Published:Updated:

தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின்

தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின்
பிரீமியம் ஸ்டோரி
தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின்

உறவுகள்... உணர்வுகள்...

தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின்

உறவுகள்... உணர்வுகள்...

Published:Updated:
தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின்
பிரீமியம் ஸ்டோரி
தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின்

வாட்ஸ்அப் அறிமுகமாகியிருந்த நேரம் அது. வீட்டுக்குள்ளேயே தானும் தன் குடும்பத்தாரும் வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிக் கொள்வோம் என்பதை, பெருமையாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பிரபல நடிகை ஒருவர்.

`வீட்டுக்குள்ளேயே இருப்பாங்களாம்... வாட்ஸ்அப்ல பேசிப்பாங்களாம்.  ஒருத்தரோடு ஒருத்தர் முகம்பார்த்துப் பேசிக்கவேண்டியதுதானே... பெரிய இடம்னா இப்படித்தான்போல...' என்று பழித்தவர்களில் நாமும் இருந்திருப்போம்.

இன்று, `வாட்ஸ்அப் இல்லாமல் வாழ்க்கையே இல்லை; இன்ஸ்டாகிராம் இல்லாமல் இல்லறம் இல்லை' என்கிற நிலை. எழுத்துகளைச் சுருக்கி, மொழிக் கொலை செய்து, வார்த்தைகளை டைப் செய்த காலம் மாறி, இது வாய்ஸ் மெசேஜ் காலம். வாய்ஸ் மெசேஜில் பேசுவதை நேருக்குநேர் பேசினால்கூட உறவுகள் மேம்படும். ஆனால், யாருக்கும் பொறுமையில்லை.

இயந்திரத்தனமான வார நாள்களில்தான் இப்படி என்றால், விடுமுறை நாள்கள் இன்னும் மோசம். முகம் தெரியாத நபர்களுடன் வீக் எண்டு பார்ட்டி, ஹைவேஸில் பைக் ரைடு, இரவுக்காட்சி, விடியும் வரையிலும் விரல்களுக்கு வலிக்கும் வரையிலும் மொபைல் விளையாட்டு... இப்படித்தான் நகர்கின்றன நாள்களும் பொழுதுகளும். என்றோ ஒருநாள் ஞானம் பிறந்து நின்று நிதானமாக யோசித்துப் பார்த்தால், இழந்தது காலத்தை மட்டுமல்ல... உறவுகளையும்தான் என்பது விளங்கும்.

தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின்

உலகமே அப்படித்தானே இருக்கிறது! யாரோ ஒருவர் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியுமா என்ன என்பதே பலரின் மனக்குரல்கள். மாற்றம் என்பது, வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும். வீடு மாறினால் சமூகம் மாறும். எல்லாம் மாறும். இப்படியொரு மாற்றத்துக்கான விதையை விதைத்திருக்கிறார்கள் இண்டலெக்ட் டிசைன் அரெனா  லிமிடெட்டின் நிர்வாகி மற்றும் போலாரிஸ் குரூப் நிறுவனரான அருண் ஜெயினும் அவரின் மனைவி மஞ்சு ஜெயினும். `ஹம்' டிரஸ்ட்டின் டிரஸ்ட்டிகளாக இருக்கும் இவர்கள் அன்பளிப்பாகக் கொடுக்கும் `ஹம்' புத்தகம், உறவுகளின் உன்னதம் பேசுகிறது.

``ஃபேமிலி டைம் என்பதே இல்லாமல்போய்விட்ட இன்றைய சூழலில், இந்தப் புத்தகம் அந்த நேரத்தை மீட்டெடுக்கும்'' என்கிறார்கள் இந்தத் தம்பதியர். அப்படியென்ன முயற்சி அது? மஞ்சு ஜெயின் பேசுகிறார்.

``எங்க குழந்தைக்கு ஸ்கூல்ல ஒரு புராஜெக்ட் கொடுத்தாங்க. `ஃபேமிலி ட்ரீ' பற்றிய அந்த புராஜெக்ட்டுக்காக வொர்க் பண்ண ஆரம்பிச்சப்போ, சுவாரஸ்யமான நிறைய அனுபவங்கள் கிடைச்சது. அப்பதான் அதையே நாம ஏன் குடும்பங்களுக்கான புராஜெக்டா பண்ணக் கூடாதுனு தோணுச்சு. சின்ன விதையா இருந்த அந்த ஐடியாதான், `ஹம்' என்கிற ஆலமரமா இப்ப வளர்ந்திருக்கு.

