பிரீமியம் ஸ்டோரி
தெர்ல மிஸ்

“சாலையில் வாகனங்கள் சரிவரச் சென்றுகொண்டி ருக்கும்போதே ஹாரன் அடித்துக்கொண்டே வருபவர்களைக் கண்டால் எரிச்சலாக இருக்கிறது. ஹாரன் அடிப்பதைத் தடுக்க சட்டரீதியாக வழிமுறைகளே இல்லையா? போக்கு வரத்து விதிகளில் ஹாரன் ஒலி குறித்து எதுவும் சொல்லப்பட்டுள்ளதா?”

- நாகமாணிக்கம், மேட்டுப்பாளையம் 

தெர்ல மிஸ்

“ஒலி மாசுபாடு குறித்து மோட்டார் வாகனச் சட்டத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இடங்களில் ஒலியெழுப்பக் கூடாது, அதிக ஒலியெழுப்பும் (அல்லது) விதவிதமான ஒலிகளை எழுப்பும் ‘ஹாரன்’களை உபயோகிக்கக் கூடாது என்பது உட்பட பல விதிகள் உள்ளன. நீங்கள் சொல்வதபோல, தொடர்ந்து ஒலியெழுப்புவதையும் அச்சட்டம் கூடாதென்று தெளிவாகச் சொல்கிறது. (A driver of a vehicle shall not sound the horn needlessly or continuously or more than necessary.) இதற்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் உண்டு. ‘இப்படி ஒலியெழுப்புவது பிறருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும்’ என்ற எண்ணமிருந்தால் போதும், மக்களாகவே இதைத் தவிர்க்கலாம். 

தெர்ல மிஸ்

   ஏ.ஜூலியஸ் கிறிஸ்டோபர், உதவி ஆணையர், சென்னை மாநகரப் போக்குவரத்துத் திட்டம்.

“விடியற்காலை நடைப்பயிற்சி சாத்தியமில்லாத சிங்கிள் பேரன்ட் நான். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியபின் என் அலுவலகத்திற்கு நடந்தே செல்கிறேன்.காலை உணவுக்குப் பின் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியின் பலன் என்ன, மற்றும்,  காலை உணவுக்கும் நடைப்பயிற்சிக்கும் இடையே கால இடைவெளி நேரம் எவ்வளவு இருக்கவேண்டும்?”

​- எஸ்.மாலதி, கடலூர்

தெர்ல மிஸ்

“சாப்பிட்டவுடன்  உணவு செரிமானத்துக்காக, ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதியை நோக்கிச் செல்லும். அந்த நேரத்தில் நடந்தால், செரிமானச் செயல்கள் தடைப்படும். எனவே, சாப்பிட்டவுடன் நடப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் 45 நிமிடங்களாவது உணவுக்கும் நடைப்பயிற்சிக்கும் இடைவெளி இருக்கவேண்டும்.  நடப்பதன் மூலம் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரையும். ரத்த ஓட்டம் சீராகும். நாள் முழுக்கப் புத்துணர்வுடன் செயல்பட முடியும். தொடர்ச்சியாக நடைப்பயிற்சி மேற்கொண்டால்,   உயர் ரத்த அழுத்தம் குறையும்; ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்குச் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்; நுரையீரல் செயல்பாடு சீராகும்.  எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன் தசைகள் வலுவாகும்.  இப்படி, நடைப்பயிற்சியின் பலன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.”

வெ.ஹேமா - பிசியோதெரப்பிஸ்ட்

“நீரின் குறியீடு H2O என்கிறோம். O என்னும் ஆக்ஸிஜன் மூலக்கூறு இருந்தும் நம்மால் ஏன் நீரில் சுவாசிக்க முடிவதில்லை?”

- கீர்த்திநாதன், திருச்சி.

