Published:Updated:

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!
பிரீமியம் ஸ்டோரி
உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

சுற்றுச்சூழல்

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

சுற்றுச்சூழல்

Published:Updated:
உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!
பிரீமியம் ஸ்டோரி
உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

பல்லுயிர்ச்சூழல் மீது ஆசைகொண்ட பல விவசாயிகள், “பறவைகள், புழு பூச்சிகள் தின்னது போக மிச்சம் மீதிதான் நமக்கு” என்ற எண்ணத்தில் பயிர்களைச் சாப்பிட வரும் பறவைகளையும் பூச்சிகளையும் விரட்ட எந்த முயற்சியும் எடுக்காமல், கிடைத்ததை அறுவடை செய்து ‘ஆன்ம வேளாண்மை’ மேற்கொண்டு வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன். இவர் பறவைகளுக்காகப் பலவித பழ மரங்களை வளர்த்து வருவதுடன், பறவைகளுக்காக ஒரு குளமும் வெட்டியுள்ளார். இவரது தோட்டத்தில் ஆண்டு முழுவதும் பறவைகள் தங்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு பறவைகள் சரணாலயமாகவே தன்னுடைய தோட்டத்தை மாற்றி இருக்கிறார், லட்சுமணன். உத்திர மேரூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நாரைமேடு என்கிற ஊரில் இருக்கிறது லட்சுமணன் அமைத்துள்ள பறவைகள் சரணாலயம். ஒரு காலை வேளையில் அவருடைய சரணாலயத்துக்குள் நுழைந்தோம்.  இதமான காற்று... மிதமான வெயில்... பலவித சுருதிகளில் பறவைகளின் சத்தம் என ரம்மியமாக இருந்தது, அத்தோட்டம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார், லட்சுமணன். 

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

“எனக்குச் சொந்த ஊர் உத்தரமேரூருக்குப் பக்கத்துல இருக்குற வேடபாளையம். இப்போ எனக்கு எழுபது வயசாகுது. குடிநீர் வடிகால் வாரியத்துல வேலை பார்த்து ரிட்டையர்டு ஆயிட்டேன். சின்ன வயசுல இருந்தே பறவைகள் மேல ஆசை அதிகம். குறிப்பா நெல் வயலுக்கு வர்ற சிட்டுக்குருவிகளைக் கண் கொட்டாமப் பார்த்துக்கிட்டுருப்பேன். நெல் கதிர்களைக் கொண்டு வந்து குருவிகளுக்காக எங்க வீட்டுல கட்டித் தொங்கவிடுவேன். எனக்கும் பறவைகளுக்கும் இடையில ஏதோ பந்தம் இருக்குதுனுதான் நான் நினைக்கிறேன்.

நான் ஐயப்ப பக்தர். வருஷம் தவறாம மாலை போட்டுகிட்டு மலைக்குப் போயிடுவேன். 25 வருஷத்துக்கு முன்னாடியே நான் குருசாமியாகிட்டேன். பல பேருக்கு இருமுடி கட்டியிருக்கேன். அப்படி இருமுடி கட்டும்போது பக்தர்கள் கொடுக்குற தட்சணையைச் சேர்த்து வைக்க ஆரம்பிச்சேன். அதுல கணிசமான ஒரு தொகை சேர்ந்தது. அதை வெச்சுக் கொஞ்சம் நிலம் வாங்கினேன். அப்புறம் சில பக்தர்கள் எனக்குத் தானமா கொஞ்சம் நிலம் கொடுத்தாங்க. என் சம்பளத்துல சேர்த்து வெச்ச பணத்துல கொஞ்சம் கொஞ்சமா வாங்குனதுல மொத்தம் 25 ஏக்கர் நிலம் சேர்ந்தது. இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் வாங்கினப்போ ஏக்கர் பத்தாயிரம் ரூபாய்தான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

