Published:Updated:

``சொந்த ஊர்ல அகதிங்க மாதிரி இருக்கோம்!’- கவனிக்கப்படாத பெரும்பாக்கம் மக்கள் குரல்

``அடுத்த மாசம் மொத்தமா அக்கவுன்ட்டுக்கு வந்துடும்னு சொன்னாங்க. ஆறு மாசமா இதுதான் சொல்றாங்க. சொந்த ஊருக்குள்ள அகதிங்க மாதிரி இருந்துகிட்டு இந்தப் பணமும் கிடைக்கல” என்றார் வாரியத்தின் வீட்டில் வசிக்கும் ரோகிணி.

``சொந்த ஊர்ல அகதிங்க மாதிரி இருக்கோம்!’- கவனிக்கப்படாத பெரும்பாக்கம் மக்கள் குரல்
``சொந்த ஊர்ல அகதிங்க மாதிரி இருக்கோம்!’- கவனிக்கப்படாத பெரும்பாக்கம் மக்கள் குரல்

சென்னைக்குள்ளிலிருந்து புறநகர் பெரும்பாக்கத்துக்கு இடம் மாற்றப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அளித்த வீடுகளுக்குள் வசிக்கும் குடும்பங்கள், தொடர்ச்சியாக எழுப்பிவரும் புகார் குரல்களுக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. மொத்தத்தில் 1 சதவிகிதம் குடும்பங்கள் மட்டுமே அரசு அளிக்கும் மாதாந்திர வாழ்வாதாரத் தொகையைப் பெற்று வருகிறார்கள். மற்ற குடும்பங்களுக்கு எப்போதாவது இந்தத் தொகை கிடைக்கிறது. சில குடும்பங்கள் வருடத்தில் ஒரு மாதம் கூட இந்த வாழ்வாதாரத் தொகையைப் பெறவில்லை. இழப்பைச் சந்தித்த நகர்ப்புற மக்களுக்கான அமைப்பான IRCDUC இத்தகவலைச் சமர்ப்பித்திருக்கிறது.

கூவம் ஆற்று மீட்டெடுப்புத் திட்டத்தின்படி, செப்டம்பர் 2017-ல் இருந்து டிசம்பர் 2017-க்குள், பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட 228 குடும்பங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாக்கத்தில் குடியேறியபோது வழங்கப்பட்ட 5,000 ரூபாய்தான் அனைவருக்கும் ஞாபகமிருக்கிறது. அதற்குப் பிறகு மாதம்தோறும் வரவேண்டிய தொகையைக் குறித்து கேட்டால், யோசிக்கிறார்கள். இடம்பெயர்ந்த மக்களில் 85% குடும்பங்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே அந்தத் தொகையைப் பெற்றிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு.

`மனு அளிக்கப்பட்டதா, புகார்களைப் பதிவு செய்திருக்கிறீர்களா’ என்று கேட்டால், ``அடுத்த மாசம் மொத்தமா அக்கவுன்ட்டுக்கு வந்துடும்னு சொன்னாங்க. ஆறு மாசமா இதுதான் சொல்றாங்க. சொந்த ஊருக்குள்ள அகதிங்க மாதிரி இருக்கிறோம். எந்தப் பணமும் கிடைக்கல” என்றார் வாரியத்தின் வீட்டில் வசிக்கும் ரோகிணி. கொஞ்சம் அழுத்தம் கொடுத்த சிலரிடம், மாம்பலத்தில் இருக்கும் குறிப்பிட்ட வங்கியில் கணக்குத் தொடங்கினால் சரியாகப் பணம் போடப்படும் என்று சொல்லியதாகச் சொல்கிறார்கள். ``தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புகார் அமைப்பைத் தொடங்கவேண்டும். வாரியத்தில் வசிக்கும் குடும்பங்களின் நல வாரியத்தோடு இணைந்து இந்தப் புகார்களுக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும்” என்கிறார் IRCDUC-ன் பாலிசி ஆய்வாளர் வனெசா பீட்டர்.

சென்னையை விட்டுத் துண்டித்துக் கொண்டு வசதிகளற்ற கான்க்ரீட் காட்டுக்குள் நுழைந்த உணர்வை பெரும்பாக்கத்தில் நுழையும்போதே உணர முடியும். வாழ்வாதாரமாக இருந்த வீட்டு வேலை, மளிகைக் கடை வேலைகள், பலசரக்கு, போக்குவரத்து வேலைகள், துப்புரவு வேலைகள் என நகரத்துக்குள் தன்னைச் சேர்த்து தைத்து வைத்திருந்தவர்கள்தான், இழையோடு பெயர்த்து பெரும்பாக்கத்துக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த எளிய மக்கள். குடிபெயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுள் மாணவர்கள் முக்கியமானவர்கள்.

பெரும்பாக்கத்திலிருந்து சென்னைக்குப் பயணித்து, பள்ளி முடித்து மாணவர்கள் வீடு திரும்பும்போது 9 மணிக்கும் மேலாகியிருக்கும். கல்வி சார்ந்த உரிமைகளுக்காக இயங்கி வரும் தோழமை அமைப்பின் நிறுவனர் தேவநேயனிடம், வாழ்வாதாரத் தொகை பிரச்னையைப் பற்றிக் கேட்டபோது, ``வாழ்வாதாரத் தொகையாக அறிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் என்பது உண்மையில் இவர்களுக்கு எந்த விதமான பெரிய நிவாரணத்தையும் அளித்துவிடப்போவதில்லை. வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போவதில்லை.

எளிய மக்களை, அவர்களின் கூட்டை விட்டு வேரோடு பிடுங்கி எறியும் போக்கையும் கண்டித்து வருகிறோம். இந்நிலையில், அறிவித்த தொகையையும் இழுத்தடிக்கும் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை எந்த வார்த்தைகளால் வர்ணிப்பது? செய்து கொண்டிருந்த வேலைகளுக்கு மக்கள் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார்கள். காலையில் இந்தப் பகுதிக்கு வரும் மிகச் சொற்பமான பேருந்துகளில் மாணவர்கள் தங்களை திணித்துக்கொள்கிறார்கள். அதிகக் கூட்டத்தால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட விபத்துகளுக்கு அரசிடம் காரணம் இல்லை. அவசர மருத்துவ வசதிகளுக்கும் இன்னும் பிற வசதிகளுக்கும் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிகிறார்கள். பல மாணவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். அட்டைப்பெட்டி குடியிருப்புகளில் ஓட்டை ஒடிசலோடு, எல்லாப் பிரச்னைகளையும் சந்தித்துக்கொண்டு இருப்பவர்களுக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் அரசு” என்கிறார்.

அறிவித்த வாழ்வாதாரத் தொகையைக் கொடுப்பது மட்டுமல்ல. சூழலின் பெயரால் தனித்து விடப்பட்டவர்களின் புகார்க் குரல்களுக்கு பதில் சொல்லித்தானே ஆகவேண்டும் அரசு!