Published:Updated:

22 மொழிகளைக் கற்பிக்கத் திட்டமிடும் அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool

22 மொழிகளைக் கற்பிக்கத் திட்டமிடும் அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool
22 மொழிகளைக் கற்பிக்கத் திட்டமிடும் அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool

புதிய மொழி ஒன்றைக் கற்கும்போதும், புதிதாகப் பிறந்த உணர்வு கிடைக்கும் என்பது பலராலும் சொல்லப்படும் கருத்து. மொழி என்பது அம்மொழியைப் பேசும் மக்களின் உணர்வு, பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் உள்ளிட்டவற்றையும் தெரிந்துகொள்வதற்கான அருமையான வாய்ப்பு. பள்ளியில் படிக்கும் பருவத்தில் புதிய மொழிகளைக் கற்பது என்பது எளிதானது. அதனால்தான், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 'பாஷா சங்கம்' என்றொரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்படி, இந்தியாவின் 22 மொழிகளையும் நாட்டில் உள்ள அரசுப் பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும் அறிமுகமாகியிருக்க வேண்டும். மேலும், தொடர்புகொள்ளும் விதத்தில் எளிமையான உரையாடல் சொற்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களின் வீடியோக்களை பாஷா சங்கம் இணையதளத்தில் பதிவேற்றுகிறது. இந்தத் திட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன், பங்கேற்றுவருகிறது அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியை எமல்டா க்யூன் மேரியிடம் பேசினோம்.

"மத்திய அரசின் இந்தத் திட்டம் எங்கள் பகுதியின் வட்டாரக் கல்வி அதிகாரியின் மூலம் சுற்றறிக்கையாக எங்களுக்குக் கிடைத்தது. அதன்படி, தினந்தோறும் புதிய மொழியில் ஐந்து உரையாடல் தொடர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது ஒருநாள் குஜராத்தி என்றால், அடுத்த நாள் கன்னடம் என தினம் ஒரு மொழியை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை மாணவர்களிடம் கூற அவர்களுக்கும் ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால், நானும் சக ஆசிரியர்களும் உற்சாகமாக அந்த உரையாடல்களைக் கேட்க ஆரம்பித்தோம். http://mhrd.gov.in/bhashasangam/ இந்த இணைய முகவரியில் அன்றைக்கு என்ன மொழியில் உரையாடல்களைக் கூற வேண்டும் என்றும் பயிற்சிக்கும் ஆடியோவும் இருக்கும். அதைக் கேட்டு, நாங்களும் நன்கு பயிற்சி எடுத்தோம். எங்களைப் போலவே நம் நாட்டில் உள்ள பல பள்ளிகளும் செய்கிறார்கள். அதனால், ஒரு மொழி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாளில் அறிமுகம் செய்யப்படுகிறது.

காலை பிரேயரில் ஒருமுறை அந்த உரையாடல் தொடர்களைக் கூறி, மாணவர்களைத் திரும்பவும் கூறச் செய்வோம். மாணவர்கள் ஆர்வத்துடன் சொல்வார்கள். மீண்டும் வகுப்புகளில் கூறி, அவர்களையும் கூறச் செய்து வீடியோவாகப் பதிவுசெய்கிறோம். அதை  http://bhashasangam.ncert.org.in/ இணையதளத்தில் பதிவு செய்கிறோம். அதை அவர்கள், யூ டியூபில் ஒளிபரப்புகிறார்கள். 

இந்தத் திட்டம் மூலம், மாணவர்களுக்குப் புதிய மொழியைக் கற்பதுடன் தன்னம்பிக்கையையும் பெறுகிறார்கள். வீட்டுக்குச் சென்று அந்தச் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பழகுகிறார்கள். நேற்று, பள்ளிக்கு வந்த பெற்றோர், `எம் பொண்ணு புதுசா ஏதோ ஒரு வார்த்தை சொல்றா?'னு கேட்டார்கள். அது மலையாள வார்த்தை என்று சொல்லி, இந்தத் திட்டம் பற்றிச் சொன்னேன். அந்தளவு சொல்லிக்கொடுக்கும் சொற்களைச் சொல்லிப் பழகுகிறார்கள். இந்தச் சுற்றில் தமிழ் மொழி உரையாடல்களை இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளிலும் சொல்லிப் பழகுவார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்தானே?" என்றவர், அப்பள்ளியின் இன்னும் சில சிறப்புகளைச் சொல்லத் தொடங்கினார். 

"எங்கள் பள்ளியில் வாரந்தோறும் செஸ் விளையாடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில், நான்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தேன். ஒருநாள் என்னை ஒரு மாணவி தோற்கடித்துவிட்டாள். அதனால், என்னை விட சிறப்பான ஒருவர்தானே பயிற்சி கொடுக்க வேண்டும்? எனவே சிறப்புப் பயிற்சியாளர் வந்து கற்றுத்தருகிறார். மேலும், எங்கள் பள்ளியில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மூலமாக, தினந்தோறும் அமெரிக்காவிலிருந்து சிறப்பு வகுப்புகளை எடுக்கிறார்கள். அதாவது ஒரு நாள் ஆங்கிலம் என்றால், அடுத்த நாள் தொழில் நுட்பம் என்று பல்வேறு வகையான செய்திகளைத் தெரிந்துகொள்ள உதவுகிறோம். எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரும் சக ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செயல்படுவதே இந்த வெற்றிக்கு முதல் காரணம்" என்கிறார் மகிழ்ச்சியோடு. 

அரசுப் பள்ளிகளில் நல்ல விஷயங்களை முன்னெடுக்கும் முயற்சிகள் வெல்லட்டும்.