Published:Updated:

ஆள்காட்டியும் இரவுப்பக்கியும்... இந்தப் புள்ளினங்களின் ஓலங்கள் ஏன் நமக்குக் கேட்பதேயில்லை?

நம்மைப் பொறுத்தவரை அவள் வெறும் 'அது' மட்டுமே. மனிதரல்லாத மற்றவைக்கு நாம் மொழியில் காட்டிய வேற்றுமைகளையே உயிர்களுக்கான மதிப்பிலும்கூட காட்டுவது வேதனை.

ஆள்காட்டியும் இரவுப்பக்கியும்... இந்தப் புள்ளினங்களின் ஓலங்கள் ஏன் நமக்குக் கேட்பதேயில்லை?
ஆள்காட்டியும் இரவுப்பக்கியும்... இந்தப் புள்ளினங்களின் ஓலங்கள் ஏன் நமக்குக் கேட்பதேயில்லை?

புல்தரையில் படிந்திருந்த ரத்தக்கரை அன்று அங்கு நடந்த கொலைக்கு நீதி கேட்டுக் கொண்டிருந்தது. ஓடும் வேகத்தில் உருளும் சக்கரத்துக்கு அடியில் ஏற்பட்ட இழவு யார் கண்ணிலும் படவில்லை. பார்த்தவர்களுக்கும் நின்று வருந்த நேரமில்லை. தன்னால் வாழ்பவர்கள் மத்தியில், அவர்களுக்கு மகத்தான சேவை புரிந்தவளின் குழந்தை நசுங்கிச் சிதைந்தபோது அவள் என்ன நினைத்திருப்பாள்; மரண ஓலமிடக்கூட நேரமின்றி ரத்தம் தெறித்துச் சிதறியபோது அந்தத் தாய்க்கு எப்படியிருந்திருக்கும்; முதிர்ச்சியடையாத குரலில் அலறிய அந்தக் கடைசிக் கீச்சொலி கேட்டபோது அவள் எப்படிப் பதறியிருப்பாள்?

கோடையில் வறண்டிருக்கும் நீர்நிலைகள் எனக்கு எப்போதுமே ஒருவித வெறுப்பை உண்டாக்கும். நீரின்றிக் காய்ந்திருக்கும் அப்படியொரு வெற்று நிலம்தானே அன்று நடந்த அந்த இழவுக்குக் காரணமாக அமைந்தது. இதுபோன்ற காய்ந்த நீர்நிலைகள் இன்னும் எத்தனை இருக்கும், அவற்றில் இப்படியான இழவுகள் இன்னும் எத்தனை எத்தனை நடந்திருக்கும். அங்கு விளையாடச் செல்பவர்களுக்கோ அதைச் சாலையாக்கிப் பயன்படுத்தும் மனிதர்களுக்கோ அது வெறும் நிலம். அவளுக்கு அதுதானே வீடு. அங்குதானே அவள் தன்னை ஈர்த்தவனோடு கூடிக்களித்துக் காமத்தில் திளைத்துத் தாய்மை எய்தியிருப்பாள்? இடப்போகும் அந்த முட்டைகளுக்காகத் தன் இணையின் உதவியோடு பார்த்துப் பார்த்துக் கூடு கட்டியிருப்பாள். கூடு கட்டும்போது என்ன நினைத்திருப்பாள், தன் முட்டையிலிருந்து வெளியேறப் போகும் அந்தப் பிஞ்சுகளுக்குச் சோறூட்டப் போகும் நாளை எதிர்நோக்கி எவ்வளவு பூரித்திருப்பாள்?

நினைத்திருப்பாள் பூரித்திருப்பாள் பதறியிருப்பாள் ஏங்கியிருப்பாள். இந்தப் `பாள்'களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் நாம். ஏனென்றால் நம்மைப் பொறுத்தவரை அவள் வெறும் `அது' மட்டுமே. மனிதரல்லாத மற்றவைக்கு நாம் மொழியில் காட்டிய வேற்றுமைகளையே உயிர்களுக்கான மதிப்பிலும்கூட காட்டுவது வேதனை. `மனித' வளர்ச்சிக்கு வித்திடும் பல திட்டங்கள் எத்தனை கோடிப் புள்ளினங்கள் அழிவதற்கு வித்திட்டது என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நிலமொன்று காலியாகக் கிடந்தால் அதை மனிதப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவே நினைக்கின்றோம். அந்த நினைப்பு எத்தனை ஆயிரம் புள்ளினங்கள் அழியக் காரணமானது என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது. புல்வெளிகளோடு ஒரு நிலமிருந்தால் நம்மைப் பொறுத்தவரை அது வெற்று நிலம் அல்லது புறம்போக்கு நிலம். அந்த நிலத்தைச் சுத்தப்படுத்துகிறேன் என்ற பேர்வழியில் அங்கிருக்கும் புற்களை, புதர்செடிகளை அறுத்தெரிந்து விடுகிறோம். அப்போதுதானே அதைப் பயன்படுத்த முடியும். நாம் அறுத்தெரிவது வெறும் புற்களையல்ல; அதையே நம்பியிருக்கும், தன் வாரிசுகளின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் எத்தனையோ புள்ளினங்களின் எதிர்பார்ப்புகளை. 