நிலம் முழுக்கச் சீமைக்கருவேல்தான் மண்டிக்கிடந்துச்சு. இந்த இடத்துல பறவைகள் சரணாலயம் அமைக்கணும்னு ஆசைப்பட்டு ஏழு வருஷத்துக்கு முன்னாடி நிலத்தைத் திருத்த ஆரம்பிச்சேன். அஞ்சு ஏக்கர் பரப்புல ஒரு குளம், இதோடு ரெண்டு கிணறுகளை வெட்டினேன். மழை பெய்ஞ்சதுல குளம் நிரம்பித் தண்ணீர் நிக்க ஆரம்பிச்சது. அதுல கொஞ்சம் மீன்களை விட்டதுல அதுவும் பெருகிடுச்சு. மண் சரியில்லாத இடங்கள்ல எல்லாம் செம்மண்ணைக் கொண்டு வந்து கொட்டி நிரவினேன்.

அடுத்து, மா, கொய்யா, சப்போட்டா, கொடுக்காப்புளி, இலந்தை, கருங்காலி, ஆல், அரசு, இலுப்பை, வன்னி, ராம்சீதா, லட்சுமி சீதா, நாவல், அத்தி, விளாம்பழம், நீர்மருது, கடப்பை, தேக்கு, மூங்கில், சவுக்கு, அத்தி, கொக்கு மந்தாரை, அலரி, மகுடம்னு பல கன்றுகளைக் கொண்டுவந்து நடவு செஞ்சேன். முன்னயே ஈச்சமரம், வேப்ப மரமெல்லாம் நிறைய இருந்துச்சு. மரங்கள்லாம் வளர்ந்து ஏதாவது ஒரு பழம் கிடைச்சுட்டே இருந்ததால, கொஞ்சம் கொஞ்சமா பறவைகள் வர ஆரம்பிச்சது. பல பறவைகள் இங்கேயே கூடு கட்டித் தங்க ஆரம்பிச்சுடுச்சு” என்று, தான் சரணாலயம் அமைத்த கதை சொன்ன லட்சுமணன், தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார். 

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

“மரக்கன்றுகளை வரிசையா நடவு செஞ்சா, அது தோப்பு மாதிரி மனிதர்களின் பயன்பாட்டுக்கு வந்துடும். அதனால, இங்க மரங்களை வரிசையா வைக்காம பரவலாக தோட்டம் முழுவதும் அங்கங்க வெச்சுருக்கேன். அதனால, பறவைகள் அதுகளோட இஷ்டத்துக்கு மரங்கள்ல கூடுகட்டி வாழ்ந்துட்டுருக்கு. இங்க தை மாசம் நெல், கம்புனு பயிர் பண்ணுவோம். அதுவும் பறவைகளுக்கு நல்ல உணவா இருக்கும். குளத்துல இருக்குற மீன்களைச் சாப்பிடுறதுகாக மீன்கொத்தி, நாரை, கொக்கு மாதிரியான பறவைகள் இங்க நிரந்தரமாகத் தங்கிடுச்சு. சீசன் சமயத்துல வேடந்தாங்கலுக்கு வர்ற பறவைகள், இங்கேயும் வந்துட்டுப் போகுது. அந்தச் சமயத்துல மட்டும் என் தோட்டத்துல ஆயிரக்கணக்கான பறவைகள் இரை எடுத்துட்டு இருக்கும். 

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

இங்க பயிர் செய்ற நெல், கம்பு எல்லாத்துலயும் பறவைகள் சாப்பிட்டது போக மீதி இருக்குறதைத்தான் அறுவடை பண்ணுவோம். வருஷம் முழுக்க இரை கிடைக்கிறதால, சிட்டுக்குருவி, தேன்சிட்டு, தூக்கணாங்குருவி, இரட்டைவால் குருவி, நீலவால் குருவி, தவிட்டுக்குருவினு 12 வகையான குருவிகளும் கூடுகட்டி, இங்க  வாழ்ந்துட்டு இருக்கு. இதோடு ஆந்தை, அண்டங்காக்கை, நீர்க்காகம், மைனா, குயில், உள்ளான், புறா, கிளி, கௌதாரினு ஏகப்பட்ட பறவைகள் இருக்கு. அதேசமயம் இங்கேயே நிரந்தரமா ஆயிரக்கணக்கான பறவைகள் இருக்கு” என்ற லட்சுமணன், ஓரிடத்தில் நின்றார். அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான குருவிக்கூடுகள் இருந்தன. ‘இந்தப்பகுதியில் மனிதர்களால் ஆபத்து நேராது’ என அந்தச் சின்னஞ்சிறு குருவிகள்கூட உணர்ந்திருந்ததால்... தரையில் இருந்து ஓரடி உயரமே வளர்ந்திருக்கும். ஈச்சங்கன்றுளில்கூட  கூடு கட்டியிருந்தன. 

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

அக்குருவிகளை ரசித்துக்கொண்டே பேசிய லட்சுமணன், “இந்தக் குருவிகள் எவ்வளவு சந்தோஷமா இருக்குது பாருங்க. அதுதான் எனக்குச் சந்தோஷம். சாயங்கால நேரத்துல பறவைகள் சத்தம் அதிகமாக இருக்கும். தினமும் சாயங்கால நேரத்துல இங்க வந்து உக்காந்துடுவேன். அதுல எனக்குக் கிடைக்கிற சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது. இந்தச் சந்தோஷம் நிரந்தரமா எல்லோருக்கும் கிடைக்கணும்னு ஆசைப்படுறேன். அதனால, இந்த இடத்தைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாப்பா வெச்சுருக்குறதுக்காகச் சில முடிவுகளை எடுத்திருக்கேன். அதுக்கு என் குடும்பத்துல எல்லாருமே முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க” என்ற லட்சுமணன் நிறைவாக, 

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

“சரணாலயத்தைப் பார்த்துகிறதுக்காக ஒரு குடும்பத்தையே இங்க தங்க வெச்சுருக்கேன். அவங்களுக்கான சம்பளத்தை நான்தான் கொடுத்துட்டுருக்கேன். இங்க அவங்க தங்கியிருக்குற வீட்டுலயும் 63 கூடுகளை அமைச்சுருக்கோம். அது எல்லாத்துலயும் குருவிகள் இருக்கு. அதே மாதிரி 5,000 புறாக்கூடுகளும், 3,000 கிளிக்கூடுகளும் அமைக்கப் போறோம். ஒரு தியான மண்டபத்தையும் இங்க கட்டலாம்னு இருக்கேன். என் வருமானம் முழுசையும் இந்தச் சரணாலயத்துக்குத்தான் செலவு பண்ணியிருக்கேன். ‘லட்சுமணக் குருசாமி அறக்கட்டளை’னு ஒரு டிரஸ்ட் அமைச்சுச் சரணாலயத்தை அதுக்குள்ள கொண்டு வந்துட்டேன். அதனால, எனக்குப் பின்னாடி யாரும் இந்த நிலத்தை விற்பனை செய்ய முடியாது. இங்க இருக்குற மரத்தைக்கூட வெட்ட முடியாது. ஆண்டாண்டு காலத்துக்கு இந்தச் சரணாலயம் நிலைச்சு நிக்கும்” என்று சொல்லியபடி விடைகொடுத்தார். 

உத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்!

அந்த நேரத்தில் அங்கு சுற்றி வந்த பறவைகள் எழுப்பிய சப்தம், லட்சுமணன் சொல்லியதை ஆமோதிப்பது போலவே இருந்தது.

தொடர்புக்கு செ.லட்சுமணன், செல்போன்: 99946 07961.


பா.ஜெயவேல் - படங்கள்: தா.அபினேஷ்