நானும், எங்க அசோசியேட் பத்மினியும் இது தொடர்பா நிறைய யோசிச்சோம். இந்த அவசர உலகத்துல நாம எந்த மாதிரியான தருணங்களை, நினைவுகளையெல்லாம் மிஸ் பண்ணிட்டிருக்கோம்னு பார்த்துப் பார்த்து இந்தப் புத்தகத்துல சேர்த்தோம். நாங்க நினைச்சதைவிட பிரமாதமாவும் பிரமாண்டமாவும் உருவாச்சு `ஹம்' புராஜெக்ட்'' - மஞ்சுவின் முன்னுரை ஆர்வம்கூட்டுகிறது.

`ஃபேமிலி ட்ரீ' என்ற பெயர் உணர்த்துவதற்கேற்ப, உங்கள் குடும்பம், மூதாதையர்களின் குடும்பங்கள், முந்தைய வாரிசுகள், அடுத்த வாரிசுகள் என உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் பிரதானமாக இடம்பெறும். அடுத்து உங்கள் வாழ்வின் முக்கியமான தருணங்கள். முதன்முதலில் சேலை கட்டிய நாள், உங்களவரிடம் காதலை வெளிப்படுத்திய தருணம், பாப்பா உங்களை `ம்மா' என்றழைத்த நொடி என எதுவாகவும் இருக்கலாம். அதேபோல உங்கள் குடும்பப் பாரம்பர்யம் பேசும் சடங்குகள், சம்பிரதாயங்கள் எனத் தலைமுறைகளின் அருமை பெருமைகள் என எல்லாவற்றையும் பதிவுசெய்யும் பெட்டகமாக விளங்குகிறது `ஹம்' புத்தகம்.

``நானும் என் கணவரும், கூட்டுக்குடும்பப் பின்னணியிலேருந்து வந்தவங்க; உறவுகளின் அருமை உணர்ந்தவங்க; உறவுகள்சூழ் வாழ்க்கையை  அனுபவிச்சவங்க. அந்த அடிப்படையில நம்முடைய மூதாதையர்கிட்டயிருந்து நாம கத்துக்கவேண்டிய பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் பதிவு செய்றதோடு, அடுத்த தலைமுறைக்கும் தொடரச் செய்யணும்னு விரும்பினோம். இந்த புராஜெக்டை ஆரம்பிச்சப்பவே எங்க குடும்பத்துக்கான பதிவா மட்டும் வெச்சுக்கலாம்னு சுயநலமா நினைக்கத்தோணலை. உறவுகளின் மேன்மையை எல்லோரும் உணரணும்னு நினைச்சோம். அதனாலதான் எங்க கம்பெனியின் அசோசியேட்ஸின் (ஊழியர்களை நாங்கள் அசோசியேட்ஸ் என்றே அழைக்கிறோம்) ஆனிவர்சரி, திருமணங்கள்னு எல்லா நல்ல நிகழ்ச்சிகளுக்கும் அன்பளிப்பா கொடுத்திட்டிருக்கோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின்

விளையாட்டா ஆரம்பிச்ச முயற்சி. ஆனாலும், நிறைய நல்ல புதிய விஷயங்களைக் கத்துக்கொடுத்தது. இந்த புராஜெக்ட் சம்பந்தமா நிறைய பேர்கிட்ட பேசினேன். அவங்ககிட்டல்லாம், `உங்க சந்ததிக்குச் சொல்ல நினைக்கிற, பதிவுசெய்ய நினைக்கிற விஷயங்கள் என்னென்ன?'னு கேட்டிருக்கேன். இயல்புலேயே கூச்ச சுபாவமுள்ளவளான நான், இந்த புராஜெக்ட்டை பண்ண ஆரம்பிச்ச பிறகு எனக்குள்ளேயே நிறைய மாற்றங்களை ஃபீல் பண்ணேன்.

ராஜஸ்தான்ல ஒரு ஸ்கூலின் ஹானர் ரோலில் தன் பெயரும் இருக்கிறதா, என் அங்கிள் ஒருத்தர் சொன்னார். அவரை எத்தனையோ முறை சந்திச்சப்பெல்லாம் எனக்குப் பெருசா படாத அந்த விஷயம், அப்போ புதுசாவும் பெருமையாவும் பட்டது. இப்படிப்பட்ட சின்னச் சின்னத் தகவல்கள்கூட புத்தகத்தை வடிவமைக்கிறதுல உதவியா இருந்துச்சு. `ஹம்' புத்தகத்தின் முதல் பக்கத்துலயிருந்து முடியுற இடம் வரைக்கும் எல்லாத்தையும் கையாலயே எழுதிப் பதியணும். ஜென் இஸட் தலைமுறைக்கு வசதியா இதை டிஜிட்டல் வடிவில் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை'' என்கிறார் மஞ்சு ஜெயின்.

