Published:Updated:

விண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்!

விண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்!
விண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 'அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. பல சாதனைகளை முறியடித்தது. இந்த ட்ரெய்லரின் முதல் சில நொடிகள், கடந்த பாகத்தின் முடிவுக்குப் பிறகு விண்வெளியில் விட்டுவிடப்படும் அயர்ன்மேன், தன் உணர்வுகளைத் தன் காதலிக்காக உருகிப் பதிவுசெய்துகொண்டிருப்பார். அடுத்தநாள் காலை வரைதான் ஆக்ஸிஜன் இருப்பும் இருப்பதாக அவர் கூறுவார். கடந்த பாகத்திலேயே பாதி சூப்பர் ஹீரோக்கள் மண்ணாகிப்போன பின்பு, இப்போது கவலைக்கிடமாக இருக்கும் அயர்ன்மேனை யார், எப்படிக் காப்பாற்றுவார்கள் என்ற கேள்வியுடன் இணையத்தில் சுற்றிவருகின்றனர் ரசிகர்கள். பலர், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சித் துறையான நாசாவிடம் ஏதேனும் செய்யமுடியுமா என்று கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

இந்த ரசிகர்களின் உரையாடலில் பங்கெடுக்கும் விதமாக, நாசாவும் அயர்ன்மேனின் இந்த நிலை தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளது. "மார்வெல், நீங்கள் முதல் விஷயமாக மிஷன் கன்ட்ரோலில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். தொடர்புகொள்ள வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றால், உங்களது கிரவுண்ட் குழுக்கள் இருக்கும் தொழில்நுட்பம் அனைத்தையும் கொண்டு விண்வெளியை ஸ்கேன்செய்து தொலைந்துள்ள அவெஞ்சரைக் கண்டுபிடியுங்கள்" என்று அந்த ட்வீட்டில் அறிவுறுத்தியுள்ளது.  

இப்படி ரியல் விண்வெளிக் குழு, ரீல் உலகத்திற்குச் செய்துள்ள இந்த ட்வீட், நெட்டிசன்கள் மற்றும் சூப்பர் ஹீரோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. உண்மையில், அயர்ன்மேன் டோனி ஸ்டார்க் தப்பிக்கிறாரா, தப்பித்தால் எப்படித் தப்பிக்கிறார் போன்ற கேள்விகளுக்கு ஏப்ரல் 2019ல்தான் பதில் கிடைக்கும். அன்றுதான் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் ரிலீஸ் ஆக உள்ளது.