தெர்ல மிஸ்

“தண்ணீரில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் திரவ வடிவிலிருக்கிறது. அதில் அப்படிக் கலந்திருப்பதால்தான் மீன் உள்ளிட்ட அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன. இருந்தும் மனிதன் மட்டுமன்றி, எந்த நிலவாழ் உயிரினங்களாலும் நீருக்குள் சுவாசிக்க முடிவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், நீர்வாழ் உயிரினங்களின் சுவாச உறுப்புகள் நிலவாழ் உயிரிகளிடமிருந்து வேறுபட்டவை. அவை செதில்கள்(மேலும் சில உயிரினங்கள் தோலிலேயே அதற்கான அமைப்பைக் கொண்டுள்ளன) மூலமாக நீரிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுக்கும் திறன் கொண்டவை. நீரில் கழிவுகள் சேரும்போது அதிலிருக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறையத்தொடங்கும். அப்போது அவற்றால்கூடத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ஆனால், நம் சுவாச அமைப்பு அப்படியில்லை. ஆக்ஸிஜனை வாயுவாக மட்டுமே நம்மால் சுவாசிக்க முடியும். திரவத்திலிருந்து அதை வாயுவாகப் பிரித்து சுவாசிக்க முடியாது. இரண்டாவது காரணம், நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் நீரில் ஹைட்ரஜன் இணைப்பு (Hydrogen bonding) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறு இரண்டு ஹைட்ரஜன்களோடு இணைந்திருக்கும். அதைத் தனியாகப் பிரித்து சுவாசிக்கும் ஆற்றல் நிலவாழ் உயிரினங்களுக்குக் கிடையாது.”

டாக்டர் மருதமணி, M.Sc.,M.Phil.,Ph.D வேதியியல் துணைப் பேராசிரியர், பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்-641 004

“நானும் என் கணவரும் உடல் தானம், கண்தானம் செய்ய விரும்புகிறோம். அதற்கு உரிய விதி முறைகளையும் வழி வகைகளையும் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவோம். தானம் செய்வதற்கு சாட்சிக் கையெழுத்துப் போடுவதற்குக்கூட, எங்கள் அருகில் உறவினர்கள் யாரும் இல்லை.”

- ஆர்.ஜெயகுமாரி

தெர்ல மிஸ்

“கணவன் மனைவி இருவரும் உயிரோடு இருக்கும்போது அவர்களுடைய ஒரு சிறுநீரகத்தை உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு தானமாகத் தரலாம். ஒரு தாய் உயிரோடு இருக்கும்போதே தனது கல்லீரலின் ஒரு பகுதியைத் தனது குழந்தைக்கு தானமாகத் தரலாம். மூளைச் சாவு அடைந்தவர்கள் மற்ற உறுப்புகள் நன்றாக இருக்கும் நிலையில் தசை, தோல் கல்லீரல், சீறுநீரகம், கணையம், சிறுகுடல், கண் ஆகியவற்றை தானம் செய்யலாம். இயற்கையான இறப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாகக் கண் தானம் செய்யலாம். தோலில் ஒரு பகுதி, எலும்பு அல்லது தசைகளை தானம் செய்யலாம். தனது முழு உடலை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்காக தானம் செய்யலாம். இப்படி உடல்தானம் செய்ய நினைப்பவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று தங்களது விருப்பத்தைச் சொன்னாலே விண்ணப்பத்தைத் தருவார்கள். அதைப் பூர்த்திசெய்து தரவேண்டும். அதில் உறவினர்கள் சாட்சிக் கையெழுத்து போடவேண்டும். உறவினர்கள் இல்லாதவர்கள், தங்கள் நண்பர்கள் அல்லது அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆகியவர்களின் உதவியை நாடலாம். இதில் எவ்விதச் சட்டபூர்வமான சிக்கலும் கிடையாது.”  

- டாக்டர். அமலோற்பவநாதன், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்றுத் திட்டக்குழுவின் முன்னாள் ஆணையர்

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு