Published:Updated:

வேள்பாரி 100 - விழா

வேள்பாரி 100 - விழா
பிரீமியம் ஸ்டோரி
வேள்பாரி 100 - விழா

வேள்பாரி 100 - விழா

வேள்பாரி 100 - விழா

வேள்பாரி 100 - விழா

Published:Updated:
வேள்பாரி 100 - விழா
பிரீமியம் ஸ்டோரி
வேள்பாரி 100 - விழா
வேள்பாரி 100 - விழா

வீரயுக நாயகன் வேள்பாரி நூறாவது வாரத்தை எட்டியதையொட்டி விகடன் விழா எடுத்தது. இதை ‘விகடன் விழா’ என்று சொல்வதா, ‘வாசகர்கள் விழா’ என்று சொல்வதா என்று சொல் மயக்கம், பொருள் மயக்கம் வருமளவுக்கு சென்னை இந்தியன் ஆபீஸர்ஸ் அசோசியேஷன் அரங்கத்துக்கு வாசகர்கள் திரளாக வந்திருந்து நம்மை மயங்கவைத்தனர்; மலைக்கவைத்தனர். 

வேள்பாரி 100 - விழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எழுத்தாளர் சு.வெங்கடேசனும் ஓவியர் மணியம் செல்வனும் உள்ளே நுழைய, கைத்தட்டல்களும் விசில்களும் காதைப் பிளந்தன. நிகழ்வின் தொடக்கமாக இரண்டு வீடியோக்கள் திரையிடப் பட்டன.

 ‘வேள்பாரி’யின் கதையை மணியம் செல்வன் ஓவியங்களின் துணைகொண்டு வீடியோவாக மாற்றி ஒளிபரப்பினோம். அடுத்து `நூறு வாரம்...நூறு விநாடி வீடியோ போட்டி’க்கு வந்த வீடியோக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ஒரு வீடியோவும் திரையிடப்பட்டது. இரண்டு வீடியோக்களையும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக ரசித்தனர் வாசகர்கள்.  (இந்த வீடியோக்களை https://www.youtube.com/user/vikatanwebtv/videos என்ற தளத்தில் காணலாம்.)

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக அரசின் தொல்லியல்துறை ஆணையர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., இயக்குநர் வசந்தபாலன், பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகிய சிறப்பு விருந்தினர்களுடன் எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் ஆகியோரும் மேடை ஏறினர். மேடையில் இருந்த அனைவருக்கும் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் ஆனந்த விகடனின் ஆசிரியருமான பா.சீனிவாசன் நினைவுப்பரிசு வழங்கினார். பரிசல்.கிருஷ்ணா அனைவருக்குமான அழகான வரவேற்புரை வழங்க, சிறப்பு விருந்தினர்கள் பாரியுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“சமூக வலைதளங்களில்  மிகவும் சுருக்கமாகப் படித்துப் பழக்கப்பட்டிருக்கும் தலைமுறை இது. அப்படிப்பட்ட இன்றைய தலைமுறையினரையும் ஈர்த்து, வாசிப்பை வளர்க்கிறது ‘வேள்பாரி’. தன் நாட்டிற்குவரும் கபிலரைப் பாரி தோளில் சுமந்து வருவது போல, எழுத்தாளர் சு.வெங்கடேசனை யானையில் வைத்து அழைத்து வந்திருக்க வேண்டும்” என்று வசந்தபாலன் வாழ்த்துமழை பொழிய, வரவேற்றுக் கைதட்டினார்கள் வாசகர்கள்.

வேள்பாரி 100 - விழா

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரீ.சிவக்குமார், “அடுத்துப் பேசவிருப்பவர் தரையில் மட்டுமல்ல, ஆகாயத்திலும் புகழ்பெற்றவர்” என்று அறிமுகம் கொடுத்து அழைப்பு விடுக்க, புரிந்து கொண்ட கூட்டம் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தது.

“தினமும் பறந்துகொண்டிருக்கும் எனக்கு, பேசுவதைவிடக் கேட்பதே எளிதானது என்பதால் நான் கேட்கவே வந்தேன்” என்று கலகலப்பாகப் பேசத் தொடங்கினார், அந்த அறிமுகத்துக்குரிய,  தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தான் ஒரு மருத்தவர் என்பதால் ‘வேள்பாரி’யின் மருத்துவக்கூறுகள் குறித்து வியந்து பேசினார்.

“வேள்பாரியின் நூறாவது வாரத்தில் பாரியின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிட்டு, உலகெங்கும் இருக்கும் வேள்பாரியின் வாசகர்களைப் பதற்றத்தில் ஆழ்த்திவிட்டு, சு.வெங்கடேசன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருப்பது மாபெரும் குற்றம் எனக் கருதுகிறேன். அதற்குத் தூரிகை  எனும் ஆயுதம் ஏந்தி ம.செ செய்துகொண்டிருக்கும் உதவியும் மாபெரும் குற்றம்தான்” எனக் கூறி ‘இத்தகைய குற்றங்களைச் செய்தவர்கள் பற்றித்தான் குற்றப்பத்திரிகை வாசிக்க வந்துள்ளேன்’ என்று கலகலப்பாகத் தன் பேச்சைத்  தொடங்கினார் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். ஆழமாகவும் அகலமாகவும் அவர் வழங்கிய உரை ‘வேள்பாரி’ குறித்த ஒரு பி.எச்.டி ஆய்வு என்றே சொல்லலாம்.

“உலகிலேயே எனக்குத் தெரிந்து வயதே ஆகாமல் இருப்பவை எஸ்.பி.பி குரலும் ம.செ-வின் ஓவியமும்தான். வாசிப்புத் தளத்திலிருந்து வெளியே சென்ற இளைய தலைமுறையை வேள்பாரியின் மூலம் வாசிப்பிற்குள் கொண்டு வந்ததற்கு மிகப்பெரிய காரணம் ம.செ-வின் ஓவியங்கள்தான்” என்று ம.செ-வைப் புகழ்ந்து தள்ளினார் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதிபாஸ்கர்.

“வரலாறு நெடுகிலும் அறம் சார்ந்தவர்கள் வஞ்சகத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படிக் கொல்லப்பட்டவர்களில் சிறந்தவன் வேள்பாரி. தமிழக அரசியலின் தொடக்க காலத்தில் தலைவர்கள் அறிவாளிகளாக இருந்தார்கள். மக்கள் முட்டாளாக இருந்தார்கள். ஆனால் இப்போது மக்கள் அறிவாளிகளாக இருக்கிறார்கள். தலைவர்கள்... ஜனநாயக ஆட்சியில் ஐம்பத்தோரு அறிவாளிகள் இருப்பது மன்னர் ஆட்சியில் ஓர் அறிவாளி இருப்பதற்குச் சமம். அப்படியான அறிவாளிதான் வேள்பாரி” என்று இன்றைய அரசியலோடு வேள்பாரியை ஒப்பிட்டுப் பேசினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பழ.கருப்பையா.

“ஒவ்வொரு முறையும் ஒரு தேர்வுக்குத் தயாராகும் மாணவனைப் போலவே இந்தத் தொடருக்கான படங்களை வரைய என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொடர் முடிவை நெருங்குகிறது. இரண்டு ஆண்டுகள் ஒரு நீண்ட பயணத்தில் ஒன்றாகப் பயணித்த அனைவரையும் விட்டுப் பிரியப்போகின்றேன் என்ற மனநிலை துயரம் தருகிறது” என்று குரல் தழுதழுக்கப் பேசினார் ஓவியர் மணியம் செல்வன்.

அதிஷாவின் நன்றியுரையுடன் விழா... முடிந்தது என்று எழுத வேண்டும். ஆனால் முடியவில்லை. அதற்குப்பிறகும் ஒருமணிநேரம் வாசகர்கள் சு.வெங்கடேசன், மணியம் செல்வன் ஆகியோருடன் கலந்துரையாடினர்; கையெழுத்து பெற்றனர். சிலர் அவர்களுக்கு என்று சிறப்புப் பரிசுகளையும் எடுத்து வந்திருந்தனர். பிரியத்தைப் பகிர்ந்தபின்பும் பிரிய மனமில்லாமல் சென்றார்கள்.

ஆமாம், ‘வேள்பாரி’ ஆசிரியர் என்னப்பா பேசினார் என்கிறீர்களா? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, அதே ‘எதிர்பார்ப்பு’தான் அரங்கத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த வாசகர்களுக்கும் இருந்தது.

விழாவின் இறுதியில் உரையாற்றிய சு.வெங்கடேசன், பல விஷயங்களைத் தொட்டுப் பேசிவிட்டு, எதிர்பார்ப்பின் முனைக்கு வந்தார்.

 “பாரி இறந்துவிட்டான் என்ற வரலாறு அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், பல நூற்றாண்டுகள் கழித்து  ‘பாரியைக் கொன்று விடாதீர்கள்’ என்ற வேண்டுகோள் குரல்கள் ஒலிப்பதற்கு என்ன காரணம்? ‘அறவழிப்பட்ட ஒருவன் இறந்துபோக ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்று வாசகர்கள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு வாசகரும் அதைப் பாரியாகப் பார்க்கவில்லை. ‘தான்தான் பாரி’ என்று வாசகர்கள் கருதுகிறார்கள். வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால் வரலாற்றை மீறுகிற ஆற்றல் புனைவெழுத்தாளனுக்கு உண்டு. அது நடக்கும்” என்று அவர் அழுத்தமாகக் கூறியதும் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. அந்தக் கைதட்டலின்  அதிர்வு போர்க்களத்தில் இருக்கும் பாரிக்கும் நிச்சயம் கேட்டிருக்கும்.

அழகுசுப்பையா ச. - படங்கள்: ஜெ.வேங்கடராஜ் 

வேள்பாரி 100 - விழா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism