Published:Updated:

கறவைப் பசு வழங்குவதில் குளறுபடி; கண்டுபிடித்த கிராம மக்கள்! - கலக்கத்தில் அதிகாரிகள்

கறவைப் பசு வழங்குவதில் குளறுபடி; கண்டுபிடித்த கிராம மக்கள்! - கலக்கத்தில் அதிகாரிகள்
கறவைப் பசு வழங்குவதில் குளறுபடி; கண்டுபிடித்த கிராம மக்கள்! - கலக்கத்தில் அதிகாரிகள்

ஏழைகளுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்குவதில் குளறுபடி நடந்திருப்பதாகவும் அதிகாரிகள் வேண்டுமென்றே பணத்தை ஆந்திர பசுக்களை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் பயனாளிகள் கால்நடை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இடங்கன்னி மற்றும் அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பயனாளிகளை, அரசின் விதிமுறைப்படி கறவைப்பசுக்களைத் தேர்வு செய்து முன்பணம் கொடுத்து வைக்கும்படியும் இன்று டோக்கன் போட்டு பணம் தருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து பயனாளிகள் கறவைப் பசுக்களுக்கு முன்பணம் கொடுத்து மீதமுள்ள பணத்தை இன்றுக்குள் கொடுத்து பசுக்களை பெற்றுக்கொள்வதாகப் பயனாளிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது அதிகாரிகள் ஆந்திரா பசுக்களைத்தான் வாங்க வேண்டும் வற்புறுத்துகிறார்கள். அதே உரியத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு செய்துகொண்டிருக்கிறார்கள் என்று அதற்கான விளக்கம் பெற ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்றனர். காலை முதல் மாலை வரை அதிகாரிகள் யாரும் வராததால், ஆத்திரமடைந்த பயனாளிகள் மாலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, முன்பணம் கொடுக்கப்பட்ட நிலையில் பசுவின் உரிமையாளர்கள் மாடுகளை வாங்கிச் செல்ல கட்டாயப்படுத்துவதாகவும் மாடுகளைப் பெறவில்லை எனில் முன்பணம் தர முடியாது எனவும் கூறுவதாகத் தெரிவித்தனர். 

தகவலறிந்து வந்த கால்நடைத்துறை அலுவலர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸார் பயனாளிகள் முன்பணம் கொடுத்துள்ள பசுக்களை ஆய்வு செய்து அரசின் விதிமுறைகள் படி பசுக்கள் உள்ளதா என ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட கால்நடை சந்தையின் மூலம் விலை நிர்ணயித்து டோக்கன் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பயனாளிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.