Published:Updated:

"சாமியாப் பாத்த காலம்போய் தூக்கி எறிய ஆரம்பிச்சிட்டாங்க" - வில்லுப்பாட்டுக் கலைஞர் முத்துலெட்சுமி

"சாமியாப் பாத்த காலம்போய் தூக்கி எறிய ஆரம்பிச்சிட்டாங்க" - வில்லுப்பாட்டுக் கலைஞர் முத்துலெட்சுமி
"சாமியாப் பாத்த காலம்போய் தூக்கி எறிய ஆரம்பிச்சிட்டாங்க" - வில்லுப்பாட்டுக் கலைஞர் முத்துலெட்சுமி

தந்தனைத்தும் தந்தனை தனனா

தனை தந்தன்னா ஆஆஆ...

போட் போட்... 

தானே தந்தன் னா
தனை தந்தா னாஆஆஆ...

நான் முத்தாரம்மன் கதைகள் பாட

மூர்த்தி விநாயகனே அருள்புரிவார்...

நான் அம்மனுடைய கதை பாடி

கதை பாடி... ஏ, 
அன்னை வந்து அருள் புரிவாள்... 

ப்படியாகத் தொடங்குகிறது அந்த வில்லுப்பாட்டு.

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. இவர் வில் வளைத்து சொல்லெடுத்துப் பாட அந்த இசை நம் நாடி நரம்பையெல்லாம் முறுக்கேற்றுகிறது. இதுவரை அருள்வந்து ஆடாதவர்களையும் அவர் குரல் ஆட்டம் காண வைத்துவிடுகிறது. 

"நடந்துக்கிட்டு இருக்கிற இந்தக் கலியுகத்துல பொம்பளைப்புள்ளைய வில்லு வளைக்கச் சொல்லுதிய. நாலு எடத்துக்குப் போயி ராவு முழுக்க வில்லடிக்கிறதெல்லாம் ஆம்பளையாளுக்குத்தான் சரிப்படும். நீங்க கட்டை அடிக்கிற மாதிரி அவளை வில்லு வளைக்கக் கூட்டிட்டுப் போயிடாதீய' ன்னு என் அம்மா அப்போவே என் அப்பாருக்கிட்ட சண்டை போட்டாங்க. ஆனா, நாமதான் ஊர் ஊரா போயி வில்லுக்குக் கட்டை அடிக்கிறோம். நம்ம பொண்ணாச்சும் வில்லு பாடட்டுமேன்னு என் அப்பா பிரியப்பட்டு என்னைய வில்லு படிக்க அனுப்பினாக. அப்போ எனக்குப் பத்து வயசு. நாட்டார்குளம் பூல்பாண்டி ஐயாதான் எனக்குக் கதை சொல்லிக் கொடுத்த குரு. ஒருவருசந்தே கதை படிச்சேன். மறுவருஷம் கோயிலுக்குப் போயி வில்லு படிக்க ஆரம்பிச்சிட்டேன்” கணீர் கணீரெனப் பேச ஆரம்பித்தார் முத்துலெட்சுமி. 

பத்து வயதில் தந்தையின் விருப்பத்துக்காக வில்லுப்பாட்டுக் கலைஞராக அவதாரம் எடுத்தவருக்கு, இப்போது வயது 46. இதுவரையிலும் 15 க்கும் மேற்பட்ட அந்நாவிகளை உருவாக்கியிருக்கிறார். ஆனாலும்கூட, இன்றளவும் குரலில் சிறு பிசிறு இல்லை. பாட்டில் இட்டுக் கட்டி, கைகளை நீட்டிச் சுழட்டி வில்லில் சொல்லி அடிக்கிறார். 

``சின்ன வயசுல நான் என் அப்பாவோட ஒரு ஊருக்கு வில்லடிக்கப் போயிருந்தேன். வண்டியை விட்டு நான் இறங்கினதும் என்னைப் பாத்துட்டு அந்த ஊர்ல இருந்தவக `இது என்ன கத்தரிக்கா மாதிரி இருக்கு. இந்தப் புள்ளை எப்படி வில்லு பாடும். தப்பா நெனைச்சுக்காதீங்க. உங்க பொண்ணை இப்போவே கூட்டிட்டுப் போயிடுங்க'னு என் அப்பாக்கிட்ட சொல்ல, `என் பொண்ணு வில்லு அடிக்கட்டும். உங்களுக்குப் புடிச்சிருந்தாப் பார்த்துட்டு பணம் கொடுங்க. இல்லன்னா நாங்க காலை வண்டிக்கு ஊருக்குக் கிளம்பிடுறோம்னு அப்பா சொன்னதும் சம்மதிச்சாங்க. ராத்திரி ஒம்போதரைக்கு வில்லு அடிக்க ஆரம்பிச்சேன். சரியா பதினோறு மணிக்கு ஒருத்தரு ஓடி வந்து `அம்மாடி உன்னப் போயி என்னம்மோன்னு நெனைச்சுட்டேன் தாயி. வருத்தப்பட்டுக்காதம்மா' னு சொல்லி எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போனாரு. அப்போ இருந்து அந்த முத்தாரம்மன் அருளால இன்னிக்கு வரை எந்தக் குறையுமில்லாமல் வில்லு வளைச்சுட்டு இருக்கேனுங்க. 

