Published:Updated:

``2 நாள் டைம் குடுங்க, நானே வந்துடுறேன்" - போலீஸுக்கு ஃபேஸ்புக் கமென்ட் செய்த 'Wanted' நபர்!

`Wanted' என போலீஸ் போஸ்ட் செய்த போஸ்ட்டில், வலியச் சென்று கமென்ட் செய்திருக்கிறார் அந்தோணி என்பவர். இந்தச் சம்பவம் செம வைரலாகியிருக்கிறது.

``2 நாள் டைம் குடுங்க, நானே வந்துடுறேன்" - போலீஸுக்கு ஃபேஸ்புக் கமென்ட் செய்த 'Wanted' நபர்!
``2 நாள் டைம் குடுங்க, நானே வந்துடுறேன்" - போலீஸுக்கு ஃபேஸ்புக் கமென்ட் செய்த 'Wanted' நபர்!

மெரிக்காவில் முக்கிய அறிவிப்புகள் கொடுப்பதற்கும், குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் மற்ற ஊடகங்களைப் போல சமூக வலைதளங்களையும்  காவல்துறை பயன்படுத்தும். இப்படித்தான் கடந்த வாரம் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த ரிச்லேண்ட் காவல்துறை 38 வயதான அந்தோணி ஏகெர்ஸ் என்பவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. இதுவரை எல்லாம் ஓகேதான், அதன்பின் நடந்ததுதான் சுவாரஸ்யமான விஷயமே!

அதே பதிவின் கீழே வந்து ``அமைதி காக்கவும்!, நானே சரணடைய போகிறேன்" என்று கமென்ட் ஒன்றைப் பதிவுசெய்தார் தேடப்பட்டுவந்த அந்தோணி ஏகெர்ஸ். இதை நம்பி காவல்துறையும் பொறுமை காத்தது. ஆனாலும் அவர் சரணடையவில்லை. அதனால் ரிச்லேண்ட் காவல்துறை அந்த கமென்ட்டின்கீழ் "இன்னும் நாங்கள்  உங்களைப் பார்க்கவில்லையே, எங்களது வேலைநேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை. உங்களுக்குச் சிரமம் என்றால் இந்த எண்ணுக்குக் கால் செய்யுங்கள், நாங்களே வந்து பிக் அப் செய்துகொள்கிறோம்" என்று கமென்ட் செய்தது.

இதற்கும் பதிலளித்த அந்தோணி ஏகெர்ஸ் பொறுத்திருந்தமைக்காக  நன்றியைத் தெரிவித்துவிட்டு ``இரண்டு முக்கிய கடமைகளை நான் முடித்தாக வேண்டும், சரணடைந்தால் ஒரு மாத காலம் அங்கே இருக்கவேண்டும். எனவே கொஞ்சம் அவகாசம் தாருங்கள். அடுத்த 48 மணிநேரத்தில் அங்கு இருப்பேன்." என்று கமென்ட் செய்தார்.

இது நடந்து மூன்று நாள்களுக்குப் பிறகு, இந்த உரையாடலைக் கவனித்துவந்த மக்களில் ஒருவர் ஆர்வம் தாளாமல் ``அவர் சரணடைந்து விட்டாரா?" என்று ரிச்லேண்ட் காவல்துறையிடம் கேள்வி எழுப்பி ஒரு கமென்ட்டைப் பதிவுசெய்தார். அதற்கு "அவர் எங்க பாஸ் வரார்" என்கிற ரேஞ்சில் பதிலளித்தது காவல்துறை. இதையும் பார்த்த அந்தோணி இன்னொரு கமென்ட் ஒன்றை விட்டுச்சென்றார். 

``அன்பிற்குரிய ரிச்லேண்ட் காவல்துறைக்கு, பிரச்னை என்னிடம்தான் உங்களிடம் இல்லை. எனக்கு கமிட்மென்ட் பிரச்னைகள் இருக்கின்றன. என்னை மன்னித்து இன்னொரு வாய்ப்பு தாருங்கள். இதன் பின்னும் என்னை நம்புவதற்கு உங்களிடம் எந்த ஒரு காரணமும் இல்லை என்று நான் அறிவேன். ஆனால் நம்புங்கள் கண்டிப்பாக நாளை மதியத்திற்குள் வந்துவிடுவேன். இல்லையென்றால் என் பிரச்னைகளைத் தீர்த்துவைக்குமாறு உங்களுக்கு நானே கால் செய்கிறேன். இன்னொரு வாய்ப்பு அளிப்பதாக இருந்தால் தற்போதே என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றது அந்த கமென்ட்.

இதன் பின்னும் அவர் வராததால் பொறுமை இழந்த ரிச்லேண்ட் காவல்துறை  மீண்டும் ஃபேஸ்புக்கில் "திங்கள் ஆகிவிட்டது அன்பிற்குரிய அந்தோணி, கடந்த புதன் அன்று  'வான்டெட்' என்று உங்களைப் பற்றி பதிவிட்டிருந்தோம். அதற்கு நீங்கள் பதிலளித்து சரணடையப் போவதாகக் கூறினீர்கள். நாங்களும் அதைநம்பி பொறுமை காத்தோம். பின்னும் 48 மணிநேர அவகாசம் கேட்டீர்கள், அதையும் வழங்கினோம். வார இறுதியும் முடிந்துவிட்டது. நீங்கள் வரப்போவதில்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். இப்போதும் எங்களது அவசர எண்ணுக்கு அழைத்தால் நாங்களே உங்களிடம் வந்து அழைத்துச் செல்கிறோம்" என்று பதிவிட்டது. 

இம்முறை உண்மையிலேயே சரணடைய வந்த அந்தோணி ஏகெர்ஸ் லிஃப்ட் முன் நின்று எடுத்த செல்ஃபியை கமெண்ட் செய்து "இதோ வந்துவிட்டேன் அன்பே" என்ற ரேஞ்சில் ஃபீல் செய்திருந்தார். காவல்துறைக்கும், குற்றவாளிக்குமான இந்த உரையாடல் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இவர் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் `Department of corrections' என்ற துறை விதித்த கட்டுப்பாடுகளை மீறியதால் இப்படித் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு இது இப்போது செம வைரல். ஊடகங்கள் பலவும் இதைப்பற்றிப் பேச, மக்கள் அனைவரும் அந்த ஃபேஸ்புக் போஸ்ட்டை தேடிச்சென்று பார்த்துவருகின்றனர். அதில் இருக்கும் பொதுமக்களின் கமென்ட்களும் மிகவும் ஜாலியாக இருக்கின்றன. இப்படி எல்லாரையும் மகிழ்வித்ததற்காகவாவது, "அவரை சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கப்பா!" என்ற அளவில் உருகுகின்றனர் சில நெட்டிசன்கள். இதே நிகழ்வு நம்மூர்ல நடந்திருந்தா எப்டியிருக்கும்? உங்கள் கற்பனையை கமென்டில் கொட்டுங்க!