Published:Updated:

கோரிக்கையை நிராகரித்தது! - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்

கோரிக்கையை நிராகரித்தது! - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்
கோரிக்கையை நிராகரித்தது! - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்

ஜொமோட்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கஸ்டமர் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் மூடி எடுத்துச்செல்வது போன்ற வீடியோ, இரண்டு நாள்களாக சமூக வலைதளத்தில் பரவிவந்தது.  சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஜொமோட்டாவாலா உணவு சாப்பிடுவதை மாடியில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் திடுக்கிட்டனர். 'ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்பவர்களே உஷாராக இருங்கள்'  என்று இந்த வீடியோவைப் பலரும் ஷேர் செய்திருந்தனர். 

``இந்தச் சம்பவத்தை சீரியஸான விஷயமாக நாங்கள் பார்க்கிறோம். உணவு வகைகளை கஸ்டமர்களிடத்தில் பாதுகாப்பாகச் சேர்க்க வேண்டிய நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறோம். உணவுப் பாக்கெட்டுகளின்மீது tamper proof tapes பயன்படுத்தி பேக் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று ஜொமாட்டோ நிறுவனம் நேற்று அறிக்கை விடுத்திருந்தது.

சமூக வலைதளங்களில் வலம் வந்த வீடியோ, மதுரையில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. கஸ்டமர் ஆர்டர் செய்த உணவைச் சாப்பிட்ட ஊழியரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணை நடத்திய ஜொமோட்டோ நிறுவனம், உடனடியாக அவரை  பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து ஜொமாட்டோ நிறுவனம் அறிவித்ததும் ,பலரும் டெலிவரி நபருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். 'பணி நீக்கம் அதிகபட்ச தண்டனையாகத் தெரிகிறது. பசியை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது' என்று டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியருக்கு  ஆதரவாக ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சோஷியல் மீடியாவில் சம்பந்தப்பட்ட டெலிவரி நபரை கிரிமினல் போலச் சித்திரிப்பதற்கும் கண்டனம் எழுந்துள்ளது. 'கடமையில் கண்ணும் கருத்துமாக இல்லாதவர். இன்னொருவர் ஆர்டர் செய்த உணவை இப்படி சாப்பிட்டுவிட்டு கொண்டுபோய் கொடுப்பது இழிவான செயல். பசிக்காக அவர் சாப்பிட்டது போலத் தெரியவில்லை ' என்றும் ஜொமோட்டோ நிறுவனத்தின் நடவடிக்கைக்கும் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். .

இந்தியாவில், ஜொமோட்டோ ஆன்லைன் ஆர்டர் வழியாக உணவு விநியோகிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனம். மாதத்துக்கு 2.10 கோடி ஆர்டர்களை இந்த நிறுவனம் பெற்று வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கிறது. 'வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் எங்களின் நன்மதிப்பும்தான் முக்கியம்' என்று ஜொமோட்டோ அறிவித்துள்ளது.