Published:Updated:

காதல்ங்கிற வார்த்தையை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவேன் தெரியுமா?

காதல்ங்கிற வார்த்தையை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவேன் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

மிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம்... கார்த்திக் - ராகினி திருமணம்தான். ஏகப்பட்ட பிரச்னைகளைச் சமாளித்து தன் கணவர் கார்த்திக்கின் வீட்டிலேயே வெற்றிகரமாகக் குடியேறியும்விட்டார் ராகினி. தன் மாமியாருடன் இரண்டு வாரங்களாக மாங்காடு கோயிலுக்கும் சென்று வருகிறார். இதை கார்த்திக்கே நம்மிடம் சொல்லிப் பெருமைப்பட்டார்!

 ஊட்டியைச் சொந்த ஊராகக்கொண்ட ராகினி, ஒரு எம்.ஏ. பட்டதாரி. இயற்  பெயர் குமாரி பில்ஜெயின். இதில் 'பில்ஜெயின்’ குடும்பப் பெயர். மலை சாதிப் பிரிவினரில், தோடர் இனத்தைச் சேர்ந்த ராகினியின் குடும்பத்தினர் கோடீஸ் வரர்கள்.

சத்யா ஸ்டுடியோவில் எம்.பாஸ்கர் டைரக்ஷனில் வெளிவரவிருக்கும் ஒரு படத்துக்காகக் கார்த்திக் நடித்துக்கொண்டு இருக்க... மேக்கப் அறையில் ஒரு சோபாவில் அமர்ந்திருந்த ராகினியை நாம் சந்திக்கச் சென்றபோது சல்வார் கமீஸில் இருந்தார். எதிரில் இருந்த டீபாய் மீது குனிந்து சீரிய ஸாக ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார்.

காதல்ங்கிற வார்த்தையை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவேன் தெரியுமா?

''அது ஒண்ணுமில்லை... சும்மா உட்கார்ந்து இருக்க முடியல... அதான் ஒரு தமாஷ§க்கு முரளிக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக் கேன்'' என்று சொல்லிவிட்டு, சட்டென்று வெட்கப்பட்டார். முரளி? கார்த்திக்கின் மற்றொரு பெயர்தான்.

திருமணத்துக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, ''எப்படியோ, தமிழ்நாடு முழுக்க உங்க கல்யாணத்தைப் பத்தி பேச வெச்சிட்டீங்க'' என்றோம்.

சட்டெனக் குனிந்து நகங்களைப் பார்த்தபடியே ''இது என்ன பேச்சு? அசிங்கமாப் பேசறாங்க... கொஞ்சங்கூட உண்மை இல்லாத விஷயத்தை ஏன் இவ்வளவு ஆர்வமாப் பேசறாங்க? சே... நான் இதுக்கா கவே கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்!'' என்று சொல்லிவிட்டுச் சில நிமிடங்கள் அமைதியாக இருந் தார். பிறகு, அவரே, ''நான் காலேஜ்ல பசங்களோட பேசறப்ப, இந்தக் காதல்ங்கிற வார்த்தையை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவேன் தெரியுமா? கடைசி யில...'' என்று நிறுத்தி, தலையை ஒரு முறை ரம்யமாகச் சிலிர்த்துவிட்டுத் தோள்களை உயர்த்தியபடியே சிரித்தார்.

'' 'சோலைக் குயில்’ படத்துக்காக நாங்க ரெண்டு பேரும் ஜனவரி ஒண்ணாம் தேதி முரளிக்குச் ந்தமான எம்.ஜி.எம். கல்யாண மண்டபத்துல வெச்சுத்தான் சந்திச்சோம். அப்புறம் படத்தோட ரெண்டாவது ஷெட்யூல் எங்க ஊர்ல நடந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா நட்போடு பேச ஆரம்பிச் சவரு, என்னை லவ் பண்ற மாதிரி டயலாக்கெல்லாம் சொல்லிட்டார். எனக்கு 'சீ’னு ஆயிடுச்சு. கொஞ்சம் பழகினா எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான்னு நெனைச்சு விலக ஆரம்பிச்சேன். 'சோலைக் குயில்’ கதைப்படியே, நான் ஹீரோவை வெறுத்து ஒதுங்கறச்சே, அவர் பாட்டுப் பாடி என்னைக் கவரப் பார்ப்பார். அவர் பாட்டைக் கேட்டு பதிலுக்கு நான் 'ஆறுதல் பாட்டு’ பாடணும். பாடலோட அர்த்தமும் எங்க நிஜ மனநிலைக்கு இணங்கிப்போச்சு. இதனால சினிமாக் கதையை என் கதையா நெனைக்க ஆரம்பிச்சுட்டேன். எல்லா ஸீனையும் ஒரே டேக்ல நடிச்சுடுவேன்.

ஒரு கட்டத்துல என்னை அறியாமலே நான் காதல்ல விழுந்துட்டேன். ஆனா, நான் வெளிப்படையா முரளிகிட்டே 'ஐ லவ் யூ’னு சொல்லத் தயங்கினேன். கடைசியில முரளியே வாய் திறந்து 'ஐ லவ் யூ’ சொல்லிடுச்சு! சொன்னது மட்டும்இல்லாம, நானும் அதை லவ் பண்றேங்கிறதைக் கண்டுபிடிச்சுடுச்சு. அப்புறம்தான் 'லைஃப் இஸ் எ சேலஞ்ச், மீட் இட்’ங்கிற பழமொழியை நினைச்சுப் பார்த்துட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!'' என்று சொல்லிவிட்டு, உதவியாளரை அழைத்து ஜில் மோர் கொண்டுவரச் சொன்னார் ராகினி.