``இன்னிக்கு எழுத்துங்கிறதையே எல்லாரும் மறந்திட்டிருக்கோம். கடிதங்கள் எழுதறதில்லை. இ-மெயில், இ-கிரீட்டிங், இ-இன்வைட்னு எல்லாமே எலெக்ட்ரானிக் மயம். இந்தப் புத்தகத்தையும் அப்படி கொண்டுவர்றதுல எங்களுக்கு உடன்பாடில்லை. என் மகன் பிறந்தப்போ எனக்கு வந்த வாழ்த்து அட்டையையும், சின்ன வயசுல தீபாவளிக்கு என் கசின் கைப்பட எழுதி அனுப்பின கிரீட்டிங் கார்டையும் நான் பொக்கிஷமா இன்னும் வெச்சிருக்கேன். எழுத்துங்கிறதும் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டதுதான். அந்த ஃபீலிங்கை எல்லாரும் அனுபவிக்கணும்கிறதுக்காகத்தான் இந்த வடிவம்...'' - மஞ்சு சொல்லும் காரணம், மனதுக்கு இதமாக இருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள், விடுமுறை நாளின் வேடிக்கை விளையாட்டாக இந்தப் புத்தகத்தை நிரப்பலாம். இதை ஒரே நாளில் முடித்துவிட முடியாது. ஒவ்வொரு பக்கமும் ஒரு வாழ்க்கை. அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் ஆயிரம் நினைவுகளைத் தூண்டும். அந்த நினைவுகளோடு தொடர்புடையவர்களை நினைக்க வைக்கும். அவர்களில் நம்முடன் இல்லாதவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்யும். இருப்பவர்களிடம் இன்னும் அன்பு செலுத்த வைக்கும்.

முதல் பக்கத்தில் தொடங்கி வரிசையாகத்தான் புத்தகத்தில் எழுதி முடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஏதோ ஒரு சுவாரஸ்யம் காத்திருக்கும். குடும்பத் தலைவனோ, தலைவியோதான் நினைவுகளைப் பதிய முடியும் என்றில்லாமல், வீட்டின் கடைக்குட்டி வரை எல்லோருக்கும் இடமுண்டு என்பது அடுத்த சுவாரஸ்யம். இதில் பதியப்படுபவை அனைத்தும் கதைகள், கற்பனை கலக்காத வாழ்க்கைக் கதைகள், அனுபவங்கள்!

``கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்களே, கலாசாரச் சீரழிவுகளுக்கும் உறவுச் சிக்கல்களுக்கும் அதிகம் இலக்காகுறாங்கனு நிறைய பேசறோம். முறை தவறிய உணவுப்பழக்கம் முதல் உறவு முரண் வரை கார்ப்பரேட் கம்பெனி சூழல்லதான் எல்லாம் நடக்கிறதா பழி சொல்றோம்.  இதையெல்லாம் பொய்யாக்குது `ஹம்' புராஜெக்ட். இண்டலெக்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை ஒவ்வொருவரும் உறவுகளையும் உணர்வுகளையும் மதிக்கக் காரணமா இருக்கிறது `ஹம்'. இந்த முயற்சியின் பலன் எல்லாருக்கும் கிடைக்கணும்கிற  எண்ணத்துல கூடிய சீக்கிரமே இந்தப் புத்தகத்தை அமேசானில் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்துக்கிட்டிருக்கு'' - நல்ல சேதி சொல்கிறார் பத்மினி.

ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸோ, புகைப்படமோ போடுகிறோம். அடுத்த வருடம் `ஆன் திஸ் டே' என்கிற நினைவூட்டலுடன் மீண்டும் சிலபல லைக்ஸுடன் அதைக் கடந்துபோகிறோம்.

நம் வாழ்வின் முக்கியத் தருணங்கள், அப்படி ஒரு நாளுடன் கடக்கப்பட வேண்டியவை அல்ல; தலைமுறைகள் தாண்டியும் தொடர வேண்டியவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism