Published:Updated:

ஐந்து மாநிலத் தேர்தல், கண்டுகொள்ளப்படாத பழங்குடிகள்!

ஐந்து மாநிலத் தேர்தல், கண்டுகொள்ளப்படாத பழங்குடிகள்!
ஐந்து மாநிலத் தேர்தல், கண்டுகொள்ளப்படாத பழங்குடிகள்!

ந்து மாநிலத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்தியக் காடுகளில் வசிப்பவர்களுக்கான வன உரிமைச் சட்டம் (Forest rights act- FRA) குறித்தும், அதில் இருக்கும் பாகுபாடுகள் குறித்தும் அவ்வப்போது நிறைய விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தனைக்கும் இந்தச் சட்டம் வனத்தைத் தங்களின் இருப்பிடமாகக் கொண்டிருக்கும் சுமார் 15 முதல் 20 கோடி மக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. 

ஆனால், தற்போதைய சில ஆய்வுகள் `எஃப்.ஆர்.ஏ ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை' என்பதைக் குறிப்பிட்டிருக்கின்றன. இருந்தாலும் தேர்தல் சீசனில் வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்கள் வன உரிமைச் சட்டத்தை முன்வைத்துத்தான், அவர்களிடம் வாக்கு சேகரிக்கின்றனர். ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள சூழலில், `சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காடுகள் அடர்ந்த பகுதியில் மக்களிடம் வாக்குச் சேகரிக்கச் சென்றவர்கள் வன உரிமைச் சட்டத்தைத்தான் கையிலெடுத்திருந்தனர்' என்று அங்கு ஆய்வு செய்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.   

இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தலைச் சந்திக்கும் தெலங்கானாவும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஜூன் 2, 2014 அன்று பிறந்த தெலங்கானா மாநிலம், ஒரு `மாதிரி அரசாக’ இருக்கும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள், வன உரிமைச்சட்டத்தைச் செயல்படுத்துவது என அனைத்திலுமே அந்த மாநிலம் இன்னமும் பின்தங்கியிருக்கிறது.

தெலங்கானாவில் மொத்தம் 9.3 சதவிகிதப் பழங்குடியினர் உள்ளனர். மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்பது தொகுதிகள் பழங்குடிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இதேபோல், மாநிலத்தின் மொத்தப் புவியியல் பகுதியில் காடுகள் மொத்தம் 18.22 சதவிகிதம் ஆகும். இதில் 3.95 மில்லியன் ஏக்கர் அளவிலான நிலம் காடுகள் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும். செப்டம்பர் 30, 2018 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறும் 51.1 சதவிகிதம் பேருக்கு மட்டுமே FRA-ன் கீழ், காடுகளுக்கான தனியுரிமை செல்லும் என அறிவிக்கப்பட்டது. மீதம் 45 சதவிகிதம் பேருக்கு நிராகரிக்கப்பட்டது. மேலும் 4.09 சதவிகிதம் மாநில அரசின் மேசைகளில் நிலுவையில் உள்ளன. காடுகளுக்கான பொது உரிமையோ அதைவிட இன்னும் குறைந்து வெறும் 21 சதவிகித பட்டாக்கள் மட்டுமே கிராமங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. 

2015-ல், `தெலங்கானாவைச் செழிப்பாக்குவோம்' என்கிற பெரிய அளவிலான வனப்பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியது. ரூபாய் 2,437 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பளவுக்குக் மரக்கன்றுகளை நடவு செய்வதன் மூலம் மாநிலத்தில் 33 சதவிகிதம் வரை பசுமையை அடைவதே இதன் நோக்கமாகும். 

இருப்பினும், தனிநபர் வன உரிமை நிலங்கள் மற்றும் பொதுநபர் வன உரிமை உள்ளிட்ட சட்டங்களில் ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் இந்தச் சிக்கல்கள், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குச் சிக்கலாக இருக்கின்றன. ஆகையால், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, பழங்குடி மக்களின் உரிமைகளை அதன் ஆட்சியில் விளிம்புநிலைக்கே அழைத்துச் சென்றிருக்கிறது. அதனால், இந்தத் தேர்தலில் பழங்குடி மக்களுக்காக உண்மையான சிந்தனையுடன் செயல்படப் போவது யார், முன்னேற்றம் என்கிற பெயரில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அனுமதி அளித்துவரும் பாரதிய ஜனதா கட்சியா? அல்லது ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு வழிவகுத்துக் கொடுத்த காங்கிரஸா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. வருடாந்திர மாநில முன்னேற்றம் குறித்தான விளக்கப்பட்டியலில் பொருளாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், அரசியல் முன்னேற்றம் உள்ளிட்டவற்றின் பட்டியலில் சூழலியல் சார்ந்த பொருளாதாரம் மற்றும் சூழலியல் முன்னேற்றமும் இனிமேலாவது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா என்கிற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.