Published:Updated:

எப்போதும் குடி... மரணத்தை நெருங்கும் ஜேம்ஸ்பாண்ட்... எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்!

எப்போதும் குடி... மரணத்தை நெருங்கும் ஜேம்ஸ்பாண்ட்... எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்!
எப்போதும் குடி... மரணத்தை நெருங்கும் ஜேம்ஸ்பாண்ட்... எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்!

அளவுக்கு அதிகமாக பாண்ட் குடித்துக்கொண்டே இருந்தால், ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரித்து அவர் உயிரிழக்கலாம் என்று அதிர வைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

துப்பறியும் கதைகளில் உலகப் புகழ் பெற்ற கதாபாத்திரம் ஜேம்ஸ்பாண்ட்! 1953-ம் ஆண்டு நாவல் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டவர்தான் ஜேம்ஸ்பாண்ட். 007 என்ற ரகசிய குறிப்பெண் கொண்ட பிரிட்டிஷ் ரகசிய உளவாளியான ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் மக்களிடம் பெற்ற பெரும் வரவேற்பின் காரணமாக, சிறுகதைகள், நாவல், காமிக்ஸ் கதைகள், வானொலி நிகழ்ச்சிகள், காணொலி விளையாட்டுகள் எனப் பல தளங்களுக்குப் பயணித்தது.

1962-ம் ஆண்டு இந்தக் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்ட முதல் துப்பறியும் திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியானது. சீன் கேனரி என்ற நடிகர்தான் திரையுலகின் முதல் ஜேம்ஸ்பாண்ட். தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் வெற்றியடையவே, அதே கதாபாத்திரத்தில் வேறு வேறு நடிகர்களை நடிக்க வைத்துப் படம் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. 

தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் கிரெய்க், ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் மட்டுமின்றி, திரைப்படங்களில் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பங்கள் அடங்கிய கார், கைக்கடிகாரம், மோதிரம் போன்றவற்றுக்கும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெரிய வரவேற்பு உண்டு. ஜேம்ஸ்பாண்ட் வீரதீர சாகங்களில் ஈடுபடும்போது ஒலிக்கும் ஒரே வகையான பின்னணி இசையும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் வீரதீர சாகசச் செயல்களில் ஈடுபடுவது போலவும், பெண்கள் பின்னால் சுற்றும் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவும், அடிக்கடி மது அருந்துவது போலவும் உருவாக்கப்பட்டிருக்கும். இதுவரை 6 நடிகர்கள் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் குணாம்சங்களை ஒருபோதும் மாற்றவில்லை. 

இதை அடிப்படையாகக் கொண்டு ஆஸ்திரேலியாவில் ஓட்டகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சுவாரஸ்யமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் `ஜேம்ஸ் பாண்ட்டுக்குத் தீவிர மதுப்பழக்கம் (Severe alcohol use disorder) எனும் குறைபாடு உள்ளது' என்று அறிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். `அவர் உடனடியாக மருத்துவர்களை அணுகாவிட்டால் உயிரிழக்க நேரிடும்' என்றும் பீதியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.

இந்த ஆய்வுக்காக 1962 முதல் 2015-ம் ஆண்டு வரை வெளியான 24 ஜேம்ஸ் பாண்ட் படங்களை எடுத்துக்கொண்டனர். அதில் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருக்கிறது. வோட்கா, ஷாம்பெயின், பீர் எனக் கையில் கிடைக்கும் மதுவகைகளை எல்லாம் குடித்துக்கொண்டே இருக்கிறது. `விமானப் பயணத்தில், சாலையில் கார்களை சேஸ் செய்யும்போது, சூதாட்டத்தில் ஈடுபடும்போது, மிகவும் கடினமாக இயந்திரங்களை இயக்கும்போது, பாம்பு, தேள், டிராகன் போன்ற பயங்கரமான விலங்குகளைக் கையாளும்போது, தாம்பத்தியத்தின்போது, துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது என அனைத்து நேரங்களிலும் அவர் மது அருந்திக்கொண்டேயிருக்கிறார். மதுபோதையில் தான் அவர் பல வீரதீர சாகசங்களைச் செய்கிறார். மது அருந்தாத நேரங்களில் பாண்ட் மிகவும் கூச்ச சுபாவம் உடையவராக இருக்கிறார்' என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு திரைப்படத்தில் ஒரே நாளில் 24 யூனிட் ஆல்கஹால் அருந்தியிருக்கிறார். மற்றொரு படத்தில் இதையும் மிஞ்சி ஒரே நாளில் 50 யூனிட் ஆல்கஹால் அருந்தியிருக்கிறார். ஒரு யூனிட் என்பது 10 மில்லி சுத்தமான ஆல்கஹால் (Pure alchohol). அளவுக்கு அதிகமாக பாண்ட் குடித்துக்கொண்டே இருந்தால், ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரித்து அவர் உயிரிழக்கலாம் என்று அதிர வைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராச்சியாளர் நிக் வில்சன் ஒரு படி மேலேபோய், ``ஜேம்ஸ்பாண்ட் (கதாபாத்திரத்தின்) கல்லீரலை ஸ்கேன் செய்து பார்த்தபோது அது மிகவும் ஆரோக்கியமான நிலையில் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையும் ஜேம்ஸ்பாண்ட் குறித்து அளித்த எம்ஐ6 என்ற ஆய்வறிக்கையில் அவர் மது மற்றும் மது தொடர்பான விஷயங்களுக்கு அடிமையானவர் என்று தகவல் அளித்துள்ளது" என்று தெறிக்கவிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்துக்கு சில அறிவுரைகளையும் ஆராய்ச்சியாளர்கள் அளித்துள்ளனர். "ஜேம்ஸ்பாண்ட் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். பணியில் இருக்கும்போது குறிப்பாக விமானம் அல்லது ஹெலிகாப்டரில் எதிர்களுடன் சண்டையிடும்போது, அணு ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்யும்போது அவர் மது குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் உயிருக்கு ஆபத்து நேர்வதைத் தடுக்க முடியும்" என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த ஆய்வு பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று தோன்றும். இல்லாத ஒரு கற்பனை கதாபாத்திரத்தை ஆய்வு செய்வதற்கு பிரபல பல்கலைக்கழகத்தின் ஆராச்சியாளர்கள் நேரத்தையும் பணத்தையும் விரயமாக்க வேண்டுமா என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் மதுப்பழக்கத்தின் தீமை குறித்த விழிப்புஉணர்வை  உலகம் முழுவதும் ஏற்படுத்தவே, உலகப் பிரபலமான கதாபாத்திரத்தை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். பிரபல கதாபாத்திரங்களைப் பின்பற்றி தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்ளும் குழந்தைகள், இளம் தலைமுறையினருக்கு இந்த ஆய்வு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கக் கூடும்.  

அடுத்த கட்டுரைக்கு