Published:Updated:

உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன்? - பின்னணியைக் கூறும் நண்பர்கள்

உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன்? - பின்னணியைக் கூறும் நண்பர்கள்
உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன்? - பின்னணியைக் கூறும் நண்பர்கள்

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் நேற்று பிற்பகல் திடீரென தன் ராஜினாமாவை அறிவித்துள்ளார். இது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1963-ம் ஆண்டு கென்ய தலைநகர் நைரோபியில் பிறந்தார் உர்ஜித் படேல். இருந்தும் அவரின் பூர்வீகம் குஜராத் மாநிலத்தில் உள்ள கேடா மாவட்டம். உர்ஜித் படேலின் தாத்தா தன் பிழைப்புக்காகக் கென்யாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். தன் பள்ளிப் படிப்பு முழுவதையும் நைரோபியிலேயே முடித்துள்ளார் உர்ஜித். அதன் பிறகு லண்டன் பொருளியல் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். இதையடுத்து அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றார். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை, மத்திய நிதியமைச்சகத்துக்கு ஆலோசகராக இருந்தார். பிறகு ரிலையன்ஸ் குழுமத்திலும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பதவி வகித்தார். இதையடுத்து ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராகக் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார். உர்ஜித் படேல் பொறுப்பேற்ற சில நாள்களிலே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்புப் பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது மூன்றில் ஒரு கோரிக்கையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.  இதனால், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கடுமையான பனிப்போர் நடந்துவந்தது.

மத்திய அரசு உடனான கருத்து மோதலால் கடந்த மாதம் 19-ம் தேதியன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி போர்டு மீட்டிங்கில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வார் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், போர்டு மீட்டிங்கின்போது மத்திய அரசின் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியதாகவும் இதனால் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்தது என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையில் நேற்று பிற்பகல் சொந்தக் காரணங்களுக்காக தன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக உர்ஜித் படேல் திடீரென அறிவித்தார். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு பதவிக்காலம் முடியும் முன்னர் தன் பதவியை ராஜினாமா செய்யும் முதல் ஆர்.பி.ஐ கவர்னர் இவர்தான். 2019 செப்டம்பர் மாதம் வரையில் இவரது பதவிக்காலம் உள்ளது. உர்ஜித் படேலின் ராஜினாமாவை இன்னும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இவரின் சிறந்த பணியால் அடுத்த கவர்னராக படேலே இருப்பார் என்ற பேச்சுகளும் முன்னதாக அடிப்பட்டன. இப்படியிருக்க மத்திய அரசின் அதிக அழுத்தத்தினால் தற்போது தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என உர்ஜித் படேலின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது, ``மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து மோதல் நிலவிய காலத்தில் மிகவும் இறுக்கமாகவே இருந்தார் உர்ஜித். அதனால் அவரின் உடல் நலம் மிகக் கடுமையாக பாதித்தது. மன உளைச்சலின் உச்சத்தில் இருந்தார். அடுத்த வருடம் முடியும் பதவிக்காலத்துக்கு முன்னதாகவே தற்போது ராஜினாமா செய்துள்ளார். அவரைப் பொறுத்தவரை அவரின் ராஜினாமா என்பது மிகப் பெரியது. ஆனால், மத்திய அரசு தனக்கு அதிகம் அழுத்தம் தருவதாக நினைத்தார். அதனால் ஒரு கட்டத்தில் இந்த முடிவுக்கு வந்திருப்பார்” எனத் தெரிவித்துள்ளனர். 

உர்ஜித் படேலின் ராஜினாமா கடிதத்தில், ‘என் சொந்த காரியங்களுக்காக தற்போது நான் வகித்து வரும் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.  சில வருடங்களாக ஆர்.பி.ஐ-யில் பணியாற்றியது எனக்குப் பெருமையாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

News Credits : Times Of India