Published:Updated:

``வள்ளலாரின் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டுபோவேன்!" பிரான்ஸ் நாட்டு ஜீவகாருண்யர் ஆலன்!

``வள்ளலாரின் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டுபோவேன்!" பிரான்ஸ் நாட்டு ஜீவகாருண்யர் ஆலன்!

ஆலன் தன் பெயரை நேற்று `அருளுடையார் ' என மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆலனுக்குள் எப்படி இப்படியொரு தமிழ் ஆர்வம். ஆலன் தமிழ் கற்றுக்கொள்ளக் காரணம்தான் என்ன ?

``வள்ளலாரின் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டுபோவேன்!" பிரான்ஸ் நாட்டு ஜீவகாருண்யர் ஆலன்!

ஆலன் தன் பெயரை நேற்று `அருளுடையார் ' என மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆலனுக்குள் எப்படி இப்படியொரு தமிழ் ஆர்வம். ஆலன் தமிழ் கற்றுக்கொள்ளக் காரணம்தான் என்ன ?

Published:Updated:
``வள்ளலாரின் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டுபோவேன்!" பிரான்ஸ் நாட்டு ஜீவகாருண்யர் ஆலன்!

`ல்லா உயிர்களையும் தன் உயிர் போல பாவித்து சம உரிமை வழங்குவோரின் இதயத்தில் இறைவன் வாழ்கிறான்' என்கிறார் வள்ளலார் பெருமான். அவரின் இந்த வார்த்தைகள் இந்தியா கடந்து அந்நிய மண்ணில் வாழும் ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியிருக்கிறது. 

வள்ளலார் அவதரித்த மண்ணிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற பிரான்ஸ் தேசத்தில் வாழும் ஆலன்,   `அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ' எனக் கொஞ்சுத் தமிழில் அருட்பா பாடி நம்மை வரவேற்கிறார். 

ஆலன், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 65. அவர் ஒரு  ஹீலர், சைக்கோதெரபிஸ்ட். அமெரிக்காவில் முதுகலைத் தத்துவம் படித்திருக்கிறார். தற்போது தமிழ்ப் படிப்பதற்காகத் தமிழகம் வந்திருக்கிறார். சென்னைத் தரமணியில் உள்ள மத்திய தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மூன்று மாத தமிழ் படிப்பில் சேர்ந்திருக்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலன் தன் பெயரை நேற்று `அருளுடையார் ' என மாற்றிக்கொண்டிருக்கிறார். ஆலனுக்குள் எப்படி இப்படியொரு தமிழ் ஆர்வம். ஆலன் தமிழ் கற்றுக்கொள்ளக் காரணம்தான் என்ன?

அவரிடமே கேட்டோம். 

``ஆன்மிகத் தேடலில், தன்னையறிதலில் எப்போதும் எனக்கொரு ஈர்ப்பு உண்டு. அதற்காக, உலகின் அனைத்து ஆன்மிகத் தத்துவ மரபுகளையும் தேடத் தொடங்கினேன். அப்போதுதான் யோகா, தியானம் பற்றித் தெரிந்துகொண்டேன். உடனே, பிரான்ஸில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற யோகா மையத்தில் சேர்ந்தேன். ஐந்து வருடங்கள் யோகா, தியானம் கற்றுக்கொண்டேன். வேத சாஸ்திரங்கள் பற்றியும் தெரிந்துகொண்டேன். ஆனாலும், எனக்குள் ஏதோ ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. மனிதர்களுக்குள் இருக்கிற ஏற்றத் தாழ்வுகளைச் சரிசெய்ய, நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் போதுமானதாகத் தெரியவில்லை.

மனிதச் சமூகம் ஏற்றத்தாழ்வற்ற பாகுபாடற்ற சமூகமாக இருக்க வேண்டும் என்பதே ஆன்மிகத்தின் அடிப்படை. ஆனால், தன்னையறிந்த ஞானிகள், மனிதர்களிடமிருந்து தள்ளி நிற்கிறார்கள். `இவன் எல்லாம் தெரிந்த ஞானி', `இவன் சாதாரணமானவன்' என அங்கேயே ஒரு ஏற்றத்தாழ்வு பிறந்துவிடுகிறது. யோகா, தியானம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் குருமார்களுக்குக்கூட  `தான் குரு' என்கிற அகந்தை இருக்கிறது. அங்கேயும் ஒரு மனிதப் பிரிவினை உண்டாகிறது. எனில் மனிதர்கள் அனைவருமே ஒன்றாக, சமத்துவமாக ஆன்மிகக் கடலில் சங்கமிக்க வழியே இல்லையா என நான் வாடி வதங்கித் திரிந்த நாளொன்றில்தான், வள்ளலார் பெருமான் பற்றித் தெரிந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.

நான் யோகா கற்றுக்கொண்ட மையத்தின் கிளை, இந்தியாவிலும் இருந்தது. அதன் காரணமாக அடிக்கடி இந்தியா வந்து செல்வேன். அப்போது ஒருமுறை பாண்டிச்சேரி வந்தபோதுதான், துளசிராம் என்கிற நபர் எழுதிய `அருட்பெருஞ்ஜோதி டெத்லெஸ் பாடி' என்னும் புத்தகத்தைப் படித்தேன். மனித நேயத்தை, ஆன்ம நேயத்தைப் போதித்த, உண்மையான ஞானியாக வாழ்ந்து மறைந்த வள்ளலார் பற்றித் தெரிந்துகொண்டேன். ஞானி என்பவன் பிணிகளுக்கு அப்பாற்பட்டவன், பலர் ஞானி என்று சொல்லிக்கொண்டு கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்கள். ஆனால், வள்ளலார் அப்படி அல்ல... எந்தப் பிணிக்கும் ஆட்படாதவர். தன் உயிரை ஜோதி வடிவமாக மாற்றி உலகுக்கு ஒளி தந்தவர்.

அதுமட்டுமல்ல, பசி என்பதும் பிணிதான் என உலகுக்குச் சொன்ன உத்தமர் அவர் மட்டும்தான். அதைப் போக்குவதற்கான வழியையும் கண்டவர். ஆன்மிகம் என்பது தன்னையறிதலோடு மட்டுமல்ல, பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், சமத்துவத்தைப் பேணுதலிலும் அடங்கியிருக்கிறது. அதன்படி வாழ்ந்துகாட்டியவர் வள்ளலார். அதன் பிறகுதான் என் வாழ்க்கையின் வழிகாட்டியாக அவரைப் பின்பற்றத் தொடங்கினேன்.

தமிழகத்துக்கு வந்து, அவர் வாழ்ந்த இடம், அவரின் பெயரில் நடக்கும் அன்னதானம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டேன். கருணையைப் போதித்த அந்த மகத்தான மனிதனின் பெயரில் நடக்கின்ற அன்னதானங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. 2003-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை நவம்பர்- டிசம்பர் மாதத்தில் தமிழகத்துக்கு வந்துவிடுவேன். 

வள்ளலார் பெருமகனும், சித்தர்களும் வாழ்ந்த தமிழ்நாட்டு மண்ணை மிதிக்கும்போதெல்லாம் என் தாய் மண்ணை மிதிக்கும் அளவுக்கு மகிழ்ச்சியாக உணருவேன். 

`ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்' என்னும் பெயரில் பிரெஞ்சு மொழியில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அடுத்ததாக, `நாம் ஏன் இறக்க வேண்டும்' என்னும் புத்தகத்தை எழுதிவருகிறேன்'' என்ற ஆலனிடம், `தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டது எப்படி' எனக் கேட்டேன். 

``உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேர் தமிழ்மொழிதான். நான் இதுவரை வள்ளலாரின் தத்துவங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் தான் படித்திருக்கிறேன். அதிலிருந்துதான் பிரெஞ்சுக்கு மொழி பெயர்த்து நூலாக்கியிருக்கிறேன். நான் வள்ளலாரின் பொன்மொழிகளை நேரடியாகத் தமிழிலேயே படிக்க ஆசைப்படுகிறேன். அதைத் தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறேன். இந்த மண் ஒரு புண்ணிய பூமி. ஆனால், இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு அது தெரியவில்லை. இயற்கையை நேசிக்க இங்குள்ள மக்கள் மறந்து விட்டார்கள். நிலமும், நீரும் அசுத்தமாயிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். பஞ்ச பூதங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். '' என்கிற ஆலனுக்குத் திருவாசகமும், திருமந்திரமும் கூட அத்துப்படி. திருமூலரின் யோக (கிரியா யோகா ) சூத்திரங்களையும் கற்றறிந்திருக்கிறார். 

கடந்த நாற்பது ஆண்டுகளாக சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வரும் ஆலனுக்கு மது, புகை, டீ, காபி என எந்தப் பழக்கமும் இல்லை. எந்தவோர் உடல் நலப் பிரச்னைக்காகவும் மருத்துவரைச் சந்தித்ததில்லை. சாதம் வடித்து அதில் தூதுவளை, முசுமுசுக்கை, வல்லாரை, கரிசலாங்கண்ணி என ஏதாவதொரு மூலிகைச் சாற்றைக் கலந்து சாப்பிட்டு வருகிறார் அவர். ஆலனின் இந்த மாற்றத்தை அவர்கள் நாட்டில் எப்படிப் பார்த்தார்கள் என ஆலனிடம் கேட்டால், ஆலன் தரும் பதில் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

``முதலில் எல்லோரும் என்னை ஒரு வேற்றுக்கிரக வாசிபோல்தான் பார்த்தார்கள். கொஞ்சம், கொஞ்சமாகத்தான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைக் கேட்க ஆரம்பித்தார்கள். தற்போது அவர்களிடத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது. அவர்களைவிட, மகான் வள்ளலார் அவதரித்த இந்த மண்ணில் மக்கள் நோயில்லாமல், தன்னிறைவு பெற்று வாழ வேண்டும் என்பதே என் ஆசை. அப்படி வாழ்வதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் உதவ முன்வர வேண்டும். கல்வி என்பது பொருளீட்டுவதற்கானதாக மட்டும் கற்பிக்கப்படாமல் தன்னையறிதலுக்கு உதவும் கல்வியாக இருக்க வேண்டும்.

அன்னதான சிந்தனை, கருணை மக்களிடம் பெருக வேண்டும். அதற்கு என்னால் ஆன அத்தனை உதவிகளையும், முயற்சிகளையும் மேற்கொள்வேன். என் வாழ்நாள் லட்சியமே இதுதான். '' என்கிறார் ஆலன் என்ற அருளுடையார்.

நல்ல கருத்துகளுக்கு மொழியோ, இனமோ, நில எல்லைகளோ தடையில்லை என்பதற்கு ஆலனின் இந்த மாற்றமே சாட்சி. மனிதக்குலத்துக்கு அவசியமான ஆரோக்கியமான விஷயங்கள் எந்த மொழியில் வந்தாலும், யார் அதைச் சொல்லியிருந்தாலும், மனித நேயத்தை விரும்புபவர்களால் போற்றப்படுவர், கொண்டாடப்படுவர் என்பதற்கு அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெருமகனின் புகழே சாட்சி. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism