Published:Updated:

முட்டுச்சந்தில் முப்பெரும் விழா!

முட்டுச்சந்தில் முப்பெரும் விழா!
பிரீமியம் ஸ்டோரி
முட்டுச்சந்தில் முப்பெரும் விழா!

முட்டுச்சந்தில் முப்பெரும் விழா!

முட்டுச்சந்தில் முப்பெரும் விழா!

முட்டுச்சந்தில் முப்பெரும் விழா!

Published:Updated:
முட்டுச்சந்தில் முப்பெரும் விழா!
பிரீமியம் ஸ்டோரி
முட்டுச்சந்தில் முப்பெரும் விழா!

‘‘தி.மு.க-வின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டபிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. பிரமாண்டமாக நடத்தியிருக்க வேண்டிய இந்த விழாவைப் பிசுபிசுக்க வைத்துவிட்டார்கள்’’ என்று புலம்புகிறார்கள் தி.மு.க தொண்டர்கள்.

பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க உதயமான நாள் ஆகிய மூன்றையும் இணைத்து செப்டம்பர் 15-ம் தேதி முப்பெரும் விழாவாகக் கொண்டாடுவது தி.மு.க-வின் வழக்கம். இந்த முறை அந்த விழா விழுப்புரத்தில் நடந்தது. கட்சித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின் நடைபெறும் முதல் முப்பெரும் விழா, கட்சி நிர்வாகிகள் கூட்டம் தவிர்த்து அவர் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. எனவே, எதிர்பார்ப்பும் உற்சாகமுமாக இருந்தனர் தி.மு.க-வினர். ஆனால் விழா நடந்த இடம், அதற்கான ஏற்பாடுகள், வந்திருந்த கூட்டம் போன்றவற்றைப் பார்த்ததும் காற்றுபோன பலூனாக தி.மு.க-வினர் துவண்டுபோனார்கள்.

முட்டுச்சந்தில் முப்பெரும் விழா!

‘‘முப்பெரும் விழாவை நடத்த எல்லா மாவட்டங்களின் நிர்வாகிகளும் போட்டி போட்டனர். ஆனால், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி கொடுத்த அழுத்தத்தால், விழுப்புரம் இறுதிசெய்யப்பட்டது. திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ஜானகிபுரம் மைதானத்தில் விழாவைப் பிரமாண்டமாக நடத்தியிருக்கலாம். ஆனால், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் மஸ்தான், தெற்கு மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் பொன்முடிக்காக வேலை செய்யத் தயாராக இல்லை. வேறு எங்கேயாவது வைத்தால் கூட்டம் வராமல் போய்விடுமோ என்ற பயத்தில்தான், முட்டுச்சந்தில் உள்ள விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடத்தி முடித்துவிட்டார் பொன்முடி. விழா மைதானத்தைப் பார்த்ததும், ஸ்டாலின் உட்பட அத்தனை தலைவர்களின் முகங்களும் வாடிவிட்டன’’ என்கிறார்கள் தி.மு.க-வினர். உண்மையில், வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கூட இல்லாமல் துடைத்து எடுத்தது போல இருந்தது விழுப்புரம்.

சில முன்னணித் தலைவர்களைத் தவிரத் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் என யாருக்கும் தங்குவதற்கான ஏற்பாடுகள்கூட செய்து தரப்படவில்லை. இந்த விழாவுக்காக, கட்சியின் நிர்வாகிகளிடம் கட்டாய வசூல் செய்யப்பட்டது. இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகியிருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் பலரும் கணக்குப் போட்டிருக்க, ‘‘விழாச் செலவுகள் போக மீதிப் பணம் 30 லட்சம் ரூபாயைத் தேர்தல் நிதிக்காக அளிக்கிறோம்’’ என்று மேடையில் பொன்முடி அறிவித்ததும் பல நிர்வாகிகளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

‘‘தி.மு.க-வில் விழுப்புரம் மாவட்டம் வடக்கு, தெற்கு, மத்தி என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும் அனைத்து மாவட்டங்களிலும் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார் பொன்முடி. அதனால் கடுப்பில் இருக்கும் நிர்வாகிகள் பலர், அவருடன் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். இதனாலேயே இந்த விழா பிசுபிசுத்துவிடும் அபாயம் உள்ளது என ஸ்டாலினிடம் கொட்டித் தீர்ப்பதற்காக முக்கிய நிர்வாகிகள் பலரும் போனோம். ஆனால், இதுபற்றிப் பேச வாய்ப்பு கிடைக்காததால் திரும்பிவந்துவிட்டோம்’’ என்று நம்மிடம் சொன்னார்கள் சிலர்.

கட்சி நிகழ்ச்சிகளில் தன் பெயரையும் படங்களையும் பயன்படுத்துவதற்குச் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்த போது, ‘இனி இது நடக்காது’ என்று உறுதி கொடுத்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால், விழுப்புரம் விழாவுக்கான சில ஃப்ளெக்ஸ்களில் உதயநிதி படம் பளிச்சிட்டது.

- ஜெ.முருகன்
படம்: தே.சிலம்பரசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism