Published:Updated:

கோவையில் தொடங்கியது யானைகள் நலவாழ்வு முகாம்!

கோவையில் தொடங்கியது யானைகள் நலவாழ்வு முகாம்!
கோவையில் தொடங்கியது யானைகள் நலவாழ்வு முகாம்!
கோவையில் தொடங்கியது யானைகள் நலவாழ்வு முகாம்!

கோயில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் கோவையில் இன்று தொடங்கியது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பாகக் கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் இன்று காலை தொடங்கியது. 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் வருகை ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தாமதமானதால் அதிகாலையிலேயே குளிப்பாட்டி அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்ட யானைகள் வெயிலில் வாடின. இதனால், பாகன்கள் அப்செட் ஆனார்கள்! ஒருவழியாக அமைச்சர்கள் வந்த பிறகு பூஜை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் யானைகளுக்குப் பழங்களை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்கள். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 27 யானைகள் முகாமில் கலந்துகொண்டுள்ளன.
சென்ற ஆண்டு 33 யானைகள் கலந்துகொண்டன. அவற்றில் மூன்று யானைகள் இறந்துவிட்டதாகவும் மற்ற மூன்று யானைகள் வெவ்வேறு காரணங்களால் முகாமில் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தப் புத்துணர்வு முகாம் வரும் ஜனவரி மாதம் 30-ம் தேதி வரை நடக்கிறது. 48 நாள்கள் நடக்கும் இந்த முகாமுக்கு 1.47 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. முகாம் அருகே உள்ள பவானியாற்றில் தினந்தோறும் இருவேளை குளியல், தினமும் 5 கி.மீட்டர் நடைப்பயிற்சி, பசுந்தீவன உணவு, யானைகளின் ஆரோக்கியத்தைக் காக்க மருந்துகள் போன்றவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

வனப் பகுதியையொட்டி முகாம் அமைக்கப்பட்டுள்ளதால், காட்டு யானைகள் முகாமுக்குள் புகுந்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால் எங்கள் உயிருக்கும் பயிருக்கும் ஆபத்து இருக்கிறது. ஆகையால் இங்கு முகாம் நடத்தக் கூடாது என்று சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முகாமை முற்றுகையிட முயன்றார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீஸ்.