Published:Updated:

இது மூன்றாவது வாழ்க்கை!

இது மூன்றாவது வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
இது மூன்றாவது வாழ்க்கை!

உறுதிகொண்ட நெஞ்சினாய்...

இது மூன்றாவது வாழ்க்கை!

உறுதிகொண்ட நெஞ்சினாய்...

Published:Updated:
இது மூன்றாவது வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
இது மூன்றாவது வாழ்க்கை!

டந்தகால ஹாக்கி பிளேயர், நிகழ்கால மாரத்தான் ரன்னர், சைக்கிளிஸ்ட், ஸ்கை டைவர், சமூக சேவகி என பெங்களூருவைச் சேர்ந்த ரீனா ராஜுவின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் சுழல்கிறது. 37 வயது ரீனாவுக்கு, இது மூன்றாவது பிறவி. இந்தப் பிறவியில் வாழ்க்கையின் முழுமையை ரசித்து அனுபவித்துக்கொண்டிருக்கிற ரீனா, நிஜமான வாழ்க்கைப் போராளி.

துன்பங்கள் வந்தபோதெல்லாம் நகைத்துப் பழகியதாலோ என்னவோ, வார்த்தைக்கு வார்த்தை சிரிப்புடனேயே தொடர்கிறது ரீனாவின் பேச்சு.

``படிப்பு, எனக்குப் பிடிச்ச ஹாக்கி, மியூசிக்னு பெங்களூருல அழகான நாள்களுடன் நகர்ந்த குழந்தைப் பருவம் என்னுடையது. `பொண்ணுங்க, ஹாக்கி விளையாடுறதா?’னு கேட்ட காலத்துல நான் வேணும்னே அதைத் தேர்ந்தெடுத்தேன். ஸ்போர்ட்ஸ், எப்போதும் போராட்ட குணத்தைக் கொடுக்கும். வெற்றி, தோல்விகளைப் பெருசா எடுத்துக்காம, விளையாட்டை முடிக்கணும்கிறது மட்டுமே குறிக்கோளா இருக்கும். வாழ்க்கையில எந்த விஷயத்திலும், `இது போதும், இனி முடியாது'ங்கிற முடிவுக்கு என்னைத் தள்ளாம இருக்கிறதும் ஸ்போர்ட்ஸ்தான். விளையாடும்போது அடிபடும். எலும்பு உடையும். ஸ்கின் கிழியும். ஆனா, எதைப் பத்தியும் கவலைப்படாம, நம்முடைய டீம் ஜெயிக்கணும்கிறதுக்காக விளையாடுவோம். முக்கியமா, `நான்’கிற எண்ணம் மறைஞ்சு, `நாம்’கிற எண்ணம்தான் மேலோங்கும். இந்த எல்லா விஷயங்களுமே இன்னிக்கும் வாழ்க்கையில எனக்கு உதவியா இருக்கு. குழந்தைகளை தைரியசாலிகளாகவும் தன்னம்பிக்கையாளர்களாகவும் வளர்க்க ஆசைப்படுற பெற்றோர், சின்ன வயசுலேயே அவங்களை ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸ்ல சேர்த்துவிடுங்க...’’ அழகிய அறிமுகத்துடனும் அவசிய அட்வைஸுடனும் தொடர்கிறார் ரீனா.

இது மூன்றாவது வாழ்க்கை!

``ஹாக்கி சாம்பியனாகணும்கிறதுதான் என் சிறுவயசுக் கனவு. ஆனா, நான் நினைச்ச அளவுக்கு அதுல எனக்கு சப்போர்ட் கிடைக்கலை. அதனால, சைக்காலஜி முடிச்சேன். கனவுகள், லட்சியங்கள், ஆசைகள் எல்லாம் சிதைந்து, சின்னாபின்னமாகிற அளவுக்கு திடீர்னு ஒருநாள் உடல்நலக் குறைவால பாதிக்கப்பட்டேன். வாழ்க்கையே தடம் புரண்டது. 2006-ம் ஆண்டில் சாதாரண காய்ச்சல், ஜலதோஷத்துலதான் ஆரம்பமானது. மருந்துகள் எடுத்துக்கிட்டிருந்தேன். சரியாகலை. திடீர்னு உடம்பெல்லாம் வீங்கிடுச்சு. சாப்பிட முடியலை. வயிறு தொடர்பான இன்ஃபெக்‌ஷனா இருக்கும்னு சொன்னாங்க டாக்டர்ஸ். என்னென்னவோ ட்ரீட்மென்ட்ஸ் எடுத்தும் சரியாகலை. ஈசிஜி பண்ணினாங்க. ஒரு மாசம் கழிச்சு எனக்கு ஹார்ட் ஃபெயிலியர்னு கண்டுபிடிச்சாங்க. `டைலேட்டட் கார்டியோமயோபதி’னு அது ஓர் அபூர்வமான  பிரச்னை.