மோர் அருந்தியபடியே, ''என்னவோ நான் முரளியோட கேரக்டரைப் புரிஞ்சுக்காம கல்யா ணம் பண்ணிக்கிட்டேன்னு அனுதாபப்படறாங்க... அது தப்பு. முரளி என்கிட்ட தன்னைப் பத்தின எல்லா விஷயத்தையும் சொல்லிடுச்சே. அதனால இப்ப நடக்கிற விஷயங்கள் எதுவும் எங்களைப் பாதிக்கலை. சில பத்திரிகைகள் எழுதும் விஷயங்கள் மட்டும் மனசுக்குக் கஷ்டமா இருக்குது. அவர் ஒவ்வொன்றையும் படித்துவிட்டு ரொம்ப ஃபீல் பண்றார். ரொம்ப பாவம், தெரியுமா முரளி?! அதுக்கு அவங்க அம்மா மேல ரொம்ப அட்டாச்மென்ட். இந்த மாதிரி பத்திரிகைச் செய்திகளை அம்மா படிச்சிட்டு, தன்னைத் தப்பா நினைப்பாங்களோனு நினைச்சுப் புலம்பும்'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, ''எக்ஸ்கியூஸ் மீ...'' என்று சொல்லியபடி உள்ளே வந்தார் கார்த்திக். உடனே தன் கையில் வைத்திருந்த மோரை நீட்டியபடியே, ''என்ன இன்னும் மூச்சு வாங்குது... ஓடி வந்தியா என்ன? இந்தா... இந்த மோர் சாப்பிடு'' என்றார் ராகினி.

காதல்ங்கிற வார்த்தையை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவேன் தெரியுமா?

''ரகசியமா கல்யாணம் செய்ய வேண்டாம்னுதான் நினைச்சோம். ஆனா, எங்கள் இருவர் வீட்டிலும் பெரியவர்கள் எதிர்க்கும்போது அப்படி முடிவெடுக்கும்படியாக ஆகிவிட்டது! இவ்வளவுக்கும் ஜீசஸ்தான் என் வழிகாட்டி. இவருக்கோ மாங்காடு அம்மன். எனக்கோ சினிமா துறையில் லட்சியப் பிடிப்பெல்லாம் கிடையாது. இவருக்கோ சினிமாதான் வாழ்க்கை. இப்படி எங்களுக்கான வேறுபாடுகளை எப்படிக் களைவதுனு மாசக்கணக்காகப் பேசினோம். அதனால்தான் நாங்கள் இப்போது சிரித்துப் பேச முடிகிறது!'' என்றார் ராகினி.

நாம் குறுக்கிட்டு, ''இப்படி எல்லா விஷயங்கள் குறித்தும் பேசும்போது, ஸ்ரீப்ரியா வைப் பற்றியும் சொன்னாரா என்ன?'' என்று கேட்டோம்.

தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, ''ஆமாம், சொல்லியிருக்காரே... அதை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கலை. ஒரு நடிகையுடன் இணைத்துக் கிசுகிசுக்கப்படாத நடிகர் ஒருத்தரைக் காட்டுங்கள், பார்க்கலாம். அதிலும், என் முரளியைப் பொறுத்தவரைக்கும் இதுக்கு முன்னாடி எப்படியோ, இனி அவர் எம் புருஷன்தான். எனக்கு மட்டும்தான்!'' என்று சீரியஸாகவே சொன்னார்.

''எனக்கு அவங்க (ஸ்ரீப்ரியா) மேல வருத்தம் இதுதான். நான் என்னோட கழுத் துல தாலியை வாங்கிட்டேன்னு தெரியும். அப்புறமும் என்கிட்ட வந்து, 'எனக்கு நாலு வருஷமா அவரைத் தெரியும்’னு சொல்லி... சே! நினைச்சுப் பார்க்கவே அசிங்கமா இருக்கு சார். அவங்க விஷயம் எதுவும் வேண்டாம். ப்ளீஸ்...'' என்று சொல்லிவிட்டுச் சிறிது மௌனமாக டீபாய்மீது கிடந்த பேப்பரை எடுத்து மடக்குவதும் பிரிப்பதுமாக இருந்தார்.

பிறகு அவரே தொடர்ந்தார்... ''பாவம் அது... எனக்காகப் பல கஷ்டங்களை அனுபவிச்சுட்டு அடிக்கடி 'டேய் குமாரி... (ராகினியை செல்லமாக கார்த்திக் இப்படித்தான் அழைக்கிறார்) எனக்கு தோடா மந்திரம் போட்டுட்டியா’னு கேட்கும்'' என்று சொல்லிவிட்டு, நீண்ட இடைவெளிக்குப் பின் வெட்கப்பட்டார்!

உலக வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சி, மாறி வரும் பழக்கவழக்கம் ஆகிய   தலைப்பின் கீழ் மணிக்கணக்கில் பேசும் ராகினிக்குப் பிடித்த உணவு அயிட்டம் நூடுல்ஸ். ''ஆனா, அவருக்குத் தலைக் கறி, பிரியாணி ரெண்டும் பிடிக்கும். நான்கூடக் கிண்டல் பண்ணியிருக்கேன். 'உங்களைப் பிரியாணி வாங்கிக் குடுத்தே ஏமாத்தலாம் போலிருக்கே’ அப்படீனு...'' என்று தன் கணவரைக் கிண்டல் செய்த ராகினி, சினிமாவுக்கு முழுக்கு போடப் போவது இல்லையாம். ''மத்த நடிகர்களோடு நடிக்கக் கூடாதுனு சொல்லிட்டார். ஆனா, இவர்கூடவே நடிக் கிறதை ஏன் அவாய்ட் பண்ணணும். என்ன, கரெக்ட்தானே?'' என்று கேட்கிறார் குமாரி பில்ஜெயின்!

- வி.குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு