Published:Updated:

``நான் இருக்கும்போது பெளலர ஏம்ப்பா பாக்குற!”- ரிஷப் பன்ட் ஜாலி ரிப்ளே

``நான் இருக்கும்போது பெளலர ஏம்ப்பா பாக்குற!”- ரிஷப் பன்ட் ஜாலி ரிப்ளே
``நான் இருக்கும்போது பெளலர ஏம்ப்பா பாக்குற!”- ரிஷப் பன்ட் ஜாலி ரிப்ளே

பேட்ஸ்மேன்களைத் தொந்தரவு செய்வதை நான் விரும்புகிறேன் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார்.

கம் ஆன் பேட்டி.. ரெண்டு சிக்ஸர் காட்டுமா... அடிலெட் டெஸ்ட் தனது விறுவிறுப்பானக் கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் விளையாடிக்கொண்டிருந்தது. ஆஸ்திரேலியா வீரர்கள் சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்கக்கூடாது இன்றைய நாளை எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்ற நோக்கில் தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்திக்கொண்டு இருந்தனர். இந்திய அணியும் தனது பிடியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஆஸ்திரேலிய வீரர்களும் தங்களது போராட்டத்தை விடுவதாக இல்லை. ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சுக்கு சரண்டர் ஆனபோது. டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்கள் போராடிக்கொண்டிருந்தனர்.

ஸ்லெட்ஜிங் செய்வது ஆஸ்திரேலிய வீரர்களுக்குக் கைவந்த கலை. எதிரணியினரை அடிக்கடி சீண்டி அவர்களை ஆக்ரோஷப்படுத்துவது வழக்கமாக ஆஸ்திரேலியா வீரர்கள் கையாளும் பாணி தான். இந்த டெஸ்ட் போட்டியின்போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலியா வீரர் கம்மின்ஸ் அவரைச் சீண்டினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசி ராகுல் பதிலடி கொடுத்தார்.

ஆனால் இந்த முறை ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டியது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், கம்மின்ஸுக்குப் பின்னால் நின்றுகொண்டு தொடர்ச்சியாக சத்தமாகப் பேசிக்கொண்டே இருந்தார். தோனிக்கு நேர் எதிராக பன்ட் செயல்பட்டார். இவர் தொடர்ச்சியாகப் பேசுவதைக் கவனித்த வர்ணனையாளர்கள், ஒருகட்டத்தில் அஷ்வின் பந்துவீசும்போது, தங்களின் வர்ணனையை நிறுத்திவிட்டு, பன்ட் பேசுவதை மட்டும் ஒளிபரப்பினர். அப்போது அவர்,  ``இங்கு அனைவரும் புஜாரா இல்லை. இங்கு தாக்குப்பிடிப்பது எளிதல்ல. பேட் (கம்மின்ஸ்), மோசமான பந்தை சிக்ஸ் அடி பார்க்கலாம்” என்று தொடர்ச்சியாக கூறிக்கொண்டே இருந்தார். ரிஷப் கமெண்டுக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்தது. ராகுலை கம்மின்ஸ் சீண்டினார்.. ரிஷப் கம்மின்ஸை சீண்டுகிறார் என ரசிகர்களே ஆதரவுக் குரல் கொடுத்தனர். 

இந்தப்போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ரிஷப் பன்ட் 11 கேட்சுகள் பிடித்து, ஒரு போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையைச் சமன் செய்தார்.

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷப் பன்ட், ``ஆஸ்திரேலியா வீரர்கள் இலக்கை நோக்கி முன்னேறி வரும்போது பதற்றமாகத் தான் இருந்தது. ஆனாலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றியில் எனது பங்களிப்பு இருப்பது மகிழ்ச்சியே. பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்வது எனக்குப் பிடித்தமான ஒன்று. பந்துவீச்சாளர்களை மீது கவனம் செலுத்துவதைவிட என் மீது அவர்கள் கவனம் இருப்பதையே நான் விரும்புகிறேன்’’ என்கிறார் இந்த இளம் கிரிக்கெட்டர்.