இதைக் கண்டுபிடிச்சபோது எனக்கு 25 வயசு. அதைத் தாங்கிக்கிற பக்குவம்கூட இல்லை. ஹார்ட் ஃபெயிலியர்னு கண்டுபிடிச்சப்போ என் இதயம் வெறும் 15 சதவிகிதம்தான் இயங்கிட்டிருந்தது. பிழைக்கிறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்பக் குறைவுனு டாக்டர்ஸ் சொன்னாங்க. என் நாள்கள் எண்ணப்பட்ட நிலையிலயும் நான் நம்பிக்கை இழக்கலை. கிட்டத்தட்ட நாலு வருஷப் போராட்டம்... என்னால நடக்க முடியாது. அதிகம் பேச முடியாது. எனர்ஜியே இருக்காது. அடிக்கடி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கேன். கிட்டத்தட்ட மரணத்துக்குப் பக்கத்துல போய் வந்த அனுபவம் அது.

ஒரு நாளைக்கு ஒரு லிட்டருக்கு மேல தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படிக் குடிச்சா இதயத்துக்கு நல்லதில்லை. எல்லாம் மாறும், ஏதோ ஒரு நல்லது நடக்கும்கிற நம்பிக்கையில நாள்களைக் கடத்தினேன். 2009 நவம்பரில் நிலைமை இன்னும் மோசமாச்சு. மருந்துகளும் வேலை செய்யலை. இதயத்தின் இயக்கம் இன்னும் மோசமாச்சு. `ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட்டேஷன்' மட்டும்தான் தீர்வுனு சொன்னாங்க டாக்டர்ஸ். என் ஆயுளுக்கு ஆறு மாசம் கெடு தந்தாங்க...’’ கேட்கிற நமக்கு இதயம் கனக்கிறது. ரீனாவுக்கோ, எதையும் தாங்கும் இதயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது மூன்றாவது வாழ்க்கை!

``கர்நாடகாவில் உறுப்பு மாற்று பற்றிய விழிப்பு உணர்வு குறைவு. ஆறு மாசங்கள் காத்திருந்ததுதான் மிச்சம். எனக்கு மாற்று இதயம் கிடைக்கலை. அப்போதான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது தெரியவந்தது. சென்னையில உள்ள டாக்டர்
கே.எம்.செரியன் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்த்தேன். முதலில் இதய மாற்றுக்கு என் மனசு இடம் கொடுக்கலை. நான் கன்வின்ஸ் ஆகவே பல நாள்களானது. ஆபரேஷனுக்குத் தயாரானாலும் அதன் பிறகு அந்த இதயத்துடன் என்னால வாழ முடியுமாங்கிற கேள்வி துரத்திக்கிட்டே இருந்தது.

ஆபரேஷன் முடிஞ்சு புது இதயத்தோடு பதினஞ்சே நாள்ல பெங்களூரு போனேன். `இதய மாற்று ஆபரேஷன் பண்ணின, முதல் கர்நாடகப் பெண்’ என்ற பெருமை எனக்குண்டு. எல்லாம் சரியாகிட்டதா நினைச்சிட்டிருந்தபோது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மாற்று இதயத்தில் `கார்டியோ ஆலோகிராஃப்ட் வாஸ்குலோபதி’னு ஒரு பிரச்னை வந்தது. அதாவது இதயத்துல ஏற்படுற நுண்ணிய அடைப்புகள். டிரான்ஸ்பிளான்ட்டேஷனுக்குப் பிறகு எடுத்துக்கிற சில மருந்துகளால் ஒரு சிலருக்கு வரும் பிரச்னையாம் இது. ஸ்டென்ட் போட்டு அடைப்பை எடுக்கிறதெல்லாம் இந்த விஷயத்துல நடக்காது. மறுபடி இதய மாற்று ஆபரேஷன் செய்றது மட்டும்தான் தீர்வுனு சொன்னதும், நொறுங்கிப்போனேன். 2017 செப்டம்பரில் ரெண்டாவது டிரான்ஸ்ப்ளான்ட்டேஷன் நடந்தது.

இது மூன்றாவது வாழ்க்கை!

நான் ஒரே இடத்துல இருக்கக் கூடாது. உடலுக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கிட்டே இருக்கணும். வாக்கிங், சைக்கிளிங்னு ஏதாவது செய்யணும். என்னால ஹாக்கி விளையாட முடியாது. ஆனாலும், அப்பப்போ என் ஹாக்கி ஸ்டிக்கைக் கையில வெச்சுக்கிட்டு வீசிப் பார்ப்பேன். ஆபரேஷன் முடிஞ்சு என்னை வார்டுக்கு மாத்தினதுமே சைக்கிள் கொடுத்து பெடல் பண்ணச் சொன்னாங்க. அதுதான் என் ஃபிட்னஸை மீட்டுத் தந்தது. பேஷன்ட்டுனா இதையெல்லாம் செய்யக் கூடாதுனு ஓர் அபிப்பிராயம் இருக்கும். என் விஷயத்துல எல்லாத்தையும் மாற்றிக்காட்டினேன்’’ - உறுதிகொண்ட நெஞ்சினாளாகப் பேசும் ரீனாவுக்கு, `இந்தியாவிலேயே இரண்டு முறை இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் பெண்’ என்கிற பெருமையும் உண்டு.

மூன்றாவது இதயத்துடன் வலம்வரும் ரீனா செய்கிற இன்னொரு விஷயம் பிரமிக்க வைக்கிறது. `லைட் எ லைஃப் ரீனா ராஜு ஃபவுண்டேஷன்’ என்கிற பெயரில் இவர் நடத்துகிற தன்னார்வ அமைப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றிய விழிப்பு உணர்வுக்காக இயங்குகிறது.

இது மூன்றாவது வாழ்க்கை!

``என்னை மாதிரி இருக்கிற பலருக்கும் உறுப்பு மாற்றுங்கிற ஆப்ஷன்கூடச் சொல்லப்படுறதில்லைங்கிறதுதான் பெரிய சோகம். இன்னும் அஞ்சு மாசங்கள், ஆறு மாசங்கள்னு நாள் குறிச்சு அனுப்பிடுறாங்க. இதையெல்லாம் பார்த்த பிறகுதான் ஃபவுண்டேஷன் ஆரம்பிக்கிற ஐடியா வந்தது. டிரான்ஸ்பிளான்ட்டேஷன்னா என்னன்னே தெரியாத மக்களுக்கான அமைப்பு இது. உறுப்பு மாற்று வலியுறுத்தப்படும்போது சம்பந்தப்பட்ட நோயாளி மட்டுமில்லாமல், அவங்க குடும்பத்தாரும் மிகப் பெரிய மன உளைச்சலுக்குள்ளாவாங்க. அதை நான் அனுபவிச் சிருக்கேன். டிரான்ஸ்பிளான்ட்டேஷ னுக்குப் பிறகும் வாழ்க்கை இருக்குங்கிறதை மக்களுக்குப் புரியவைக்கணும். வாழும் உதாரணமா இருந்து அதைச் செய்ய நினைச்சேன்.

அடுத்து, உறுப்பு மாற்று ஆபரேஷன்னாலே அது சாமானிய மக்களுக்கானதில்லை... பணக்காரங்களுக்கு மட்டும்தான் சாத்தியம்னு இன்னொரு கருத்தும் இருக்கு. எல்லாருக்கும் சாத்தியமாகிற பட்ஜெட்டிலும் அதைச் செய்ய முடியும்கிறதுக்கும் நானே உதாரணம். டிரான்ஸ்பிளான்ட்டேஷனை எல்லா மக்களுக்கும் சாத்தியமாக்கிறதுக்கான வழிகளையும் என் அமைப்பு செய்யுது.’’  - சொல்லிலும் செயலிலும் இதயம் கவர்பவர், 2019-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் `வேர்ல்டு டிரான்ஸ்பிளான்ட் கேம்ஸி’ல் பங்கேற்கும் ஆவலுடன் காத்திருக்கிறார்.

இது மூன்றாவது வாழ்க்கை!

``நம்முடைய சொந்த இதயத்தோடு இருக்கிறதுக்கும் மாற்று இதயத்தோடு வாழறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதல் டிரான்ஸ்பிளான்ட்டேஷன் முடிஞ்ச ஆறு மாசங்கள்ல 3.5 கிலோமீட்டர் மாரத்தானில் கலந்துக்கிட்டேன்.  அப்புறம் 5.7 கிலோமீட்டர், 8 கிலோமீட்டர் சைக்கிளிங், 15 அடி அண்டர்வாட்டர் வாக், 13,000 அடி உயரத்துலேருந்து ஸ்கை டைவிங் எல்லாம் பண்ணினேன். வேர்ல்டு டிரான்ஸ்பிளான்ட் கேம்ஸில் இந்தியா சார்பா கலந்துக்கிட்டேன். `இந்தியாவின் முதல் பெண் டிரான்ஸ்பிளான்ட் அத்லெட்’ என்ற பெருமையும் எனக்குண்டு.

``பலவீனமான இதயமா இருந்தாலும் என் சொந்த இதயத்தோடு வாழ்ந்த நாள்கள் அழகானவை. முதல் மாற்று இதயத்தோடு வாழத் தொடங்கியபோது வாழ்க்கை இன்னும் அழகானதா தெரிஞ்சது. ரெண்டாவது மாற்று இதயம், இப்போ எனக்குள்ள துடிச்சிட்டிருக்கு. இந்த இதயத்தோடுதான் எத்தனையோ பேர்களின் உயிர்களைக் காப்பாற்றும் முயற்சிகளை முன்னெடுத்துப் பண்ணிட்டிருக்கேன். என் மூன்று இதயங்களுமே அற்புதமானவை. இந்த உலகத்துலேயே ஸ்ட்ராங்கான இதயம்கொண்டவள் நான்தான்னு நினைக்கத் தோணுது. இது எனக்கு மூணாவது வாழ்க்கை. முழுமையான வாழ்க்கையும்கூட!’’

மற்றவருக்காகவும் சேர்ந்தே துடிக்கிறது ரீனாவின் மாற்று இதயம்!

- சாஹா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism