Published:Updated:

கனமழை, புயல்மழை தெரியும்... `செம்மழை' குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா?! #RedRain

உடனடியாக ஆராய்ச்சியாளர்கள் சிவப்பு மழைத் தண்ணீரை எடுத்து ஆய்வகங்களில் பரிசோதித்தனர். மக்களில் சிலரும் மண் ஆராய்ச்சி மையத்துக்கு மழை நீரின் மாதிரியை அனுப்பி வைத்தனர்.

கனமழை, புயல்மழை தெரியும்... `செம்மழை' குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா?! #RedRain
கனமழை, புயல்மழை தெரியும்... `செம்மழை' குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா?! #RedRain

லங்கட்டி மழை, பேய் மழை, புயல் மழை, பனி மழை பற்றிக்கூட கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சிவப்பு மழை பற்றிக் கேள்விப்பட்டிருப்போமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை `செம்மழை' என்றும் குறிப்பிடுவர்.

`சிவப்பு மழை' என்பது சாதாரண மழைத்துளிகள் போல இல்லாமல், சிவப்பு நிறத்தில் மழைத்துளிகளாகப் பெய்கின்றன. பழைய இலக்கியங்களில் துக்கச் சம்பவத்தின் அறிகுறியாகச் சொல்லப்பட்டுள்ளது. எனினும் இது ஓர் இயற்கையின் சாதாரண நிகழ்வுதான். எப்படி எனப் பார்ப்போம்.

கடந்த 2011-ம் ஆண்டு கேரள மாநிலம் கோட்டயத்துக்கு அருகே உள்ள செங்கனாச்சேரியில் கன மழை பெய்தது. அது வழக்கமாக மழைக்கு உரிய நிறத்தில் இல்லாமல் சிவப்பு நிறத்தில் இருந்திருக்கிறது. அதுவரை அம்மக்கள் சிவப்பு நிற மழையைக் கண்டதில்லை, அதனால் குழம்பித் தவித்தனர். அந்த மழையால் சிவப்பு நிறத் தண்ணீர் தெருக்களில் கரைபுரண்டு, ரத்தம் கலந்த தண்ணீரைப் போல ஓடியது. அதனால் மக்கள் ஒவ்வொருவரும், வேறுவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்தனர். 

இதனால் உடனடியாக ஆராய்ச்சியாளர்கள் சிவப்பு மழைத் தண்ணீரை எடுத்து ஆய்வகங்களில் பரிசோதித்தனர். மக்களில் சிலரும் மண் ஆராய்ச்சி மையத்துக்கு மழை நீரின் மாதிரியை அனுப்பி வைத்தனர். அந்த நீரை சசிகுமார் என்ற விஞ்ஞானி ஆராய்ச்சி செய்து ஒரு முடிவை வெளியிட்டார். `வானத்தில் எரிகல் வெடித்துச் சிதறியதால், சிவப்பு நிற மழை பெய்திருக்கிறது. பூமிக்கு மிக அருகில் வந்த எரிகல் ஒன்று வெடித்து மேகத் துகள்களுடன் கலந்து மழை பெய்திருக்கிறது. இதனால்தான் அந்த நேரத்தில் பெய்த மழை நீர் சிவப்பாகக் காட்சியளித்திருக்கிறது. அந்தக் கல்லின் எடை சுமார் 1000 கிலோ இருக்கலாம். கல் வெடித்த சத்தம் அப்பகுதி மக்களுக்குக் கேட்டிருக்கிறது. அதன் பின்னர்தான், சிவப்பு நிறத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது’ என்று விளக்கம் கொடுத்தார். இந்த விளக்கம் இவருடன் நிற்காமல் நீண்டுகொண்டே சென்றது.

ஒரு சில ஆய்வாளர்களால் மாற்றுக் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. பல நாள்கள் சிவப்பு மழை மர்மம் விலகாமலே இருந்து வந்தது. சிவப்பு மழை பற்றிய ஆராய்ச்சிகளும் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தன. `சிவப்பு மழைத் துளிகளை ஆய்வு செய்ததில் ஒரு மி.லிக்கு 90 லட்சம் சிவப்புத் துகள்கள் இருந்தது என்றும், கேரளாவில் பெய்த மழையில் 5 டன் சிவப்புத் துகள்கள் விழுந்திருக்கலாம்' என்றும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இறுதி முடிவை வெளியிட்ட ஆய்வாளர்கள், `கடல் நுண்ணுயிர்கள் காற்று மூலமாக மேகங்களுக்குச் சென்று, மழையாகப் பொழியும்போது அதனுடன் சேர்ந்து விழுந்திருக்கலாம்’ என்று குறிப்பிட்டனர். ஆனால், `ஐரோப்பாவில் உள்ள சிவப்பு வண்ணப் பாசிகளின் விதைகள் காற்றின் மூலம் மேகங்களில் ஏறி காற்றின் திசைப்படி கேரளா, இலங்கை வழியாகச் செல்லும்போது மழையாக விழுந்திருக்கலாம்' என்று முடிவை வெளியிட்டுள்ளனர், இந்திய - ஆசிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள். உண்மையில் ஒவ்வொரு கருத்துகளும் வேறுவேறு விதமாகவே இருந்ததால் முழுமையான காரணம் உறுதி செய்யப்படவில்லை.

இந்த உலகத்தில் விசித்திரங்களுக்கும் ஆச்சர்யங்களுக்கும் பஞ்சமே கிடையாது. மனிதன் தனது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே இருந்தாலும், இயற்கை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிற விஷயங்களுக்கு எல்லையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை ஆராய்ச்சிக்குப் பின்னரும் சிவப்பு மழை பற்றிய உண்மை காரணத்தை மனிதன் அறிய முடியாதது, இயற்கையை ஒருபோதும் வெல்ல முடியாது என்பதையே உணர்த்துகிறது. சிவப்பு மழை மட்டுமல்ல, இதுபோல பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். 

இலங்கையில் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் மொனராகலை மாவட்டத்தில் இவ்வாறான சிவப்பு மழை பொழிந்தது. அந்த நிகழ்வும் பல்வேறு ஆய்வு நிறுவனங்களால் ஆராயப்பட்டது. கடுமையான காற்றுடன் கலந்திருக்கும் தூசானது நீராவித் துகள்களாக ஒடுங்கி மழையாகப் பொழியும் போது, சிவப்பு நிறமாக மாறிப் பொழிவதாகவும், மழையில் கலந்திருக்கும் சிவப்பு அல்காவால் செம்மழை பொழிவதாகவும், இலங்கையில் பொழிந்த சிவப்பு மழைக்கான விளக்கங்கள் தெரிவிக்கின்றன. கேரளத்திலும் இலங்கையிலும் 1896-ம் ஆண்டு முதலாகவே சிவப்பு வண்ணத்தில் மழை பெய்த சம்பவங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவற்றின் முடிவுகள் அனைத்திலும் பொதுவாக உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்றுதான். அது மனித உடலுக்கு ஒவ்வாத ஆர்சனிக் மற்றும் வெள்ளி ஆகியவை இருக்கிறது என்பது. இதைப் பிரிட்டன் ஹாடி பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.