அவள் ஆள்காட்டிப் பறவை. பாலை நிலப்பறவையாகச் சங்க இலக்கியங்களில் கணந்துள் என்று சுட்டிக்காட்டப்பட்டவள். கோடையில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளின் தரைகள் நிலத்தடி நீர் இருப்பால் ஈரப்பதம் கொண்டிருக்கும். அந்த ஈரப்பதம் அங்கு புல்வெளிகளை வளர்க்கும். அங்குதான் அவளைப் போன்றவர்கள் கூடுகட்டிப் பேரானந்தமாக வாழ்ந்தார்கள். அவர்களைப் போலவே வாழ வேண்டுமென்ற கனவுகளோடுதானே அவளும் இருந்தாள்.

நிலத்தில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் ஆள்காட்டி, இரவுப்பக்கி போன்ற பறவைகள் முற்றிலும் நம்பியிருப்பது அந்தப் புல்வெளிகளைத்தான். அங்கு கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து அங்கேயே தங்கள் குஞ்சுகளுக்குத் தேவையான பூச்சிப் புழுக்களைச் சேகரித்து ஊட்டி வளர்க்கின்றன. வளர்ந்த தன் குழந்தைகளை விட்டுப் பிரிந்து அதன் வாழ்க்கையை அதுவே தீர்மானிப்பதற்கான உரிமையை, சுயமாக வாழ்வதற்கான வாய்ப்பைக் கொடுக்கும் அந்தப் பக்குவம், அந்தப் பகுத்தறிவு அவற்றுக்கு எப்படி வந்தது? அப்படியான எதிர்பார்ப்புகளோடு தன் குழந்தையின் ஜனனத்துக்காகக் காத்திருந்தவள்தான் அவள். 

அவளைப் போலவே நம்மைச் சுற்றித் தினம் தினம் நூற்றுக்கணக்கான புள்ளினங்கள் தாம் தாய்மை அடைந்த சுகத்தைச் சுவைப்பதற்கு முன்னமே, அவற்றின் குஞ்சுகளை வளர்ச்சிப் போதையில் மயங்கியுள்ள மனிதக் காலன்கள் சுவைத்துவிடுகின்றனர். அந்த அம்மாக்களும் அதைக் கண்டபிறகு வழியாத கண்ணீரோடும் வெளித் தெரியாத வேதனையோடும் தான் வாழ்கின்றன. அத்தகையதொரு படுகொலையை அன்று பார்த்தபோது ஏற்பட்ட வேதனை என் நெஞ்சுக்குழிக்குள் நுழைந்து துருத்திக் கொண்டேயிருக்கிறது. 

மனிதர்கள் நெடும் பயணம் மேற்கொள்கையில் வழியில் காத்திருக்கும் கொள்ளையர்களின் பேராசைக்கு இரையானார்கள். பேராசைக்குப் பலியானவர்களின் மரண ஓலங்களும், தங்கள் மேல் தெறித்த ரத்தத் துளிகளும் அவற்றை ஆள்காட்டிகளாக மாற்றின. மனித ரத்தம் சிந்துவதை விரும்பாத அந்த உன்னதப் புள்ளினங்கள் கொள்ளைக்காரர்கள் வழியில் மறைந்திருந்தால் பயணிகளுக்குக் குரல்கொடுத்துக் குறிப்புஉணர்த்தின. அந்தக் குறிப்புஉணர்ந்து மனிதர்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டனர். அத்தகைய ஆபத்துதவிகள் இன்று அதே மனிதர்களின் பேராசைக்கு ரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றின் மரண ஓலங்கள் நம் காதுகளில் விழுவதில்லை. நம்மீது ரத்தம் தெறிப்பதில்லை.

ஆள்காட்டியைப் போன்றதுதான் இரவுப்பக்கி. இரவில் அவளின் அழைப்பின்றித் தூங்கமுடியாமல் மனம் போராடித் துடிக்கிறது. மனம் ஒவ்வொரு வறண்ட நீர்நிலையைப் பார்க்கும்போதும், ``இன்று எத்தனை இரவுப் பக்கிகளின் கூடுகள் சிதைந்தனவோ! இன்று எத்தனை  குஞ்சுகளின் உயிர்கள் பிரிந்தனவோ" என்று ஏங்குகிறேன்.

திருக்கழுக்குன்றம் சென்றிருந்த ஒருசமயம் அங்கு பார்த்த ஆள்காட்டி அந்தப் பழைய இழவை எனக்கு மீண்டும் நினைவுபடுத்தியது. அந்தச் சம்பவங்கள் மீண்டும் கண்முன் வந்துபோக அதைத் தொடர்ந்து சென்றேன். வறண்டிருந்த சிறுதாவூர் ஏரிக்குச் சென்றாள். அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாள். அங்கு மற்றுமோர் ஆள்காட்டியின் வரவைப் பார்த்தேன். இருவரும் அங்குமிங்குமாக மாறி மாறி அமர்ந்துகொண்டிருந்தனர். அவன் தன் இறகைச் சிலுப்பி விரித்துக்கொண்டு நின்றான். அனேகமாக அவன் அவளுடைய காதலனாக இருக்கவேண்டும். ஏரி நிலத்தைச் சூழ்ந்திருந்த மனித நடமாட்டத்தையும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும் நோட்டமிட்டுக் கொண்டே ஏரியைச் சுற்றினார்கள். 

