Published:Updated:

``கச்சேரி, சினிமா பத்தியெல்லாம் கனவுகூட கண்டது கிடையாது..." - மாலதி லஷ்மண்!

``கச்சேரி, சினிமா பத்தியெல்லாம் கனவுகூட கண்டது கிடையாது..." - மாலதி லஷ்மண்!
``கச்சேரி, சினிமா பத்தியெல்லாம் கனவுகூட கண்டது கிடையாது..." - மாலதி லஷ்மண்!

"ஸ்கூல்ல எனக்கு முதல் பரிசும் கொடுத்தாங்க. அந்தப் பரிசுதான் பாட்டு மேல எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. ஆனா, பெரிய பெரிய கச்சேரிகள்ல பாடுறது, சினிமா பாட்டெல்லாம் பாடுவேன்னு நான் நினைச்சதே இல்ல."

`மன்மத ராசா' பாடல் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் மாலதி லஷ்மண். 30 ஆண்டுகளாகப் பாடி வருகிறார். சினிமாவாக இருந்தாலும் சரி, மேடை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, சலிக்காமல் உள்நாடு வெளிநாடு எனப் பறந்து பறந்து பாடி வருபவர். குரலை மேம்படுத்துவதற்கு என்ன மாதிரியான வழிமுறைகளைக் கையாள்கிறார்...? 

``சினிமா, பாட்டு அப்புறம் என் குரல்... இதைப் பத்தியெல்லாம் எனக்குப் பெருசா எந்தவிதத் திட்டமும் கிடையாது. மொதமொதல்ல எல்.கே ஜி.படிக்கிறப்போ ஸ்கூல்ல `அ என்றொரு அத்திப்பழம்... ஆ என்பவன் ஆசைப்பட்டான்'கிற நர்சரி பாட்டைத்தான் பாடுனேன். பாடுனப்போ எல்லாரும் கைதட்டிப் பாராட்டுனாங்க. ஸ்கூல்ல எனக்கு முதல் பரிசும்  கொடுத்தாங்க. அந்தப் பரிசுதான் பாட்டு மேல எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. ஆனா, பெரிய பெரிய கச்சேரிகள்ல பாடுறது, சினிமா பாட்டெல்லாம் பாடுவேன்னு நான் நினைச்சதே இல்ல.

படிக்கிறப்போ ஸ்கூல்ல பல போட்டிங்க நடக்கும். அதுல பாட்டுப்போட்டியில மட்டும் கலந்துக்குவேன். பாரதியார் பாட்டுதான் பெரும்பாலும் பாடுவோம். எனக்குத்தான் பரிசு கிடைக்கும். ஆனா, இதுக்காக பாட்டு க்ளாஸுக்கோ கர்னாடக சங்கீதம் கத்துக்கவோ போனதில்ல. இப்போ மாதிரி சூப்பர் சிங்கர் போட்டியெல்லாம் அப்போ கிடையாது. அதுக்குப்பிறகு தி.நகர் சாரதா ஸ்கூல், கே.கே.நகர் நிர்மலா கேர்ள்ஸ் ஹை ஸ்கூல்ல படிச்சேன். அப்போ அதிகமா பாட்டுப்போட்டியில கலந்துக்கிறதில்ல. சும்மா எங்க குடித்தனக்காரங்கக்கிட்ட பாடிக்காட்டுறதுதான். அதோட சரி. அதுக்குப் பிறகு பத்தாம் வகுப்புல ஃபெயிலாயிட்டேன். மேல படிக்கவும் போகலை.

எங்க அண்ணனோட திருமண வரவேற்பு நியூ உட்லண்ட்ஸ் ஓட்டல்ல நடந்துச்சு. அதுல `ரவியின் இன்னிசைக் கனவுகள்' இசைக்குழுவோட இன்னிசைக் கச்சேரி நடத்துனவங்க என்னையும் பாடச் சொன்னாங்க. என் பாட்டைக்கேட்டுட்டு எல்லாரும் பாராட்டுனாங்க. ஒருமுறை சைதாப்பேட்டையில எஸ்.என்.சுரேந்தர் பாட்டுக் கச்சேரியில பாடினேன். அப்போ ஐம்பது ரூபாய் கொடுத்தார்.

1989-ல லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவில் சேர்ந்து பாட ஆரம்பிச்சேன். அப்போதான் எனக்கும் என் கணவருக்கும் காதல் ஏற்பட்டு 1991-ல் கல்யாணத்துல முடிஞ்சுது. அன்னிக்கு ஆரம்பிச்சது இன்னிக்கும் தொடந்துக்கிட்டே இருக்கு. தமிழ், தெலுங்கு கன்னடம் உட்பட ஐந்து மொழிகள்ல் ஆயிரம் பாடல்கள் வரைக்கும் பாடிட்டேன். ஆல்பம்னு பார்த்த 300க்கும் மேற்பட்ட பக்திப்பாடல்கள் பாடியிருக்கேன்.
என் கணவர் லஷ்மண்தான் கே.பி.சுந்தராம்பாள், சித்ரா, சுசீலானு மாறுபட்ட குரல்கள்ல பாடச் சொல்லுவார். நான் பாடினதை மக்கள் ஏத்துக்கிட்டது கடவுளோட கிருபைதான்'' என்றவரிடம், ``குரலை வளமாக வைத்துக்கொள்வதற்கு என்னவெல்லம் செய்வீர்கள்?" எனக் கேட்டோம். 

``அதற்காகவெல்லாம் மெனக்கெடுறது கிடையாது. இப்போதான் பத்து வருஷமா மினரல் வாட்டர் குடிக்கிறோம். அதுக்கு முன்னாடியெல்லாம் அடி பம்ப் தண்ணீர்தான். எந்த ஊர், எந்தக் கிராமத்துக்குப் போனாலும் அங்க என்ன மாதிரியான தண்ணி கிடைக்குதோ அதுதான். பிளாஸ்க்குல தண்ணி எடுத்துக்கிட்டுப் போறதெல்லாம் கிடையாது. அதேமாதிரி சாப்பாட்டு விஷயமும் அப்படித்தான். 

எனக்குனு ஸ்பெஷலாகவெல்லாம் எதிர்பார்க்கமாட்டேன். பிரியாணி இருந்தா பிரியாணி, சாம்பார் சாதம் இருந்தா சாம்பார் சாதம்தான். காலையில எழுந்ததும் ஒரு காபி குடிப்பேன். காலை 8 மணி போல டிபன் மூணு இட்லி, தோசைனா ஒண்ணரை தோசை. பகல் 12 மணிக்கு லஞ்ச் சாதம்  கீரைகள், காய்கறிகள் நிறைய சேர்த்து குழம்பு, ரசம் சாப்பிடுவேன். இரவு டின்னரை 7 மணிக்கெல்லாம் முடிச்சிடுவேன். இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கப்போயிடுவேன். 

இதெல்லாம் தாண்டியும் கச்சேரிகள்ல பாடமுடியாத அளவு தொண்டை சில சமயம் இருக்கும். அன்னிக்குனு பார்த்து கச்சேரியும் இருக்கும். அந்த மாதிரி பிரச்னை எனக்கு அடிக்கடி வரும். இப்போ இந்தோனேசியாவுக்குப் போனபோதுகூட அப்படி ஒரு பிரச்னையைத்தான் சந்திச்சேன். லஷ்மண், `உன்னால் முடியும் போ... பார்த்துக்கலாம்'னு சொல்லுவார், இஷ்ட தெய்வத்தையெல்லாம் கும்பிட்டுட்டு மேடையேறி ரெண்டு பாட்டுப் பாடினேன். அதுக்கு ரசிகர்கள் கொடுத்த கைதட்டல்களைக் கேட்டதும் மனசு உற்சாகமாயிடுச்சு. அப்புறம் முழுக் கச்சேரியும் ரொம்ப ஈஸியா பாடிட்டுத்தான் இறங்கினேன்'' என்று புன்னகையுடன் சொல்கிறார் மாலதி.   

அடுத்த கட்டுரைக்கு