர் ராம், என்னை முழுவதுமாகப் பார்த்துக்கொண்டார். அப்போது எனக்கு எந்தப் பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படவில்லை. ஆனால், அதற்கு முன்பு நெருக்கடிகளும் வலிகளும் இருந்திருக்கின்றன. சாலையில் படுத்திருக்கிறேன். தெருத் தெருவாக அலைந்திருக்கிறேன். அந்த ஆறு மாதம் என்பது என்னுடைய வாழ்க்கையில் வேதனையான காலகட்டம். ஆனால், உதவி இயக்குநராக மாறியபின் ராம் சார்  நிழலாக மாறிப்போனேன். அதன்பின்னால் சென்னையில் எங்கும் அதிகமாக அலைந்ததில்லை. வழக்கமாக, ஒரு உதவி இயக்குநர் சந்திக்கக் கூடிய எந்தப் பிரச்னையையும் நான் சந்தித்ததில்லை. பரியேறும் பெருமாள் படம் வெளியான பின்னர்தான், நான் தனியே வீடு பார்த்தேன். அதுவரை ராம் சாரின் அறையிலேயேதான் தங்கியிருந்தேன். இது எல்லா உதவி இயக்குநருக்கும் கிடைத்துவிடாது. அது ஒரு அப்பா-பையனுக்குமான உறவு. அதுவும் திருமணமாகி குடும்பம், குழந்தை என்பதால்தான் தனியே வீடு. இல்லையென்றால், இப்போதும் அவரோடுதான் தங்கியிருப்பேன். ஆனாலும், தினசரி அவரைச் சந்தித்துவிடுவேன். இல்லையென்றால் அலைபேசியில் பேசிவிடுவேன். 

உதவி இயக்குநராக இருந்தபோது என் உடன்பிறந்தவர்களின் திருமணத்துக்குப் போக முடியாமல் போனது. என்னுடைய உறவுகளில் வாழ்க்கையில் நடந்த முக்கியமான தருணங்களை தவறவிட்டிருக்கிறேன். ஒரு இயக்குநராக வேண்டும் என்கிற லட்சியத்தில் அதையெல்லாம் தவிர்த்தேன். கல்லூரியில் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. சான்றிதழ்களை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டேன் என்பதால், கண்டிப்பாக நான் ஜெயித்தே ஆக வேண்டும் என்று சூழல் இருந்தது. என்னுடைய பழைய நண்பர்களிடமும் கூட என் அலைபேசி என்னைப் பகிர்ந்துகொள்ளவில்லை. இது எல்லாம் எனக்கு நானே உருவாக்கிக்கொண்டவை. என்னுடைய உறவுகள், நண்பர்களின் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள முடியவில்லை என்பதே எனக்குப் பெரிய மனஅழுத்தமாக இருந்தது!

``பரியேறும் பெருமாள்’ படப்பிடிப்பின்போது மனஅழுத்தத்தை எதிர்கொண்டீர்களா?''

``பரியேறும் பெருமாள் படத்தினுடைய எல்லாக் காட்சிகளுமே எனக்குச் சவாலாகவே இருந்தது. மிகவும் சோர்ந்துபோய், மனஅழுத்தத்தோடு எடுக்கப்பட்ட படம்தான் அது. ஏனென்றால், ஒரு இயக்குநருக்குத்தான் எல்லா விஷயங்களும் மனதோடு இருக்கும். படப்பிடிப்பில் மற்றவர்களுக்கு அது ஒரு காட்சிதான். ஆனால், எனக்குத்தான் அந்தக் காட்சியின் நிஜம் தெரியும். அந்த மனிதர்கள் யார் என்று தெரிவார்கள். அந்தப் படம் 47 நாள்கள் படமாக்கப்பட்டது. அத்தனை நாள்களுமே மனஅழுத்தத்தோடுதான் இயக்கினேன்.

ஒரு தயாரிப்பாளராக பா.இரஞ்சித் அண்ணன் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தால் என்னுடைய மனஅழுத்தம் கொஞ்சம் சமநிலைக்கு வந்தது. ஒருவேளை தயாரிப்பாளர் பக்கத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால், நான் என்னவாகியிருப்பேன் என்று தெரியவில்லை. சமூக அவலத்தைப் பேசக்கூடிய ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்றால், கூடுதல் பொறுப்பு அவசியம். நாம் வைக்கிற ஒரு வசனம் யாரையும் புண்படுத்திவிடக் கூடாது, மக்களை பின்னோக்கி அழைத்துச்சென்றுவிடக்கூடாது என்கிற பயம் தொற்றிக்கொள்ளும். ஒரு காட்சி எடுக்கும்போது ஆயிரம் விஷயங்கள் மனதில் வந்துபோகும். அதுதான் பெரிய மனஅழுத்தமாக இருந்தது. ஒருவேளை அதனால்தான் நல்ல படங்கள் வருகிறது என்று நினைக்கிறேன். பரியேறும் பெருமாள் அப்படியான மனஅழுத்தத்தில் எடுக்கப்பட்டதுதான். அதுதான் என்னை முதிர்ச்சியான இயக்குநராகவும் மாற்றியிருக்கிறது!

``மனஅழுத்தத்தை எப்படிக் கடப்பீர்கள்?''

``வெரி சிம்பிள். என்னுடைய மனைவியிடம் பேசிவிடுவேன். அது எதுவாக இருந்தாலும் அவரிடம் பகிர்ந்துகொள்வேன். அதேபோல, என்னுடைய நண்பன் ஆனந்திடம் பேசுவேன். அதற்குப்பிறகு என்னுடைய இயக்குநர் ராம் சார். எத்தகைய மனஅழுத்தத்தில் இருந்தாலும் அவரைப்போய் பார்த்துவிடுவேன். ரொம்ப டென்ஷனாக இருந்தால், அவர் உலகத்திலுள்ள அத்தனை கோமாளித்தனங்கள் பற்றியும் பேசுவார். நான் நார்மலாக இருந்தால் ராம் சார் தீவிரமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். நான் சோர்ந்து, தளர்ந்துபோய் இருந்தால் தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கூறுவார். என்னமாதிரியாக இருக்கிறேனோ அதைப் புரிந்துகொண்டு பேசுவார். எப்போதுமே என்னிடம், `நீ தவிர்க்க முடியாத ஒரு ஆளாக வருவாய்..’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதையே என்னுடைய மனைவியும், நண்பர்களும் சொல்வார்கள். படம் ஆரம்பித்த பிறகு, அந்தப் பட்டியலில் பா.இரஞ்சித் அண்ணனும் சேர்ந்துகொண்டார். 

படப்பிடிப்பின்போது சில நேரங்களில் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, ``விடுடா பார்த்துக்கொள்ளலாம்’ என்று தோள்கொடுப்பார். ஒரு தயாரிப்பாளரே அண்ணனாக மாறி, உங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது எப்பேர்ப்பட்ட மனஅழுத்தமும் விலகி ஓடிவிடும். எனக்குக் கிடைத்த மனிதர்கள் எல்லோருமே என்னை நேசிப்பவர்கள்தான்.. என் மனஅழுத்தத்தை விரட்டியடிப்பவர்கள்தான்!” நம்பிக்கை வார்த்தைகளோடு முடிக்கிறார் மாரி செல்வராஜ்.