காற்றில் கொஞ்சிப் பேசிக் கொண்டேதான் சுற்றுகிறார்களோ என்றுகூடத் தோன்றியது. அந்த அளவுக்குப் பொறுமையாகவும் ஆங்காங்கே அமர்வதுமாகச் சுற்றினர். அவன் அவளை விட்டுப் பிரியவே இல்லை. புதுக் காதலர்களாகத்தான் இருக்கவேண்டும். அப்படித்தான் இருக்கும். தங்கள் காதலை வளர்க்கக் கூடுகட்ட நல்ல இடம் தேடிக் கொண்டிருந்தனர். இப்படியாகக் காற்றில் கதைபேசிக் கொண்டிருந்தவர்கள் என் கண்ணிலிருந்து எப்படியோ மறைந்துவிட்டனர். தேடித்தேடி அலுத்துப்போய் சுற்றியிருந்த சூழலைக் கவனித்தேன். கருவேல மரத்தை நோக்கி வேகமாக வந்த சாரைப் பாம்பைப் பார்க்கமுடிந்தது. ``இவனுக்கு என்ன வந்தது!" என்ற கேள்வியோடு சுற்றும் முற்றும் பார்த்தேன். காற்றைக் கிழித்துப் பறந்து வந்தான் வெள்ளைக்கண் வைரி. அவன் கண்களைக் கண்ட எந்தப் பாம்புதான் உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடாமலிருக்கும்.

``சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறையை வளர்த்தெடுப்பதில் முதல் பங்கு பறவை நோக்குதலுக்கு" என்கிறார் சு.தியோடோர் பாஸ்கரன். ஏனென்றால் பறவைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டாலே அவை சார்ந்த வாழிடங்களைப் பற்றி அறிந்துகொள்வோம். அந்த வாழிடங்களின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்வோம். ஓரிடத்தின் சூழலியல் முக்கியத்துவம் புரிந்த பின்னரும் அதன் அழிவை யாராலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வளவுக்கும் வித்திடும் பறவை நோக்குதலை அன்று தொடங்கி வைத்தது என்னவோ வல்லூறுதான். அது ஆள்காட்டியில் நிலைகொண்டு வெள்ளைக்கண் வைரிக்கு விருந்தாக வேண்டியிருந்து தப்பித்த சாரையிடம் திசைமாறிப் பிறகு சிட்டுகளின் பக்கம் திரும்பிவிட்டது. புதர்சிட்டு, கரிச்சாங்குருவி, தவிட்டுக்குருவி, கருப்பு வெள்ளைக் குருவி, வானம்பாடி, தையல் சிட்டு, பஞ்சுருட்டான், செம்பூத்து என்று வழக்குமொழியில் அழைக்கப்படும் செண்பகக் குயில், தேன் சிட்டு, வயல் நெட்டைக்காலி என்று எத்தனை வகைச் சிட்டுகள் அங்கே குடிகொண்டுள்ளன. இத்தனையும் புல்வெளிகளிலும் புதர்காடுகளிலும் வாழ்பவை. அவற்றின் இனப்பெருக்கம் மொத்தமும் வறண்டுகிடந்த அந்தச் சிறுதாவூர் ஏரியைச் சார்ந்ததே. அந்த ஏரி கோடையில் வறண்ட சமயங்களில் வளரும் புதர்களிலும் புற்களிலும்தான் இவையெல்லாமே கூடுகட்டி இணைதேடித் தன் வம்சத்தைப் பெருக்குகின்றன.

இப்படியாகச் சுற்றி நோட்டமிட்டுக் கொண்டேயிருந்தேன். ஏரியின் ஓர் ஓரத்தில் முளைத்து முட்டிவரை வளர்ந்திருந்த புல்வெளிகளைக் கவனித்தேன். காற்றில் கதைபேசிய அந்தக் காதலர்கள் உள்ளே போவதும் வெளியேறுவதுமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் காதலை வளர்க்க அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் போல. தங்கள் கூட்டைப் பார்த்துப் பார்த்துக் கட்டியது அந்த ஜோடி. அவர்கள் மனம் முழுக்க அடுத்து வரக்கூடிய ஒரு மாதத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் ஆசைகளுமே நிரம்பியிருந்தது. வழக்கத்தைவிடப் பளிச்சென்று இருந்த அவர்களின் நிறமே அதைக் காட்டியது. ஆனால் எனக்கோ அவர்களைப் பார்த்தபோதும், திரும்பி வந்தபிறகும் எண்ணவோட்டம் ஒன்று மட்டும்தான். அது,

``மனிதத் தலையீடுகளால் இந்தப் புள்ளினங்களுக்கும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாதே...!"