அப்போலாம் வில்லுப்பாட்டுங்கிறது சாதாரணமானதில்ல. வில்லுக்கலையையும் வில்லு அடிக்கிறவங்களையும் தெய்வத்துக்குச் சமமா நினைச்சாங்க. இருபது கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால இருந்தெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு வருவாங்க. ராத்திரி முழுக்க உக்காந்து கேட்டு ரசிப்பாங்க. நான் பெரிய மனுஷி ஆனப்பவும் சரி கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமும் சரி வில்லுன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துட்டு எந்த சாமிக்குப் பாடுறோமோ அந்த சாமிக்கு என்னைய அர்ப்பணிச்சுடுவேன். கல்யாணத்துக்கு அப்புறம் என் வீட்டுக்காரரு பால்பாண்டியும் என்கூட குடம் அடிக்க வந்துட்டாரு. இடது பக்கம் அவரும் வலது பக்கம் பாக்கியமும் இருப்பாங்க. பாக்கியம் ஒம்போது வருஷமா என்கூடதான் தொழிலுக்கு வர்றா. நாங்க ரெண்டு பேரும் இணை பிரியாத அக்கா தங்கச்சிங்க மாதிரிதான். நாங்க சேர்ந்து கருங்காளி, செங்காளி, சுடுகாட்டுக்காளி, மயானக்காளி, தில்லைக்காளி னு பாடுனா எங்க முன்னாடி காளியே வந்து ஆக்ரோஷமா ஆடுவா. ஆனா, தம்பி அந்தக் காலம்லாம் இப்புடி என் கண்ணு முன்னாடியே மலை ஏறிப் போயிடுச்சு” என்கிறார் வேதனையான குரலில். 

``வில்லு வளைச்சாத்தான் தம்பி கோயில் கொடை. அப்போலாம் வெளியூர்கள்ல இருந்தெல்லாம் வில்லுப் பாட்டு கேக்குறதுக்காகவே கூட்டம் கூட்டமா கோயில்ல வந்து தங்குவாங்க. ஆனா, இப்போ உள்ளுர்ல கொடை வச்சாலே சரியா பூஜை நேரத்துக்கு வந்து சாமி கும்பிட்டுட்டுப் போயிடுறாங்க. நாலு சனங்களைப் பார்த்தாதானே நமக்கும் வில்லு அடிக்கத் தோணும். அதுக்குமேல, பத்து மணிக்குள்ள முடிக்கிற மாதிரி ஆடல், பாடல் வெச்சு முடிச்சிடுறாங்க. அரசாங்கமும் எங்களைக் கண்டுக்கறதே இல்ல. நான் கலை பண்பாட்டுத்துறை நடத்தின நிகழ்ச்சியில நாலு முறை வில்லுப்பாட்டுப் பாடியிருக்கேன். மதுரையில வெச்சு எனக்குக் கலை ரத்தின விருது கொடுத்தாங்க. ஆனாலும், அவங்க எங்க கலையையும் நிலைமையையும் கண்டுக்கறதே இல்ல. கலையும் கொஞ்சம் கொஞ்சமா மறைய ஆரம்பிச்சிடுச்சு. தொழில் இல்லாததால வருமானமும் குறைஞ்சுடுச்சு. நம்ம நிலைமை இனியும் நம்ம பிள்ளைங்களுக்கு வரக்கூடாதுன்னுதான் மூத்த பொண்ணை எம்.எஸ்.சியும் இளையவளை பி.காம்,சி.ஏவும் படிக்க வெச்சுட்டேன். இனி அதுங்க வாழ்க்கைய அதுங்க பாத்துக்குங்க தம்பி” என்றவர் இறுதியாக, 

``என்னதான் வில்லுப்பாட்டை மக்கள் மறந்துட்டே இருந்தாலும் எத்தனையோ வில்லுக்காரங்க இன்னும் விடாம வில்லு வளைச்சிட்டுதான் இருக்காங்க. எம்பொண்ணுங்க படிச்சிருந்தாகூட நாலு எடத்துக்குப் போகும்போது வில்லுப்பாட்டு பாடுற முத்துலெட்சுமிதான் எங்க அம்மான்னு சொல்றதுலதான் அதுங்களுக்கு சந்தோஷமா இருக்குதாம். ரெண்டு மாசத்துக்கு முன்னே நவராத்திரி அப்போ ஒரு கோயில்ல வாலி பாடும்போது `பச்சை விரல் மோதிரமடி உனக்கு' னு ஆத்தாளைப் பத்தி பாடுனேன். கூட்டத்துல இருந்து ஒருத்தர் எழுந்து வந்து ஆயிரம் ரூவா கட்டை அப்படியே என் கையில கொடுத்துட்டு 'என் மனசுல இருந்த பாரமெல்லாம் எறங்கிடுச்சும்மா'ன்னு சொல்லிட்டுப் போனாரு. அதுதான் தம்பி எங்களையும் எங்க கலையையும் இப்போ வரை வாழ வெச்சுட்டு இருக்கு. எவ்வளவோ கவலை இருந்தாலும் வில்ல வளைச்சுப் பாட ஆரம்பிச்சிட்டா எல்லாத்தையும் மறந்துடுவேன் தம்பி” உள்ளுக்குள் இருக்கும் குமுறலை மறைத்துக்கொண்டு வெளியே புன்னகைக்கிறார் முத்துலெட்சுமி. 

மறைந்து வரும் கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டுக் கலையை இன்றளவும் உயிர்ப்போடு வைத்திருக்கும் முத்துலெட்சுமியைப் போன்ற சக வில்லுக்கலைஞர்களுக்கு மரியாதை கலந்த வணக்கங்கள். 

வில் வளைந்திருக்கும்... ஆனால், அதன் புகழ் என்றும் நிலைகுலையாது நிலைத்திருக்கட்டும்.